Saturday, February 23, 2019


தாம்பூலம் போய், தாம்பாளம்...

By சி.வ.சு. ஜெகஜோதி | Published on : 22nd February 2019 01:35 AM |

கடந்த மாதம் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். வந்தவர்கள் அனைவருக்கும் சிறு சில்வர் தாம்பாளம் ஒன்றை கொடுத்தார்கள். மணமக்களின் ஊரும், பெயரும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. என் அருகிலிருந்த சித்த மருத்துவர் அதைப் படித்துப் பார்த்து விட்டு லேசாக புன்னகைத்தார். என்ன சார், சிரிக்கிறீங்க என்று கேட்டபோது முன்பெல்லாம் தாம்பூலம் கொடுத்தார்கள், இப்போது தாம்பாளம் தருகிறார்கள் என்றார்.
திருமண விருந்து முடித்து வரும் போது விருந்தினர்களுக்கு ஏன் தாம்பூலம் கொடுத்தார்கள் தெரியுமா என்று அவரே பின் தொடர்ந்தார்.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், சுக்கு, காசுக்கட்டி-இது அத்தனையும் சேர்ந்ததுதான் தாம்பூலம். இவை ஒவ்வொன்றுக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன. வெற்றிலையின் உரைப்பு கபத்தையும், பாக்கின் துவர்ப்பு பித்தத்தையும், சுண்ணாம்பின் காரம் வாதத்தையும் போக்கக் கூடியது. இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்தச் சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறது. இதயத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தருகிறது. தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிப்பத்திரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் பற்களையும் உறுதிப்படுத்தும்.

திருமண விருந்துகளில் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உருவாகி உடல் நலத்தையும் கெடுக்கும். உணவு எளிதில் ஜீரணிக்கவும், உமிழ் நீர் சுரப்பியைத் தூண்டி, ஒருவித உற்சாக உணர்வைத் தரவுமே அந்தக் காலத்தில் நம் முன்னோர் தாம்பூலம் தரும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் உறவினர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பழக்கம் இருந்து வந்துள்ளது.

வெற்றிலையில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, சுண்ணாம்பு தடவி, சிறிதளவு கொட்டை பாக்கு சேர்த்து, அவற்றோடு சம அளவில் ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், கொஞ்சமாக தேங்காய்ப்பூ ஆகியவற்றைக் கலந்து, நீளவாட்டில் மடித்து, பின்பு அகலவாட்டில் சுருட்டி, வாயில் போட்டு மெல்லுவதைத்தான் தாம்பூலம் தரித்தல் என்றும் அவர் கூறினார். அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை எனப் புரிந்துகொள்ள முடிந்தது. வெற்றிலைக்கு பாலுணர்வையும், நரம்புகளையும் வலுவேற்றும் சக்தி இருப்பதால்தான் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது தாம்பூலம் தரித்தலும் ஒரு சடங்காகவே நடந்து வந்தது.

நிச்சயதார்த்தம் என்பதே தாம்பூலத்தட்டு மாற்றி திருமணத்தை உறுதி செய்து கொள்வதாகவே இன்றும் இருந்து வரும் நடைமுறையாகும். எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த சாமிக்கு வழிபாடு செய்தாலும் வெற்றிலை, பாக்கு வைக்க மறப்பதில்லை. வெற்றிலை பாக்குடன்கூடிய தாம்பூலம் ஒரு மங்கலப் பொருள். குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் பலரும் தாம்பூலம் மடித்துக் கொடுப்பதற்காகவே ஊழியர்களை நியமித்திருந்தார்கள். வசதி படைத்தவர்களில் சிலரது இல்லத் திருமணங்களில் பீடா கொடுக்கிறார்கள். கொல்கத்தா வெற்றிலை, குல்கந்து, லவங்கம், ஏலக்காய் என ஏகப்படட சேர்மானங்கள் இருக்கும். இனிப்பாகவும் இருக்கும். தாம்பூலத்துக்கும், பீடாவுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

முன்பெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் பழக்கம் இருந்தது. இப்போது திருமணப் பத்திரிகைகள் தாய் மாமன்களுக்கே தபாலில்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. தாமதமாக வருவோரை என்னப்பா, உனக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாத்தான் வருவியோ? என்று உரிமையுடன் கடிந்து கொள்வதையும் பார்க்க முடிந்தது. வெத்தலை போட்டா,கோழி முட்டும் என்று சிறார்களிடம் பெரியவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.வெற்றிலையில் சுண்ணாம்பைச் சேர்க்கும் போது கூடுதலாகச் சேர்த்து விட்டால் நாக்கு பொத்துப் போகும். சரியான விகிதத்தில் சிறுவர்களுக்கு சுண்ணாம்பு சேர்க்கத் தெரியாது என்பதற்காகவே அப்படிச் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்.
முன்பெல்லாம் எந்த வீடாக இருந்தாலும் வெற்றிலைப் பெட்டி அல்லது வெற்றிலைத் தாம்பாளம், பாக்கு வெட்டி, சுண்ணாம்பு டப்பி, வெற்றிலை இடிக்கும் சிற்றுரல் இவையனைத்தும் இருந்தன. தாத்தாக்கள், பாட்டிகள் மதியக் கஞ்சி குடிக்காமல் போனாலும் வெற்றிலை போடாமல் இருக்கவே மாட்டார்கள். எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டியும் டிக்கெட் எடுக்காமல் கூடவே வரும். வயதான மூதாட்டிகள் இடுப்பில் சொருகியிருக்கும் சுருக்குப் பையை வெத்தலைப்பை என்பார்கள். உடலில் சுருக்கங்கள் அதிகமான மூதாட்டிகளைத்தான் இன்று பார்க்க முடிகிறதே தவிர, சுருக்குப் பைகளை பார்க்க முடியவில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு வெற்றிலைப் பெட்டி என்றால் என்னவென்றே தெரியாத நிலையே உள்ளது.

வேலைப்பாடுகள் நிறைந்த பித்தளைப் பாக்குவெட்டிகளும், சுண்ணாம்பு கறண்டவங்களும் இன்று காட்சிப் பொருளாகிப் போய் விட்டன. எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டிகள் நம்முடன் பயணிப்பதற்குப் பதிலாக, இப்போது மாத்திரைப் பெட்டிகளே உடன் வருகின்றன. மாத்திரை டப்பாக்கள் இல்லாமல் எந்த வெளியூருக்கும் போக முடிவதில்லை. நோய்களுக்காக மட்டுமில்லாமல் விரக்தி, வெறுப்பு, கோபம், நிறைவேறாத ஆசைகள், கசந்த நினைவுகள் என்று கணக்கில்லாத மனக் காயங்களுக்கும் சேர்த்தே சாப்பிட மாத்திரைகள் அவசியமாகி விட்டது.
பிளாஸ்டிக் பைகளை தூக்கி வீசிவிட்டு, துணிப் பைகளை தூக்கிச் செல்வதே கெளரவம் என்ற மாற்றம் மலர்ந்திருப்பதைப் போல மாத்திரைப் பெட்டிகளை தூக்கி வீசி விட்டு வெற்றிலைப் பெட்டிகளை தூக்கும் காலம் வரட்டும். டும்,டும்,டும்... தாம்பாளம் போய் விட்டு, தாம்பூலம் வரட்டும் டும்,டும்,டும்... என முரசு கொட்டுவோம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024