Saturday, February 23, 2019


நெருங்கும் தேர்வுகளும், நடுங்கும் மாணவர்களும்!


By இரா. கற்பகம் | Published on : 23rd February 2019 01:30 AM

பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து தினம் தினம் விதவிதமான தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் என்று தேர்வுக்கு மேல் தேர்வு எழுதியும் பொதுத் தேர்வு என்றாலே மாணவர்கள் நடுங்குகிறார்கள். இதற்குக் காரணம் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, புத்தகங்கள் மற்றும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள்தான்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தரமானது என்ற தவறான கருத்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நிலவுகிறது. உண்மையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ள அதே பாடங்கள்தான், சமச்சீர்ப் பாடத்திட்டத்தின் எல்லாப் பாடங்களிலும், எல்லா வகுப்புகளிலும் உள்ளன. அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஒரே பாடங்கள் வெவ்வேறு பெயர்களில் உள்ளன. வினாத்தாள் அமைப்பு, மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறைதான் மாறுகின்றனவே தவிர பாடங்கள் எல்லாமே ஒன்றுதான்.

இரு பாடத்திட்டங்களிலும் உள்ள மிகப் பெரிய குறைபாடு அளவுக்கு அதிகமான பாடங்கள் இருப்பதுதான். எந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டாலும், மேல் வகுப்புகளில் இருக்கும் அதே பாடங்கள், கீழ் வகுப்புகளிலும் உள்ளன. கணிதம், அறிவியல் இரண்டிலுமே கீழ் வகுப்புகளுக்கு அடிப்படைத் தகவல்களும், மேல் வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல கூடுதல் தகவல்களைப் பாடங்களில் சேர்ப்பது ஏற்புடையது.
எடுத்துக்காட்டாக, ஏழாம் வகுப்பில் அறிவியலில் தாவரங்களின் அடிப்படை வகைகள், எட்டாம் வகுப்பில் அதே பாடம் சற்று விரிவாக, ஒன்பதாம் வகுப்பில் தாவரங்களின் உணவு, அசைவுகள், இனப்பெருக்கம் என்று கூட்டிக் கொண்டு போவது சரி. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித இனப்பெருக்கம் பற்றி விரிவாக ஒரு பாடம்.
பருவமடைதல், சினைமுட்டை, விந்து - இவற்றை எப்படி இவர்களுக்கு விளக்குவது? அதிலும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் இரு பாலரும் சேர்ந்து படிக்கும்போது இவற்றைப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பத்தாம் வகுப்பில் இதே பாடத்தில் எய்ட்ஸ் பற்றியும், அதைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பான உடலுறவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
பிளஸ் 2 வகுப்பு சமச்சீர் உயிரியல் பாடத்தில் கருத்தடை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும்போது முதலாம் ஆண்டில் உடற்கூறு பற்றி முழுமையாகப் படிக்கப் போகிறார்கள் எனும்போது பிளஸ் 2 வகுப்பில், அதுவும் கருத்தடை பற்றிய பாடம் தேவையே இல்லை.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. சமச்சீர்ப் பாடத்திட்டத்திலும் தற்போதுள்ள பாடங்களைப் பாதியாகக் குறைத்து, விளையாட்டு, கவின்கலைகள், புத்தக வாசிப்பு, நல்லொழுக்கம், சுற்றுச்சூழல், தற்காப்புக்கலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்களை எழுதுபவர்கள் பெரும்பாலும் கற்றுத் தேர்ந்த பேராசியர்களாக இருப்பார்கள். இவர்கள் பாடநூல்களை எழுதும்போது தங்கள் புலமை வெளிப்படும் வண்ணம் எழுதுகிறார்கள். மாணவர்களுக்குப் புரியுமா, புரியாதா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாடங்களை வடிவமைக்கும்போது அவர்கள் அளவிற்குக் கீழிறங்கி வந்து அவர்களது கோணத்தில் சிந்தித்து எளிமையாக எழுத வேண்டும். 

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களைப் பார்த்து அதே போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கணிதத்தில் மிக முக்கியமான பாடமான, லாகரிதம், ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்தில் விடுபட்டுள்ளது. இரண்டு வருடங்கள் இந்தப் பாடத்தைப் பயின்றால்தான் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் கணக்குகளை எளிதாகப் போட முடியும். ஆங்கிலம், தமிழ் ஆகிய புத்தகங்கள் அசுவாரசியமாக உள்ளன.

முன்பு ஆங்கிலப் புத்தகங்களில், கிளாசிக்ஸ் எனப்படும் பழங்காலக் கதைப் புத்தகங்களிலிருந்து ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்து ஒரு பாடமாக வைப்பார்கள். அதனைப் படிக்கும் போது மூலப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். துணை பாடப் புத்தகங்கள் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பாகவோ, தேசத்தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவோ இருக்கும்.
இப்போதோ குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமை சாதனையாளர்களின் சிரமங்களை விவரிக்கும் வரலாறுகள் பாடமாக உள்ளன. பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி தரும் பாடங்களையே விரும்புவார்கள். இதுபோன்ற மனதைப் பாரமாக்கும் பாடங்களை விரும்புவதில்லை, அதனால் பாடங்களைப் படிப்பதில் ஆர்வமும் காட்டுவதில்லை.

தமிழ்ப் புத்தகத்தில், செம்மைத் தமிழ் மொழி, தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், என்று பழம்பெருமை பேசும் காலத்துக்கு ஒவ்வாத பாடங்கள் உள்ள புத்தகங்கள் மாணவர்களைத் தமிழ் என்றாலே ஓடச் செய்கின்றன. இதனாலேயே பத்தாம் வகுப்பு வரை வேறு வழியின்றித் தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு பிளஸ் 1 வகுப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிக்குத் தாவி விடுகிறார்கள். கல்கியின் நகைச்சுவைக் கட்டுரைகள், விடுதலைப்போரின் வீரச்சம்பவங்கள், ராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், பெரியபுராணம் முதலிய இதிகாசம், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்களைக் கதை வடிவமாக்கி, எளிய தமிழில் புத்தகமாக எழுதினால் மாணவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள்.

நான்கு சுவர்களுக்குள் மாணவர்களை அடைத்து வைத்துப் பாடம் கற்பிக்கும் முறை மாற வேண்டும். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே இலக்கண வகுப்புகள் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதில்லை. ஒருமை, பன்மை, அஃறிணை, உயர்திணை, ஆண்பால்-பெண்பால் இவற்றையெல்லாம் கரும்பலகையில் எழுதிக் கற்பிக்காமல் பள்ளி மைதானத்தில் இயற்கையோடு இணைந்து, கற்களையும், மரங்களையும், செடிகளையும் எடுத்துக்காட்டாக வைத்துக் கற்பிக்கலாம்.

ஆங்கிலத்தில் பாடல்கள் மற்றும் பாடங்களை மாணவர்களை நாடகமாக நடிக்கச் செய்தால் அந்தப் பாடங்களை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
சமச்சீர்ப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணப் பாடங்கள் மிக அழகாக உரையாடல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர்கள் அந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் வாய் விட்டுப் படிக்கச்சொல்லிக் கற்பிப்பது இல்லை. ஒரு பாடத்தை ஒரு வகுப்பில் இரு முறை சொல்லிக் கொடுத்து, அப்போதே மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து ஒரு குழு கேள்வி கேட்க மற்ற குழுக்கள் பதில் சொல்வதுபோல் வகுப்பை நடத்தினால் சுவாரசியம் கூடும்.
நமது தேர்வு முறையில் உள்ள மிகப் பெரும் குறைபாடு, தேர்வு வினாக்கள் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இல்லாமல் அறியாத் திறனைச் சோதிக்கும் வண்ணம் இருப்பதுதான்.

சமச்சீர்த் திட்டத்தில் புத்தகத்தில் உள்ள கேள்விகளை வார்த்தை மாறாமல் அப்படியே கேட்கிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலோ புத்தகத்தில் இருப்பதற்குச் சற்றும் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்கிறார்கள். இரண்டுமே தவறு. பாடங்களை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு அதில் எப்படி கேள்விகளைக் கேட்டாலும் பதில் எழுதத் தெரியும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்யவேண்டும்.

மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்கப் போதிய அவகாசம் கொடுக்காமல் தேர்வுகள் வைத்துப் பயனில்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இவற்றுக்கிடையே ஒரு பருவத் தேர்வு, முழு ஆண்டுப் பொதுத் தேர்வுக்கு முன்னர் இரண்டு திருப்புதல் தேர்வுகள் - இவை போதும், மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி எழுதுவார்கள்.
ஒவ்வொரு தேர்விலும் வெவ்வெறு வகையான வினாக்கள் கேட்கப்பட வேண்டும். புளூஃபிரிண்ட் எனப்படும் மாதிரி வடிவம் அறவே ஒழிக்கப்படவேண்டும். ஒவ்வொரு பொதுத் தேர்வுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரே கேள்விக்குப் பலவிதமான பதில்களை அளிக்க முடியும். விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களும் இதனைப் புரிந்து கொண்டு குறிப்பேடுகளின் துணையோடு திருத்தாமல் மாணவர்களின் புரிதல் திறனை மதித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
சனி, ஞாயிறுகளிலும், காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறைகளிலும் கூடுதல் வகுப்புகள் வைத்து மாணவர்களைச் சோர்ந்துபோக வைத்துவிடுகிறார்கள். இந்த நாள்களில் விடுமுறையைக் கட்டாயமாக்கி மாணவர்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் ஒட்டுமொத்த மாறுதல் ஏற்பட்டு, பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும், புத்தகங்களும், தேர்வு முறையும் மாறினால் மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி, மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள்.

கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024