ஜெயலலிதா எனும் ஆளுமை Published : 23 Feb 2019 21:23 IST
மு.அப்துல் முத்தலீஃப் ஜெயலலிதா
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய பதிவு.
''எனக்கு உண்மையான அன்பு கிடைத்ததில்லை, நிபந்தனையற்ற அன்பை நான் என்றுமே பெற்றதில்லை''... தமிழகத்தின் உச்சத்தில் இருந்த ஒருவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள் இவை. அவர், தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் பிப்ரவரி 24-ம் தேதி வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளின் திடீர் மறைவு தமிழகத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நடப்பு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரைவிட அதிமுகவை அதிக தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்தவர், அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றியவர், இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை மாற்றியவர் என்கிற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.
எம்ஜிஆருக்குப் பின் அதிமுக துண்டு துண்டாக உடைந்துவிடும் என்ற கணக்கை உடைத்து, ஒன்றுபடுத்தி தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தியவர் ஜெயலலிதா.
1948-ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதானபோது அவரது தந்தை இறந்தார். எனவே, குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்கு ஆளான தாய் சந்தியா சென்னைக்குச் சென்று விட, தாய் தந்தை அன்பு இல்லாமல் வளரும் சூழ்நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.
அதன் பின்னர் தனது பத்தாவது வயதில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் சேர்க்கப்பட்டு அங்கு படித்தார். படிப்பில் சூட்டிகையான ஜெயலலிதா பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்தார்.
பி.யூ.சி. எனும் கல்லூரி நுழைவு ஒரே ஒரு நாள் மட்டுமே வாய்த்தது அவருக்கு. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காலடி வைத்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவின் கல்வி அத்துடன் முடிந்து போனது. ஆனால் அதைத்தாண்டி அவரது புத்தக வாசிப்பு பெரிய அளவில் விரிந்து பரந்தது.
தானொரு வழக்கறிஞர் ஆக வேண்டும், பேராசிரியர் ஆகவேண்டும் என்ற கனவில் இருந்த ஜெயலலிதா அவரது விருப்பம் இல்லாமலே தனது பதினைந்தாவது வயதில் திரைப்படத் துறைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் 127 படங்களில் நடித்த ஜெயலலிதா 1980-கள் வரை எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா என பல மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.
எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயர் பெற்றார். நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் அதிக அளவில் புத்தகங்கள் படிப்பதன் மூலம் தனது அறிவை விசாலமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. 15 வயது வரை தாயின் அன்புக்காக ஏங்கிய ஜெயலலிதா, 15 வயதிற்குப் பிறகு நடிகையாக மாறியதும் பிஸியாகிவிட்டார்.
இடையில் அவரது தாயாரும் மறைந்துவிட, ஜெயலலிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரத்தில் மீண்டும் எம்ஜிஆரின் நட்பு கிடைக்க, அரசியலுக்கு இழுக்கப்பட்டு அதிமுகவில் இணைந்தார். 1982-ம் ஆண்டு அதிமுக உறுப்பினராக இருந்த ஜெயலலிதா 1983-ம் ஆண்டு அதன் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
சத்துணவுத் திட்டத்தைக் கவனிக்கும் முதல் பொறுப்பு கிடைக்க, அதைச் சிறப்பாக நடத்திக் காட்டினார் ஜெயலலிதா. 1984-ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டார். ஜெயலலிதாவின் மொழியாளுமை சிறப்பான ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர். அது அவருக்கு அரசியலில் சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது.
ஜெயலலிதாவின் தொடர் புத்தக வாசிப்பு, அறிவுத்தேடல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றால் அரசியலில் எளிதாகக் காலூன்ற முடிந்தது. எம்ஜிஆர், 1984-ம் ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்ல, அவர் தமிழகம் திரும்ப மாட்டார் என்று பிரச்சாரம் வெளிப்படையாக நடந்தது. அதற்கு எதிராக களமிறங்கி வேலை செய்தார் ஜெயலலிதா.
1984-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காகச் சூறாவளி பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக அமைந்தார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பிரச்சாரம் ஜெயலலிதாவிற்கு ஒரு அரசியல் பாடமாக அமைந்தது. அதன் பின்னர் அதிமுகவில் ஏற்றத்தாழ்வுகளை ஜெயலலிதா சந்தித்து வந்தாலும் பொதுமக்களிடையே எம்ஜிஆருக்கு அடுத்து மிகப் பெரும் செல்வாக்கு கொண்டவர் ஜெயலலிதா தான் என்பது அழுத்தமாகப் பதிவானது.
சக எதிர்க்கட்சித்தலைவர், திமுக தலைவர் கருணாநிதியைப் போல மிகச்சிறந்த மேடைப் பேச்சாளராக ஜெயலலிதா இல்லாவிட்டாலும், அவரது ஆவேசமான பேச்சு தமிழக மக்களை ஈர்த்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஜெயலலிதா அவரது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் தலைமைக்குப் போராட, அதிமுக இரண்டாக பிளவுபட்டது.
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்ட நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட சேவல் சின்னம் மூலம் 1989-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 27 இடங்களைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.
மற்றொரு அணியான ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் அதிமுகவை வழிநடத்திச் செல்ல ஜெயலலிதா தகுதியானவர் என்பது உறுதியானது. மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் அதிமுகவை வழி நடத்தியது ஒரு வகை என்றால் ஜெயலலிதா வழி நடத்தியது முற்றிலும் மாறுபட்ட வகை ஆகும். கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் ஜெயலலிதா நடத்தினார் ‘காலையில் மந்திரி, மாலையில் எந்திரி’ என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் அளவிற்கு கட்சியில் ஒரே ஒருவர், அதிகாரம் மிக்கவர் ஜெயலலிதா மட்டுமே என்கிற நிலையை கட்சிக்குள் கொண்டு வந்தார்.
கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா சொன்னது மட்டுமே நடந்தது. இதனால் அதிமுகவில் அடுத்தகட்டத் தலைவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாத அளவிற்கு ஒரு நடைமுறை இருந்தது. தவறு செய்தவர் அல்லது தவறு செய்ததாகக் கருதப்பட்டவர் என யாராய் இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.இது ஒருவகையில் ஜெயலலிதாவிற்கு பலவீனமாகவும் மற்றொரு புறம் பலமாகவும் அமைந்தது.
அரசியலில் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மிகப்பெரும் படுதோல்வியைச் சந்தித்தார். வழக்கில் சிக்கினார். அவருடன் இருந்தவர்கள் விலகி ஓடினர். ஆனாலும் மீண்டெழுந்து 2001-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் தன்னம்பிக்கை கொண்ட ஜெயலலிதா.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஜெயலலிதாவின் அரசியல் செயல்பாடு மாற்றத்திற்குட்பட்டு வந்தது. 1991 முதல் 1996 வரை இருந்த ஜெயலலிதாவின் அணுகுமுறையும் 2001 முதல் 2006 வரை இருந்த அணுகுமுறையும் 2011ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இருந்த அணுகுமுறையும் முற்றிலும் மாறுபட்டது .
தனது ஆரம்பகால அரசியலில் மிகுந்த வேகமும், பழிவாங்கும் எண்ணமும் கொண்டிருந்தார் ஜெயலலிதா. பின்னர் நிதானப்பட்டு, சாதுரியம் மிக்க ஒரு தலைவராக பரிணமளித்தார். மாற்றத் தடைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களைக் கொண்டு வந்த ஜெயலலிதா பின்னர் அதை விலக்கிக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் குறித்த தனது பார்வையைப் பின்னர் அவர் மாற்றிக் கொண்டார். இதுபோன்ற தனது கடந்தகால நடைமுறைகளை மாற்றி அடுத்த கட்டத்திற்கு மாறும் பரிணாமத்தை பெற்றதால் ஜெயலலிதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஜெயலலிதாவின் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் வைத்தாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பெண்கள் நலன் சார்ந்த விஷயங்கள், கல்வி, மருத்துவம் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றில் அவர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாக அமைந்தது.
சாதாரண கிராமப்புற மக்களுக்காக, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் பெரிதாகப் பேசப்பட்டது. கோயில்களில் அன்னதானம், அம்மா உணவகம், விலையில்லா ஆடு மாடு வழங்கும் திட்டம், தாலிக்குத் தங்கம், பெண் போலீஸ் போன்ற திட்டங்கள் அவருக்குச் சாதாரண மக்களிடையே பெரிய வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தந்தது. எதிர்க்கட்சியினரும் அவரை ஒரு தன்னம்பிக்கை கொண்ட பலம் கொண்ட பெண்மணி என ஒப்புக்கொள்ளும் நிலை வந்தது.
மாநில நலன் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதாவின் விட்டுக் கொடுக்காத தன்மை எதிர்க்கட்சிகளாலும் பாராட்டப்பட்டது. தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியுடன் எதிர்த்து நின்றார் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா.
2014-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய நேரத்தில் மோடியின் நண்பராக இருந்தாலும், தமிழகத்தில் 'மோடி அல்ல இந்த லேடி தான்' என்று பாஜகவை அணியில் சேர்க்காமல் தனித்து நின்று 40 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றி, வடக்கை தெற்கு நோக்கி திரும்ப வைத்தார் ஜெயலலிதா.
அதன் பின்னரும் மோடியுடன் நட்பு பாராட்டினாலும், தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள் என்று கருதிய திட்டங்களில் ஒருபோதும் ஜெயலலிதா சமரசம் செய்துகொண்டதில்லை. இது அவரது தனிச்சிறப்பாகும்.
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களில் கடைசி வரை அனுமதி அளிக்காமல் எதிர்த்து நின்ற ஜெயலலிதா இதற்காக அவரைச் சந்திக்க வந்த மத்திய அமைச்சர்களையும் சந்திக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். ஆனால் அவரது மறைவுக்குப் பின் மேற்கண்ட திட்டங்கள் தமிழக அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சாணக்கியர் என அழைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு எம்ஜிஆர் சவாலாக விளங்கினார். ஆனால் ஜெயலலிதா பெரும் தடையாக விளங்கினார் என்றால் மிகையாகாது. திமுக எதிர்ப்பு என்பதில் எள் அளவும் குறையாமல் கட்சியைக் கொண்டு சென்றார் ஜெயலலிதா. இதன்மூலம் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
திமுகவை வீழ்த்த, ஆரம்ப காலத்தில் சிறிய கட்சிகளை கூட்டணி வைத்து அவர்களை வளர்த்து விடவும் அவர் தயங்கியதில்லை. ஒரு கட்டத்தில் கூட்டணி அரசியல் என்கிற தேர்தல் சிந்தனையை மாற்றி, கூட்டணி சேரா, பிரித்தாளும் அரசியல் என்கிற புதிய உத்தியைக் கையாண்ட ஜெயலலிதா அதில் வெற்றியும் பெற்றார்.
எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார். 2014 மற்றும் 2016-ம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் இந்த நடைமுறையின் மூலமாகவே ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
நிர்வாகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு இணையானவர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தனக்கு சரியெனப் பட்டதை தனது கவனத்திற்கு சரியான விஷயம் கொண்டு வரப்பட்டால் உடனடியாக அது நிறைவேற்றப்பட்டுவிடும். இது ஜெயலலிதாவின் பாலிசி.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா இருந்தால், தலைமை ஆசிரியர் இருக்கும் வகுப்பறை போன்று அமைதியாக இருக்கும். அமைச்சர்கள் உறுப்பினர்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை கவனிப்பார். சரியில்லை என்றால் சட்டப்பேர்வை செயலாளரைப் பார்ப்பார். அடுத்த கணம் அவர்முன் கோப்பு இருக்கும் அடுக்கடுக்கான வாதத்தை வைப்பார்.
சட்டப்பேரவையில் அவரது வாதத்தை திமுகவினர் எதிர்கொள்ள முடியாமல் மறுநாள் கருணாநிதி அதற்கு தனது அறிக்கை மூலம் பதிலளித்த நிகழ்வு உண்டு. அதே நேரம் பெண் எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவர்கள் பேச்சைக் கவனித்து கோரிக்கையை நிறைவேற்றியது உண்டு. அதை பல முறை சாதித்துக் காட்டியவர் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி. அவர் தனது பேச்சாற்றலால் ஜெயலலிதாவைக் கவர்ந்து பல திட்டங்களுக்கு அனுமதி பெற்றார்.
அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட, தன்னந்தனியாகச் சென்று, அப்போதைய திமுக அமைச்சர்களின் குறுக்கீடுகளையும் எதிர்கொண்டு 45 நிமிடம் பேசியது ஜெயலலிதாவின் வாதத்திறமைக்கு ஒரு சான்று.
திமுக போலல்லாமல் அதிகமான இளையவர்களை கட்சிக்குள் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் கொண்டுவந்தது ஜெயலலிதாவின் சிறப்பு. இது அதிமுகவை உயிர்ப்புடன் இருக்க வைத்தது.
எதிர்க்கட்சி எம்.பி. கனிமொழி, ''உறுதிக்குப் பெயர் பெற்றவர் ஜெயலலிதா. அவரிடம் பிடித்தது அவரது துணிச்சல்'' என மனம் திறந்து பாராட்டும் அளவுக்கு அவர் இருந்தார்.
ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாதது தமிழக அரசியலில் பெரிதாக வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் இல்லாமல் அதிமுக சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. இதிலும் ஆயிரம் விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது.
எம்ஜிஆருக்குப் பின் ஜெயலலிதா எனும் ஆளுமை வலுவாக இருந்ததால் கட்சி மீண்டும் ஒரே தலைமையின்கீழ் வந்தது. தற்போது அது சாத்தியமா என்பதை வருங்கால அரசியல் சூழல் நிரூபிக்கும். அது ஜெயலலிதாவின் பங்கையும் பேசும்.