Thursday, March 29, 2018

பேருந்து வேலைநிறுத்தம்: சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு எவ்வளவு இழப்பு? #VikatanRTI

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி   VIKATAN   28.03.2018




இந்தாண்டு ஜனவரி மாதம் புத்தாண்டுக்கு ஊருக்குச் சென்றுவிட்டு, பணிக்குத் திரும்பியவர்கள், ஜனவரி 4-ம் தேதி அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்குத் தான் தெரியும், இந்த வருடம் எவ்வளவு சிக்கலுடன் தொடங்கியது என்று. ஆம்...சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் எட்டு நாட்கள் நீடித்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பணியாளர்களுக்கு போதிய சலுகைகளைத் தராமல், பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியாமல் போக்குவரத்துக்கழகங்கள் சிக்கித் தவிக்க நேரிட்டது. சென்னை மண்டல போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.



போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த காலத்தின்போது, சென்னை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு எவ்வளவு ரூபாய் வருமானம் கிடைத்தது என்ற விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டது. அதில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்துக்கு முந்தைய நாளான 4-ம் தேதி வரையிலான காலத்தில் முறையே 2.46, 2.55, 2.55, 2.12 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கிய அடுத்த நாளே ஒரு நாள் வருமானம் 67.39 லட்சமாக குறைந்தது. அதேபோல் ஜனவரி 4-ம் தேதியன்று சராசரியாக 3,167 சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் 5-ம் தேதி அதுவும் குறைந்து 1,006 சேவைகளே இயக்கப்பட்டன.

வேலை நிறுத்த சமயத்தில் தற்காலிக பணியாளர்களை போக்குவரத்துக்கழகம் வேலைக்கு அமர்த்தியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 80 ஓட்டுநர்கள் மற்றும் 38 நடத்துநர்கள் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான ஊதியம் ஓட்டுநருக்கு தினமும் 436 ரூபாயும், நடத்துநருக்கு தினமும் 429 ரூபாயும் வழங்கப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தைப் பொறுத்தமட்டில் திங்கள் முதல் வெள்ளிவரை இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 3,439, வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே 3,150 மற்றும் 3,039 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதன்படி பார்த்தால் வாரம் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சராசரியாக 3,000 பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், வேலை நிறுத்த காலத்தில் சராசரியாக 1,300 பேருந்துகள் மட்டுமே இயங்கியுள்ளன. அதேபோல் தினமும் சராசரியாக 2 கோடியே 40 லட்சம் வருவாய் ஈட்டிவந்த போக்குவரத்துக்கழகங்கள், வேலை நிறுத்தம் நடைபெற்ற 7 நாட்களில் சராசரியாக 98 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளன. இதனால் ஏற்பட்ட வருமான இழப்பு எவ்வளவு என்ற கேள்விக்கு சென்னை மண்டலம் ஆண்டு வாரியாகத்தான் இழப்பு கணக்கிடப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் பெறப்பட்ட சராசரி வருமானங்களோடு ஒப்பிட்டாலே, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மட்டும் 7 கோடி ரூபாய் நஷ்டம் என்று தெரிய வந்துள்ளது.



மக்களைப் பொறுத்தவரையில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தனியார் கால் டாக்ஸிகள், பேருந்து வேலை நிறுத்தத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகபட்ச கட்டணத்தை வசூலித்துள்ளன. பொதுவாக 20 ரூபாயில் ஷேர் ஆட்டோக்களில் பயணிப்போர், வேறு வழியின்றி 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கொடுத்து செல்ல நேரிட்டது. ஜனவரி 2 முதல் 4-ம் தேதிவரை வாராந்திர கட்டணச் சலுகைக்கான பாஸ் வாங்கியவர்கள் சென்னையில் மட்டும் 39 பேர். அதன் மூலம் கிடைத்த வருமானம் 11,700 ரூபாய். 'பஸ்ஸே ஓடலை, ஆனா பாஸ் மட்டும் வைச்சு என்ன செய்யுறது' என்பதுதான் அவர்களின் வேதனை.

இதே கேள்விகளை சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்திடமும் ஆர்டிஐ மூலம் கேட்டோம். அதில், அவர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஏழு நாட்களில் தோராயமாக 35.65 சதவிகித வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், ஆண்டு இறுதியில்தான் வருவாய் இழப்பைக் கணக்கிட முடியும் என்று கூறும்போது, சேலம் மண்டல போக்குவரத்துக்கழகம் மட்டும் வருவாய் இழப்பு பற்றி தெரிவிப்பது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சென்னை மணடலத்துக்கு மட்டுமே ஒரு வாரத்தில் 7 கோடி ரூபாய் நஷ்டம் என்றால், மாநிலம் முழுவதும் உள்ள 6 மண்டலங்களையும் சேர்த்தால் எவ்வளவு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்? மக்களும் பாதிப்புக்குள்ளாகி, போக்குவரத்துக்கழகங்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அதனைத் தொடர்ந்து, பேருந்து கட்டண உயர்வு என்ற அறிவிப்பால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். டிக்கெட் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வருவாய் பெறும் போக்குவரத்துக் கழகங்கள், இப்போது நாளொன்றுக்கு குறைந்தது 5 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும்.

எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் மட்டுமே சிக்கல் என்று நினைத்தால், போக்குவரத்துக்கழகங்களின் வருவாயிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றின் ஆண்டு வருவாயில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...