Thursday, February 28, 2019

ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை

Added : பிப் 27, 2019 21:31


புதுடில்லி, ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதும், அதை, 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய முதல் பட்டியல், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை, பயணியர் பார்க்க முடியாது.ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியர், தங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டால், அதுபற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில் ஒட்டப்படுவது வழக்கம். அதில் பயணியர் பற்றிய விபரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்

.இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டவுடனேயே, அதை ஆன்லைனில் வெளியிட, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது பற்றி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அதை, http://www.irctc.co.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் இரண்டுமே, தயாரானதுமே, இணையதளத்தில் வெளியிடப்படும்.இதன் மூலம், பயணியர், தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதையும், ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய விபரங்களையும் உடன் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை, மொபைலில் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும், வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வெளிப்படையான நடவடிக்கை மூலம், முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், எண் வரிசைப்படி, ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். அதில், முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் ஒரு நிறத்திலும், காலியாக உள்ள இருக்கைகள், வேறு நிறத்திலும் காட்டப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024