நான்காண்டு ஆட்சியில் முக்கியப் பிரச்னைகளும்... மோடியின் மெளனமும்!
ஜெ.பிரகாஷ் vikatan 26.05.2018 பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி யாராலும் முடியாததை முடித்துக் காட்டுபவர் என்று பெருமித்துடன் மார்தட்டுகிறார்கள் பி.ஜே.பி-யினர். ஆனால், முக்கியமான பல பிரச்னைகளில் மோடி வாயே திறப்பதில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
ஆம்... பிரதமர் மெளனம் காக்கும் விஷயங்கள் ஒன்றிரண்டு அல்ல; தமிழகம் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடக்கும் ஏராளமான பிரச்னைகளுக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடியே இருந்துள்ளார் என்று குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
``அப்படி பிரதமர் மோடி எந்தெந்த விஷயங்களில் எல்லாம் மெளனம் கடைப்பிடித்தார்'' என்று எதிர் தரப்பைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``ஒன்றா... இரண்டா சொல்வதற்கு'' என்றவர்கள், ஒரு பட்டியலே உள்ளது என்று தெரிவித்து, அவற்றை எடுத்துக் கூறினார்கள்.
காவிரிப் பிரச்னை, காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த தொழிலதிபர்கள், வங்கிகளின் செயல்பாடு, தொடரும் பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி என அந்தப் பட்டியல் நீள்கிறது.
``காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதற்கு காலக்கெடுவையும் விதித்தது. காவிரிப் பிரச்னை தீவிரமடைந்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவிரிப் பிரச்னை தீவிரம் அடைந்திருந்த சமயத்தில் சென்னைக்கு அருகே ராணுவக் கண்காட்சியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தார். அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் கறுப்புப் பலூன்கள் பறக்கவிடப்பட்டு எதிர்க்கட்சியினர் தங்களுடைய கண்டனத்தைப் பதிவுசெய்தனர். ஆனால், மோடியோ காவிரிப் பிரச்னை தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். இப்போதுவரை காவிரி விவகாரத்தில் மௌனியாகவே உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடந்த சிறுமியின் பாலியல் வன்கொடுமையும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறுமியை விஷமிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட கொடூரத்தையும் அறிந்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்தச் சம்பவங்கள் குறித்து நீண்ட நாள்கள்வரை வாய் திறக்காமல் இருந்ததுடன், கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் 'குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது; இந்திய மகள்களுக்கு முழுமையான நீதி நிச்சயம் கிடைக்கும்' என்று ஒற்றை வரியில் தெரிவித்தார்.
தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் போலீஸாரால் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திலும் இதுவரை பிரதமர் வாய்திறக்கவில்லை.
15 நாள்களுக்கு ஒருமுறை விலையேற்றம் என்ற நிலைமாறி, அன்றாடம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்த பின்னர், பெட்ரோல், டீசலின் விலையானது தினமும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்ந்துகொண்டே வருகிறது. வரலாறுகாணாத அளவில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது பற்றியும் பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பி.ஜே.பி. நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கண்டிக்கும் வகையில் மோடி எந்தக் கருத்தையும் வெளியிட்டதில்லை.
மோடியின் தொடர் மெளனம் குறித்து பி.ஜே.பி. மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, 'நம் நாட்டில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா, பிரதமர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கூறினார்.
வரி ஏய்ப்பு மற்றும் ஐபிஎல் முறைகேடு தொடர்பான வழக்குகள் தொடர்புடைய ஐபிஎல். முன்னாள் தலைவர் லலித் மோடி பிரிட்டனில் இருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் சிக்கலானது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, லலித்மோடிக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததும் அம்பலமானது. அப்போதும் மோடி வழக்கம் போல் மௌனம் காத்தார்'' என்று அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
மோடி தலைமையிலான மத்திய அரசு நான்காண்டுகளைக் கடந்து விட்டநிலையில், முக்கியப் பிரச்னைகளுக்கு இனிமேலாவது அவர் தன் மௌனத்தைக் கலைக்க வேண்டும். கலைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...