Thursday, September 13, 2018

மாநில செய்திகள்

சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த ‘மனிதநேய விருது’




சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருது பிலிப்பைன்சில் நடந்த மாநாட்டில் வழங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:45 AM

சென்னை,

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பல் டாக்டர்களை கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வேறு கூட்டங்களை நடத்தி, பல் மருத்துவ கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான செயல்களை ஒருங்கிணைத்தும், சமூகத்துக்கு சேவை செய்யும் பல் டாக்டர்களை கவுரவித்தும் வருகிறது.

ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் நடத்திய மாநாட்டில் சென்னையை சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் திறமையை அறிந்த பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் தங்கள் நாட்டுக்கும் வந்து விரிவுரையாற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டு பல் மற்றும் முகச்சீரமைப்பு துறைகளில் பல் டாக்டர்களுக்கும், பல் மருத்துவ மாணவர்களுக்கும் எஸ்.எம்.பாலாஜி விரிவுரையாற்றியுள்ளார். மேலும் சிக்கலான முகக்குறைபாடுகளை உடைய சிறுவர்களை கடந்த 2010-ம் ஆண்டு முதல் எஸ்.எம்.பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காகவும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பி வருகிறது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பும் சிறுவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதனால் எஸ்.எம்.பாலாஜி இலவசமாக அந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். அந்தவகையில் எஸ்.எம்.பாலாஜியின் சேவை மனப்பான்மையினால் ஏராளமான ஏழை பாகிஸ்தான் நாட்டு சிறுவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

எஸ்.எம்.பாலாஜியின் தன்னிகரற்ற மனிதநேய சேவையை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் கருதியது. இந்தநிலையில் ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் சார்பில் 40-வது சர்வதேச மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் சார்பில் பாகிஸ்தானில் மிக உயர்ந்த விருதான மனிதநேய விருது எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மகமூத் ஷா, துணைத்தலைவர் டாக்டர் ஆசிப் அரெய்ன் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் நாசிர் அலி கான் ஆகியோர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கி கவுரவித்தனர்.

பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருதினை பெற்றுள்ள முதலாவது இந்திய டாக்டர் என்ற பெருமையையும் எஸ்.எம்.பாலாஜி தட்டிச்சென்றுள்ளார். மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பல் டாக்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024