கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரிபுரோக்கர் வீட்டில் ஆவண புதையல்
dinamalar 13.09.3018
கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கைது :
இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.
மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு
இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆவண புதையல் :
மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.
ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.
செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த
புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சசிகலா குடும்ப ஜோதிடர் :
செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.
வாரிசு வேலையில் வந்தவர் :
கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர் -