Thursday, February 28, 2019

இ.எம்.ஐ - இ.எம்.ஐ - இ.எம்.ஐ : கனவெல்லாம் இ.எம்.ஐ!

Published : 26 Feb 2019 15:06 IST

ஜெமினி தனா

 


’கடன்’ என்பது கவுரவக் குறைச்சல் எனப் பார்க்கப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருப்பவர்கள்தான் நாம்! கடன் வாங்கிக் கழித்தல் என்கிற பாடங்களெல்லாம் கடந்த இருபது வருடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடன் வாங்கியாவது வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்பதே இப்போதைய தலைமுறையினரின் அசால்ட் நிலைப்பாடு என்பதை மறுக்க முடியாது. இதைக் கடன் என்று சொன்னால் இப்போது புரியாது. கடனின் சர்க்கரை தடவிய இன்னொரு பெயர்... இ.எம்.ஐ.

நம் அப்பாக்களும் தாத்தாக்களும் மாமாக்களும் சித்தப்பாக்களும் கூட கடன் வாங்கினார்கள்தான். படிப்புக்காக வாங்கினார்கள். தொழில் விருத்திக்காக வாங்கினார்கள். நோயுற்ற வேளையில் வாங்கினார்கள். ஆனால், இப்போது, அப்பா தாத்தாக்கள் எந்த விஷயத்துக்குக் கடன் வாங்கினார்களோ அதையெல்லாம் தாண்டி கடனை வாங்குவதுதான் சூழல்... மனோநிலை!

சம்பளம் கவரில் கொடுத்த காலம் போச்சு. இன்றைக்கு அக்கவுண்ட்டில்தான் சம்பளம். ஏடிஎம் மெஷின் தான் கேஷியர். மேலும் கார்டைத் தேய்த்தால், பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அக்கவுண்ட், ஆப், செல்போன்... யாருக்கு பணம் போடவேண்டுமோ போட்டுவிடலாம். ஆக, பழசையும், பணத்தையும் எண்ணிப் பார்ப்பதில்லை.

இந்த நிலைதான் இ.எம்.ஐ.யிலும். மிக்ஸி, குக்கர் வாங்குவதற்கு சுலபத் தவணைத் திட்டம் இருந்தது அந்தக் காலத்தில். இன்றைக்கு ஆயிரக்கணக்கான விலையில் ப்ரிட்ஜ் போன்ற பொருட்கள், பல்லாயிரக்கணக்கான டூவீலர்கள், ஏசி முதலான விஷயங்கள், பல லட்சக்கணக்கிலான கார்கள் என எல்லாவற்றுக்குமே இஎம்ஐ வந்துவிட்டது.

முன்பெல்லாம் ஒருவரிடம் கடன் வாங்கக் காத்துக் கிடக்கணும். வங்கியில் கடன் வாங்க, நடையாய் நடக்கணும். ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த ஏழாம் நாள், புதிய வங்கியில், புதிய கணக்கு. அலுவலகமே ஏற்பாடு செய்யும். ஆபீஸுக்கே வருவார்கள். அடுத்து, பதினைந்தாம் நாள், செக்புக், கார்டு முதலானவை வீட்டுக்கே வந்துவிடும். அடுத்த பத்தாம்நாள் சம்பளம் அந்த அக்கவுண்ட்டில் கிரெடிட்டாகும். அடுத்த நாள் முதல், சம்பள விஷயங்கள் தெரிந்துகொண்ட நிறுவனங்கள், ‘இந்த லோன் தர்றோம், அந்த லோன் தர்றோம்’ என்று போன் மேல் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி, வைக்காத வங்கி, பெயரே வாயில் நுழையாத வங்கி என்று கடன் தருவதற்கு க்யூ கட்டி நிற்கிற காலம் இதுவாகத்தான் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில், ‘எங்கே வேலை, என்ன வேலை, எவ்ளோ சம்பளம்’ என்று கேட்கும் பட்டியலில், ‘எவ்ளோ இஎம்ஐ, எதுக்கு இஎம்ஐ’ என்றும் கேட்கவேண்டியிருக்கிறது.

விளையாட்டாக ஒருவிஷயம் சொல்வார்கள். முன்பெல்லாம், சாலையில் செல்லும் நூறுபேரை நிறுத்தினால், அதில் பத்துபேருக்கு சர்க்கரை நோய் இருந்தாலே அதிசயம் என்பார்கள். இப்போது 90 பேருக்கு சர்க்கரை நோய். அதேபோல, இப்போது 90 பேர் இ.எம்.ஐக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டில் ப்ரிட்ஜ். இ.எம்.ஐ. ஹாலில் பிரம்மாண்டமான சோபா செட். இ.எம்.ஐ. படுக்கையறையில் ஏ.சி. - இ.எம்.ஐ. வாசலில் மூன்று பைக்குகள் - இ.எம்.ஐ. போர்வை போர்த்திக்கொண்டு நிற்கும் கார் - இ.எம்.ஐ. அவ்வளவு ஏன்...

வீடு... இ.எம்.ஐ. இப்படி, இ.எம்.ஐ. இன்றி அமையாது உலகு என்றாகிவிட்டது, இன்றைய பலரின் வாழ்க்கை! ஃப்ரிட்ஜ், சோபா, ஏ.சி.. டூவீலர்கள், கார், சொந்த வீடு என எல்லாமே ஸ்டேட்டஸாகப் பார்க்கப்படுகிறதே... என்ன செய்வது? என்று அலுத்துக்கொள்கிறார்கள் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர். ஒரேயொரு விதிவிலக்கு... இ.எம்.ஐ. என்பதையோ இந்த வங்கிக்கடன்களையோ ஸ்டேட்டஸ் லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை என்பது ஆச்சரியம்தான்!

மாதச் சம்பளம், இ.எம்.ஐ., பள்ளி, கல்லூரிக் கட்டணம், சீசன் டிக்கெட், மளிகை, பால், மருந்து மாத்திரைகள் என்று போய்க்கொண்டிருக்கும் வரைக்கும் குறையொன்றுமில்லை. திடீரென்று வண்டி மக்கர் செய்து, ரெண்டாயிரம் நாலாயிரம் செலவு வைத்தாலோ, நம் உடல் எனும் வண்டி மக்கர் செய்து, ஸ்கேனிங், டெஸ்ட்டிங் என்றானலோ கூடுதல் பிபி எகிற ஆரம்பித்துவிடும். ஒன்று முடிந்து அடுத்தது என்கிற ஆரவாரமில்லாத மனநிலையே நம்மிடம் இல்லை என்பதுதான் இங்கே பெருங்குறை!

அதேபோல, வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும், கதவு மாத்தணும், காருக்கு டிங்கரிங் ஒர்க் கொஞ்சம் பண்ணனும் என்று பட்டியலிட்டால், நம் குடும்பத்தலைவன்கள், தலைசுற்றி முதுகைப் பார்த்துவிட்டு ஒரு ரவுண்டு வந்துவிடுவார்கள்.

வாங்குகிற சம்பளத்தில் பாதிக்குப் பாதி இ.எம்.ஐ. என்றாகிவிட, போதாக்குறை கல்யாணமான புதிதில் போட்ட பாலிஸி, குழந்தை பிறந்ததும் ஆரம்பித்த பாலிஸி, ரெண்டாவது குழந்தை பிறந்த போது போட்ட பாலிஸி, மாதந்தோறும் நகைச்சீட்டு என்று எகிடுதகிடாக, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கும் நிலை. இந்த சமயத்தில், அலுவலகத்தில் அரசியல், நாலுவருடமாக ப்ரமோஷன் இல்லை, எதிர்பார்த்த சம்பள உயர்வும் இல்லை... என்பன போன்ற காரணங்களுக்காக ‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ என்று ஆர்ப்பரிக்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியே உருவாக இருந்துவிட்டுப் போவதே புத்திசாலித்தனம் என்கிற மனநிலை... இ.எம்.ஐ. அன்பர்களின் ஒத்த சிந்தனை!

இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களின் சம்பளத்தால் இ.எம்.ஐ... அலுவலகச் சிக்கல்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றால் மன இறுக்கத்துக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள் என்பது சோகம். வேலையை விட முடியாது. வேறு வேலைக்குச் சென்றால், சர்வீஸ் கட்டாகிவிடும். எத்தனை விதமான சிக்கல்கள்?

’இந்த இ.எம்.ஐலேருந்து எப்படா மாப்ளே விடுபடப்போறே?’ என்று நண்பர்களோ உறவினர்களோ நலத்தை விரும்புபவர்கள் கேட்கும்போது, ‘அதுக்குத்தாண்டா மச்சான், ஒரு ப்ளான் வைச்சிருக்கேன். பேங்க்ல பர்சனல் லோன் கேட்ருக்கேன். அதை வாங்கி, சின்னச்சின்ன இ.எம்.ஐ எல்லாத்தையும் முடிச்சுத் தூக்கிப்போட்டுட்டு ரெண்டே ரெண்டு இ.எம்.ஐ. வீட்டுக்கு ஒண்ணு. பர்சனல் லோன் ஒண்ணுன்னு இருந்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்’ என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு சொல்வார்கள்.

பாவம்... கேட்பவர்கள்தான் கிறுகிறுத்துப் போவார்கள்!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...