Wednesday, September 12, 2018

கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை' 
 
dinamalar 12.09.2018

புதுடில்லி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர், தானாக முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு மீது, கவர்னர் முடிவெடுக்க வேண்டும்' என, சமீபத்தில் கூறியது.

இதைத் தொடர்ந்து, 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது தொடர்பாக, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை, முன்னதாகவே விடுவிப்பது அல்லது தண்டனையைக் குறைப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரித்துள்ளதால், மத்திய அரசின் கருத்தை, கவர்னர் கேட்க வேண்டும். ராஜிவ் கொலைக்கான சதி திட்டம் குறித்து, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

'இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளதால், இந்த வழக்கு தற்போதும்  விசாரணையில் உள்ளது' என, அந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக கவர்னர் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசின் ஆலோசனைகளை பெற வேண்டிய கட்டாயம், அவருக்கு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024