திருவிழாவில் வழங்கப்பட்ட திருநீறில் பிரச்னையா? 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி vikatan 30.05.2018
'திருநீறு’ எனப்படும் விபூதியைப் பூசிக்கொண்டால் கண்கள் பாதிக்கப்படுமா? `இதென்ன கேள்வி?’ என்கிறீர்களா? உண்மை. இந்த விபரீதம் நடந்திருப்பது தேனி மாவட்டம், போடி அருகேயிருக்கும் கொடுவிலார்பட்டியில்! அங்கே நடந்த கோயில் திருவிழாவில், திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கிறது மதுராமலிங்கம் செளடாம்பிகையம்மன் கோயில். பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கத்திவிடும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் பக்தர்கள். அதாவது, கத்தியால் தங்களின் வெற்றுடம்பில் அடித்துக்கொள்ளும் வேண்டுதல்! அப்போது உடலில் ஏற்படும் காயத்தில் திருநீறு பூசிக்கொள்வார்கள். அதன்படி, கத்திவிடும் நேர்த்திக்கடன் முடிந்ததும், எல்லா பக்தர்களின் உடலிலும் திருநீறு பூசப்பட்டது. அப்போதே சிலருக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. இரவு நேரம் என்பதால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஊர் மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட கிராம நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை தேனி நகரில் அமைந்திருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
"திருவிழா முடிஞ்ச பிறகு எல்லாருமே தூங்கப் போயிட்டோம். ஆனா எல்லாருக்குமே கண்ணுல எரிச்சல் இருந்திருக்கு. தண்ணீரால முகத்தையும் கண்களையும் கழுவிட்டுப் படுத்துட்டோம். ஆனா எரிச்சல் தாங்க முடியலை. எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குறவங்களும் அதே மாதிரி கண் எரிச்சல் இருக்குறதாச் சொன்னாங்க. சிலர் ராத்திரியே மருத்துவமனைக்குக் கிளம்பிப் போயிட்டாங்க.
என்னால ராத்திரியெல்லாம் தூங்கவே முடியலை. காலையிலதான் ஊர்ல நிறையப் பேருக்குக் கண் எரிச்சல் இருக்குறது தெரிஞ்சுது. கண் சிவப்பு நிறத்துல மாறிடுச்சு. கண்ணுலருந்து தண்ணீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு. உடனே நாங்க எல்லாரும் மருத்துவமனைக்கு வந்துட்டோம். இங்கே சொட்டு மருந்து கொடுத்தாங்க. திருவிழாவுல குடுத்த திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணம்னு சொல்றாங்க. உடம்புல கத்திவிட்ட அத்தனைபேருக்கும் கண்கள்ல எரிச்சலும் வலியும் இருக்கு. திருநீறுல ரசாயனம் எதையாவது கலந்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு. அந்தத் திருநீறையும் கையோட கொண்டுவந்திருக்கோம். ஹாஸ்பிட்டல்ல கொடுத்திருக்கோம். கண்கள் பாதிக்காம இருந்தா சரி’’ என்கிறார் பாதிக்கப்பட்ட ரவீந்திரன், கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.
அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்களில் பாதிப்பு ஏற்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடக்கம். அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் பாதிப்புக்கு என்ன காரணம் என்று அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, விளக்கம் சொல்ல மறுத்துவிட்டார்கள்.
இது தொடர்பாக தேனி மாவட்டப் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "நேற்று திருவிழாவில் கத்திபோடும் நேத்திக்கடன் நடைபெற்றிருக்கிறது. அப்போது வழங்கப்பட்ட திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணமா அல்லது திருவிழாவுக்காகப் போடப்பட்டிருந்த ராட்சத சோடியம் மின் விளக்குகள் காரணமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
சோடியம் விளக்குகளைப் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படுமா என்று ஒரு கண் மருத்துவரிடம் கேட்டோம். "நிச்சயம் பாதிக்கப்படும். 2,000 வாட் திறன் கொண்ட ராட்சத சோடியம் விளக்குகள் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண் எரிச்சல், கண் சிவந்து போவது, கண்ணீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற விளக்குகளால் பார்வைகூடப் பறிபோகலாம். இதே மாதிரியான சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன. எனவே, இது போன்ற விழாக்களில் அதிகத் திறன்கொண்ட மின் விளக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால், உடனே கண் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் கண் எரிச்சல் குணமாகும்’’ என்றார் அந்த மருத்துவர்.
No comments:
Post a Comment