Thursday, September 13, 2018


இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் ஜேட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

By DIN | Published on : 13th September 2018 01:50 AM |

dinamani 13.09.2018

இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்தேன்' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா (62), பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை லண்டன் நீதிமன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராவதற்காக வந்த விஜய் மல்லையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக அவரிடம் பலமுறை தெரிவித்தேன். இதுதான் உண்மை.
வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான விரிவான திட்டத்தை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளேன். அனைத்து கடன்களையும் அடைப்பேன். என்னிடம் இருந்து கடன்தொகையை வசூலிக்க வேண்டும் என்பதே எனக்கு எதிரான வழக்கின் முக்கிய நோக்கம்.

நான் கடன்தொகையை திருப்பி அளிக்க முயற்சிப்பதை வங்கிகள் ஏன் ஊக்குவிக்க மறுக்கின்றன? இந்த கேள்வியை வங்கிகளிடம் ஊடகங்கள் எழுப்ப வேண்டும். அரசியல் கட்சிகளால் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்.
என்னை நாடு கடத்தக் கோரும் வழக்கில் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு சாதகமான உத்தரவு வரும் என நம்புகிறேன் என்றார் மல்லையா.

மல்லையா கூறுவது உண்மையல்ல


தன்னை சந்தித்துப் பேசியதாக விஜய் மல்லையா கூறுவது உண்மையல்ல' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மல்லையாவை சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. நேரம் ஒதுக்கியிருந்தால்தானே, அவர் என்னை சந்தித்தாரா? இல்லையா? என்ற கேள்வி எழும். விஜய் மல்லையா, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர் எப்போதாவதுதான் அவைக்கு வருவார். ஒருமுறை அவையிலிருந்து நான் எனது அறைக்கு சென்றபோது, விறுவிறுவென வந்து என்னுடன் சேர்ந்து நடந்தார். அப்போது, வங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன்' என்று தெரிவித்தார். ஆனால், நீங்கள் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை; வங்கிகளிடம்தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும்' என்று கூறிவிட்டேன். அப்போது, அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் நான் பெறவில்லை. இந்த ஒரு வரி உரையாடல்தான் எங்களிடையே நடைபெற்றது. அதுவும், எம்.பி. என்ற உரிமையை அவர் தவறாக பயன்படுத்தியதால் நடைபெற்ற உரையாடல் என்றார் ஜேட்லி.

இதனிடையே, ஜேட்லியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறுகையில், மத்திய நிதியமைச்சருடனான எனது சந்திப்பு, அதிகாரப்பூர்வமற்றது; தற்செயலாக நிகழ்ந்தது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க வேண்டாம்' என்றார்.

மல்லையாவை தப்பவிட்டது ஏன்?

இந்தியாவைவிட்டு வெளியேற விஜய் மல்லையாவை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:

கடன் முறைகேடுகளில் தொடர்புடைய தொழிலதிபர்கள் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டைவிட்டு தப்பியதற்கு மத்திய பாஜக அரசு உடந்தையாக இருந்தது என்ற எங்களது குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

விஜய் மல்லையா-ஜேட்லி இடையிலான சந்திப்பில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மல்லையாவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? என்ற கேள்விக்கான பதிலையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அபிஷேக் சிங்வி.

நாடு கடத்தக் கோரும் வழக்கில் டிச.10-இல் தீர்ப்பு
மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இதனை நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, மல்லையாவுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் தாக்கல் செய்த ஆதாரங்கள் சிறிதும் அடிப்படையில்லாதவை' என்று அவரது தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். மேலும், மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறை அறை தொடர்பாக அதிருப்தி தெரிவித்த வழக்குரைஞர்கள், சுதந்திரமான குழு மூலம் அந்த அறையில் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரினர்.

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மல்லையா, அந்த சிறை அறையில் சூரிய ஒளியே இருக்காது என்றும், சுகாதாரக் குறைவாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், சிறை வளாகம் சுகாதாரமாக இருக்கும்; மல்லையாவுக்கு தனி கழிவறை, சலவை வசதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள சிறை அறையின் விடியோ பதிவை தாக்கல் செய்யுமாறு இந்திய அதிகாரிகளுக்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. அதன்படி, மும்பை சிறை அறையின் விடியோவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024