Monday, March 26, 2018

காற்றில் கரையாத நினைவுகள்: வீட்டைக் கட்டிப் பார்!

Published : 20 Mar 2018 09:55 IST


வெ.இறையன்பு:  THE HINDU TAMIL






ஓவியம்: இளஞ்செழியன் - ஓவியம்: இளஞ்செழியன்


சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்து கனவாகவும், ஏழை மக்களின் ஏக்கமாகவும் இருந்தது ஒரு காலம். சம்பளக்காரர்கள் வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கழித்த நிலை. சின்னச் சின்ன வீடுகள் ஒரே வளாகத்துக்குள் கட்டப்பட்டு பல்வேறு தரப்பினர் சொந்தமாக வாழ்ந்த சூழல் அன்று இருந்தது.

அன்று வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதே பெரிய சாதனை. குடியேற்றமில்லாத இடத்தில் வாங்கிய பிறகு, அது களவு போகாமல் இருக்க வாரம் ஒரு முறை சுற்றுலாப் போல பார்த்து வருவார்கள்.

அங்கு பெரிய கட்டிடம் எழும்பி நிற்பதைப் போன்ற கற்பனையோடு திரும்புவார்கள். நிலம் வாங்கியதும் தம் பிடித்து, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமிக்கத் தொடங்குவார்கள்.

சந்தோஷத்தின் வரைபடம்

வீட்டுக்கு வரைபடம் போடுவதே பெரிய அப்யாசம். பத்து பேரைக் கலந்தாலோசிப்பார்கள். சீட்டு போடுவார்கள். இருக்கும் தொகையை வைத்து கடக்கால் போடுவார்கள். வருங்கால வைப்பு நிதியையும், சீட்டுத் தொகையையும் கொண்டு மேலே கட்டத் தொடங்குவார்கள். அதற்குப் பிறகு நகைகள் அடகு. சிலருடைய நகைகள் கழுத்தில் இருந்ததைவிட கடையில் இருந்த நேரமே அதிகம்.

வீடு கட்டத் தொடங்கும் முன்பு குடிசை ஒன்றைப் போட்டு ஒருவரைக் குடும்பத்துடன் குடியமர்த்த வேண்டும். கட்டுமானத்துக்குத் தருவிக்கும் சாமான்கள் திருடு போகாமல் இருக்க அது அவசியம். முதலில் கிணறு தோண்ட வேண்டும். தண்ணீர் வந்துவிட்டால் பெரிய மகிழ்ச்சி.

வீடு தொடங்கியதும் வருவோர் போவோரெல்லாம் ஆளுக்கொரு யோசனை சொல்வார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனப்படும். பின்னால் தேவைப்படுமென ஒதுக்கி வைத்த பணமெல்லாம் வழித்தெடுக்கப்படும். பெண்கள் கடுகு டப்பாவிலும், மிளகு டப்பாவிலும் ஒளித்து வைத்தவை வெளியில் வரும்.

அன்று வீட்டில் திண்ணை இருந்தது

வீட்டைக் கட்டுவது மேஸ்திரி மட்டுமே. பொறியாளர் யாரும் அப்போது இல்லை. பாதியில் அதிகப் பணம் கேட்டு தகராறு செய்வார். சில நாள் வேலை நின்றால் வேதனை ஏற்படும். வீடு முடியும்போது மேஸ்திரி குடும்பமும் உறவில் ஒன்றாக ஆகிப்போகும்.

அந்தக் காலத்தில் வீட்டின் வெளியே திண்ணைகள் இருக்கும். படிக்கவும், எழுதவும், அழகாய் அமர்ந்து மழையைப் பார்க்கவும், சிறிது நேரம் படுத்து உறங்கவும் திண்ணைகள் இரண்டும் திண்டு திண்டாய் இருக்கும்.

எங்கள் வீட்டை அத்துவானக் காட்டில் கட்டினோம். மனை விலை அங்குதான் கட்டுபடியானது. புதிதான பகுதியில் வீடு கட்டினால் பாதை இருக்காது, வடிகால் இருக்காது, மின்சார வசதியும் இருக்காது.

ஊரில் இருக்கும் பூச்சிபட்டு எல்லாம் விளக்கு வெளிச்சத்துக்கு ஓடி வரும். சுதந்திரத்தைச் சுவைக்க நினைத்தவர்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருக்கலாமே என எண்ணத் தொடங்குவார்கள்.

அத்துவானக் காடும் ஒரு கூடும்

பாம்புகள் படையெடுக்கும். பல்லிகள் பெருக்கெடுக்கும். ஒவ்வொரு வசதிக்கும் நடந்து நடந்து கால் தேயும். அந்த இடத்தில் யார் வீடு கட்டச் சொன்னது என்று அத்தனை பேரும் கேட்டுத் தொலைப்பார்கள். அக்கம்பக்கத்தில் புதிய வீடு வராதா என்று தவம் இருப்போம். யாரேனும் வீடு கட்ட வந்தால் கட்டச் சொல்லி வற்புறுத்துவோம்.

காய்கறித் தோட்டம் போடப்படும். மரங்கள் நடப்படும். புதிதாக ஒவ்வொரு வீடு முளைக்கும்போதும் நம்பிக்கை முளைக்கும். குழந்தைகளுக்கோ விளையாட ஆள் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படும். அருகில் இருக்கும் காலி மனைகள் விளையாட்டுத் திடல்களாக மாறும். விறகுக் குச்சிகள் மட்டையாகும். ரப்பர் பந்து சீறிப் பாயும்.

மேலே சுழலும் காற்றுப் பூ

அரிக்கன் விளக்கில் படிப்பு நிகழும். ஆனாலும் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். மின்சாரம் வந்த பின்பு கவனம் சிதறும். இருந்தாலும் இஸ்திரி போட்ட சட்டையோடு பள்ளி செல்ல பரவசமடைவோம்.

குண்டு விளக்கு குழல் விளக்காக வசதிக்கேற்ப வளர்ச்சியடையும். மின்விசிறி மாட்டும்போது நந்தவனத்தையே வீட்டுக்குள் அழைத்து வந்ததைப்போல் ஆனந்தம் ஏற்படும். மின்விசிறிக்கு அடியில் யார் படுப்பது என்று குழந்தைகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும்.

40 வயது நிகழும்போது வீடுகட்டி முடித்தால் பெரிய சாதனை நிகழ்த்திய திருப்தி ஏற்படும்.

சொந்த வீடு என சொல்லிடத்தான் எத்தனை பெருமை! மண்ணில் பூத்த மல்லிகைக்குத்தான் எத்தனை மணம்! நிலத்தில் காய்த்த கத்தரிக்குத்தான் எத்தனை சுவை!

வீட்டை ஒட்டிய பள்ளி. பணியிடம் சார்ந்த நண்பர்கள். கூப்பிடு தூரத்தில் உறவுகள். சொர்க்கமே இல்லமாக மாறிய நினைவு. எத்தனையோ பல மாளிகைகள் அருகில் முளைத்தாலும் ஏக்கம் இல்லை. பொறாமை இல்லை. நம்மைவிட அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்ற எண்ணம்கூட இருந்தது இல்லை. நமக்கு வாய்த்தது நமக்குப் போதும்.

நேற்று மாதிரி இன்றில்லை

இன்று பணிக்குச் சேர்ந்ததும் வீடு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

வங்கிகள் வழங்கும் தாராளக் கடன். அலுவலகம் அளித்திடும் முன்பணம். சிலர் கட்டிய வீட்டோடு கட்டிக்கொள்ளும் மனைவி. பலருக்கு அவர்களே வாங்கும் அடுக்கக வீடு.

நிலத்தை அடிக்கடி பார்க்கும் அக்கறை தேவையில்லை. கதவையோ, ஜன்னலையோ தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. மெத்தப் படித்தவர்கள் கட்டும் கட்டிடங்கள். முகம் தெரியாத அவர்களிடம் நமக்கு ஒட்டோ, உறவோ இல்லை. தவணை தவறாமல் பணத்தைச் செலுத்தினால் உரிய நேரத்தில் வீட்டுச் சாவி நம் கைக்கு.

அங்கு மிதித்துச் செல்ல மண்ணும் இல்லை. நம்முடையது மட்டும் எனச் சொல்ல எந்த இடமும் இல்லை. கதவை வீட்டுக்குள் நுழைந்த உடனே சாத்த வேண்டும். இல்லாவிட்டால் பொருட்கள் களவு போகும். வீட்டுச் சத்தம் வெளியே போகும். அண்டை வீட்டோடு சண்டை நிகழும்.

நீ யாரோ? நான் யாரோ?

அருகில் இருப்பவர் யார் என நமக்கு முகமும் தெரியாது, முகவரியும் தெரியாது. நாமாகச் சென்று பேச முயன்றால் பெரும் ஏமாற்றமே அங்கு மிஞ்சும். தினமும் பார்த்தும் பேசாமடந்தையாக பலரும் இருப்பர். மின்தூக்கியில் அவர்களோடு செல்வதுகூடநெடும் பயணமாக நினைக்கத் தோன்றும்.

வீடே சிறையாக, கட்டிடமே கல்லறையாக, பாதி உயிரோடு மீதியைப் போக்க சுரத்தில்லாமல் இவற்றில் வாழ்பவர் உண்டு. பிறந்ததில் இருந்து மண்ணையே மிதிக்காமல் மண்ணுக்குள் செல்வதே அடுக்கக வாழ்க்கை. ஒவ்வொரு அறையிலும் கழிவறை உண்டு.

குளியலறைகள் நிறைய. ஆனால் குளிக்கத் தண்ணீரோ குறைவு. நேரம் பார்த்து தண்ணீரை நிரப்பும் ஒழுக்கக் கோட்பாடு. பகலிலும் வேண்டும் வெளிச்ச விளக்குகள். யார் கதவைத் தட்டினாலும் சரிபார்த்துத் திறக்கும் சங்கடங்கள். வளாகத்துக்குள் இருக்கும் வெற்றிடங்களில் மாலைவேளையில் பொழுதுபோகாமல் காற்று வாங்கக் காத்துக்கிடக்கும் பெரிசுகள். இந்த அடுக்ககங்களில் தனியாக இருக்கும் முதியவர் இறந்த விஷயமே தெரியாமல் போய்விடும் அபாயங்கள் உண்டு. பக்கத்து வீடு அண்டைக் கண்டமாக ஆகும் விபத்தில் இந்த விபரீதங்கள் சாத்தியம்.

இத்தனைக்கும் மீறி சென்னை போன்ற மாநரங்களில் வாடகைக்கு இருப்போருக்கு விதிக்கப்படுகிற நிபந்தனைகளில் இருந்து விடுதலை என்ற ஒரே நிம்மதி இவர்களுக்கு.

வீடு வாங்குவது இன்று சாதனையல்ல, நிகழ்வு. அன்றிருந்த மகிழ்ச்சியும், திருப்தியும் இன்று கட்டிய வீட்டை வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வாய்ப்பில்லை. நோகாமல் நோன்பு இன்று சாத்தியம். வலியில்லாததால் சுகமில்லாமல் போன வீடுகள் எப்படி இல்லமாகும்! அவை எவ்வாறு பிரபஞ்சத்தின் பிரதிநிதியாகும்?!

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...