நன்மையும் தீமையும் நம்மால்தான்
By எஸ்ஏ. முத்துபாரதி |
Published on : 26th May 2018 01:15 AM
|
பொதுவாக நமக்கு இது தெரிந்ததுதான். ஆனால் நாம் எப்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டுமோ, அப்போது ஏதோ ஒரு மயக்கத்தில் தவறான முடிவை எடுத்து விடுகிறோம். ஒரு நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் எடுக்கும் முடிவே நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பலன் தருவதாகவோ அல்லது பாதிப்படைவதாகவோ அமைந்து விடுகிறது.
ஒரு நாட்டைப் பொருத்தவரைஅல்லது ஒரு மாநிலத்தைப் பொருத்தவரைஅரசு அலுவலகங்களில் நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் நலனுக்காகத்தான். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் எப்போதும் அதை மறந்து விடுகிறார்கள்.
அரசு அலுவலகங்களில் எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு கூடுதல் பலனை எதிர்பார்க்கும் ஓர் அநாகரிக நிலைமை இன்று ஏற்பட்டுவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் திருவாளர் பொதுஜனம்தான்.
பொதுமக்களில் யாராவது ஒருவர் ஏதாவது ஓர் அலுவலுக்காக அரசு அலுவலகத்தை அணுகினால், அவருடைய வேலை முடிவடைவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் ஆகக்கூடும் என்று அங்குள்ள ஊழியர் கூறினால் அதுவரை பொதுஜனம் பொறுத்திருக்க வேண்டும்.
ஆனால், மாண்புமிகு பொதுஜனம் தனது அவசரத்திற்கு ஏற்றபடி அரசு ஊழியருக்கு ஏதாவது ஒரு பலன் கிடைக்கும்படிச் செய்து, தனது சொந்த வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்து வாங்கிச் சென்று விடுவார். இங்குதான் லஞ்சம் ஆரம்பமாகிறது.
இப்படி ஒருவரிடம் வாங்கிய பின்னர், அந்த ஊழியருக்கு இயல்பாகவே மற்றவர்களிடமும் எதையாவது எதிர்பார்க்கத் தோன்றும். அப்படிக் கிடைக்காதபோது, அவர்களின் வேலையை முடித்துத் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது நடக்கும். பிறகு, வேறு வழியின்றிஅவரைஅணுகி விவரம் கேட்டால்,கையூட்டுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவார். பிறகு நமது பொதுஜனம் மேலும் காத்திருக்கப் பொறுமையின்றி தன்னால் இயன்றதைக் கொடுத்து வேலை முடித்துக் கொண்டு விடுவார்.
சாதாரண பிறப்பு சான்றிதழ் வாங்குவதில் ஆரம்பித்து, சொத்துகள் வாங்கும் பத்திரப்பதிவு வரை - நூறு ரூபாயிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை - வேலைக்குத் தகுந்தபடியும் வேலையின் மதிப்பிற்குத் தகுந்தபடியும், இடத்திற்கு ஏற்றபடியும், அவசரத்திற்கு ஏற்றபடியும் தொகை மாறிக்கொண்டே இருக்கும். நிலைமை இப்படியிருக்க, நாம் இந்தச் சமூகத்தில் யாரைக் குற்றம் சொல்வது?
அடுத்ததாக ஊழல். அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஊழல், உலகில் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஓர் அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சில இடங்களில் நூற்றுக்கு ஐந்து சதவீதமாகவும் பல இடங்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமாகவும் இருக்கிறது. இதுபோன்ற முறையற்ற வழிகளில் சென்றால்தான் வேலை முடியும் என்ற நிலையே எங்கும் உள்ளது. நாட்டுக்கு நாடு பணமதிப்பும், பணத்தின் பெயரும் மாறியிருந்தாலும் முறையற்ற செயல்கள் என்பது சர்வதேச அளவில் எங்கும் பொதுவாகத்தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட லஞ்சம், ஊழல் போன்ற முறையற்ற செயல்களை நாம் பட்டியலிட்டாலும், அத்தனைக்கும் அடிப்படையாக இருப்பது, மனிதனின் மனதில் எழும் பேராசைதான். எதையும் முறையான வழியில் செய்வோம்; குறிப்பிட்ட வேலைக்காக விண்ணப்பித்திருந்தால் முறைப்படி நமக்கான முறை வரும்போது நமது வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதே முறையானது. நமது முறை வரும் முன் அவசரப்படுவதும், அதற்காக ஏதாவது குறுக்கு வழியைக் கையாள்வதும்தான் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. எதையும் நேர்மையான வழியில் சென்று செய்து முடிக்க வேண்டும் என்கிற உணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
ஏதோ ஒரு பலன் கிடைக்கிறது என்பதற்காக நாமும் முறையற்ற வழியில் பிறருக்கு வேலை செய்து கொடுக்கவும் கூடாது. பிறர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணும்போது நமக்கும் அது பொருந்துமல்லவா?
கையூட்டு எனும் லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் பல்வேறு விதமான ஊழலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் - 'இந்தப் பலன் எனக்கு மட்டும் அல்ல, மேலதிகாரிகள் வரை பலருக்கும் சேர்த்துதான்' என்பதுதான்.
முறையற்ற செயலுக்கு எத்தனை பேர் கூட்டாளிகள்? அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் வேற்று கிரகத்திலிருந்தா வருகிறார்கள்? அவர்கள் நம்மிலிருந்து சென்றவர்கள்தானே. நாம்தான் நமக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறோம். எனவே, அவர்கள் பதவியில் இருந்து கொண்டு முறையற்ற வழியில் சம்பாதிப்பதும் நமக்குத் தவறாகவே தெரிவதில்லை.
சமூகத்தில் முறையற்ற வழியில் பணம் சம்பாதித்து பெரிய மனிதர்களாக வலம் வருபவர்களைப் பற்றிப் பலரும் பெருமையாக பேசும்போது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது தவறில்லை என்கிற மனநிலை மற்றவர்களுக்கும் உருவாக்கி விடும். ஆகவே, பொதுமக்களாகிய நாம்தான் சரியான மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்; அவர்கள் தவறு செய்யும்போது அவர்களை நிராகரிக்கவும் வேண்டும்!
No comments:
Post a Comment