Thursday, September 13, 2018


20 வருடத்துக்கு முன்பு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? பெருமூச்செல்லாம் கூடாது

By DIN | Published on : 12th September 2018 11:05 AM |



சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.05க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள் தினந்தோறும் பெட்ரோல் நிரப்புபவர்களின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கவே செய்கிறது.

இதற்கு எந்த மாற்று வழியும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் பங்குகள் சொல்லும் விலையிலேயே பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு என்றுதான் இதற்கு விடிவுகாலம் பிறக்குமோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டு செல்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

வாகனத்தை விட்டுவிட்ட பேருந்தில் செல்லலாம் என்றால், பேருந்துக் கட்டணம் ஏற்கனவே விண்ணை முட்டிக்கொண்டு நிற்கிறது. பேருந்து கட்டணம் எகிறிவிட்டதால், அதனை தாங்க முடியாத பேருந்து பயணிகள் ரயில் பயணத்துக்கு மாறி, அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுப் போக்குவரத்துக்கும் மாற முடியாமல், சொந்த வாகனத்துக்கும் பெட்ரோல் நிரப்ப முடியாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்கள் ஏராளம்.

சரி.. இன்றைய விலை, நேற்றைய விலை எல்லாம் தினமும் தெரிந்த விஷயமாகிவிட்டது.

நாம் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறோம் என்று ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா? அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1998ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு கொடுத்திருப்போம், கொடுத்திருக்கிறோம் என்பது நினைவிருக்கிறதா? பலருக்கும் நிச்சயம் நினைவிருக்கும். அப்போது வாகனத்தை இயக்காத இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.23.94 மட்டுமே. 20 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 238 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பெட்ரோல் விலை 12% உயர்ந்துள்ளது.

அதே சமயம், 10 ஆண்டுகளுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32.82 ஆகவும், அதே ஆண்டு டிசம்பரில் ரூ.34.98 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024