Sunday, May 27, 2018

 காடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்!
 
விகடன் 27.05.2018


 

காடுவெட்டி குரு... அதிரடிப் பேச்சு, அசராத நம்பிக்கை ஆகிய குணநலன்களைக் கொண்டவர் குரு. அவருடைய இறப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்திலை. பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தார். கடந்த இரண்டு மாத காலமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன் - கல்யாணியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் குருநாதன் என்று அழைக்கப்படும் குரு. சொந்த ஊரான காடுவெட்டியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் 'காடுவெட்டி குரு' என்று பெயர் வந்தது. இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986-இல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் குரு, தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும், வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காகவும் எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் ஆகியோர் குருவை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். அவர், ராமதாஸின் நெருங்கிய உறவினரும்கூட. படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பா.ம.க-வில் வளர்ந்தார்.

பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். 2001-இல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-இல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இரண்டுமுறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர், பங்கேற்கும் கூட்டங்களில் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதால், 'வன்னிய இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்' என்று தெரிவித்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

29.12.1995-ம் ஆண்டில் அம்பலவர் கட்டளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார் என்று கூறி, விக்கிரமங்கலம் போலீஸாரால் வழக்கு பதியப்பட்டது. 27.8.1997-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உஞ்சினி சடையன் இறப்பில் வெங்கடேசன், ராமசந்திரன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தில் போலீஸாரின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதாக குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் 20.1.2005-ம் ஆண்டு தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வீராணம் திட்டத்துக்கு எதிராகப் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 6.1.2006 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "வெள்ளம்பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் சரிவர வழங்கப்படவில்லை" என அரசை குற்றம்சாட்டியதுடன், "உரிய நிவாரணம் வழங்காவிட்டால் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொளுத்தி விடுவேன்" என்று கூறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

21.6.2006-ம் ஆண்டு மேலூர் கிராமத்தில் அனல் மின்திட்டத்துக்கு அளவிடச் சென்ற அதிகாரிகளை வழிமறித்து, மாட்டுவண்டிகளைக் கொண்டு சாலையை மறித்ததுடன், ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென பொதுமக்களைத் தூண்டியதாக ஜெயங்கொண்டம் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6.1.2008 அன்று பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர். 10.3.2008 அன்று முன்னாள் பா.ம.க. மாநில மகளிரணிச் செயலாளர் செல்வி, மேடையில் குரு இருக்கும்போதே அவரைப் பற்றி பேசியதால் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குரு உள்ளிட்ட 5 பேர் மீது உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜெயங்கொண்டம் நீதிமன்றத்துக்கு 7.7.2008 அன்று குரு உள்ளிட்ட 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டபோது, பா.ம.க-வினர் தடுத்ததால் தடியடி நடைபெற்றது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு பெரிய அளவில் பேசப்பட்டது.

28.7.2010 அன்று அரியலூரில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒதுக்கீடு வழங்காவிட்டால், தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில்கள் ஓடாது என்றும் அனைத்தையும் கொளுத்துவோம் என்றும் மிரட்டல் விடும்வகையில் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர். 5.7.2008 அன்று குணசேகரன் வழக்கில் குரு கைது செய்யப்பட்டார். 15.7.2008 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

26.11.2008 அன்று ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் விலக்கப்பட்டது. 30.11.2008 அன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து குரு விடுதலை செய்யப்பட்டார். வன்னியர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த குரு, தன் தந்தையைக் கொலைசெய்த மாமாவின் தலையை வெட்டி, காளி கோயிலில் உள்ள சூலத்தில் குத்திவைத்தார். இதுதான் இவர் மீதான தனிப்பட்ட வழக்கு. அதேபோல் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்றவாளி என குருவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் குருவிடம் கேட்டபோது, "என்னுடைய மக்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை குற்றவாளியாக மட்டும் அல்ல, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் என் மக்களுக்காக ஏற்றுக்கொள்வேன்" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

தன் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குருவின் இறப்பு, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...