பெற்றோரும் பிள்ளைகளும்
By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 28th May 2018 02:12 AM
அறிவியலின்படி உலகின் அனைத்து உயிரினங்களும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, தாவர இனங்கள், மற்றொன்று விலங்கினங்கள். அறிவியலில், மனிதன் விலங்கினமாகவே கருதப்படுகிறான். விலங்கினத்திலேயே அளப்பரிய ஆற்றல் உடைய மூளையைக் கொண்டிருப்பதாலும், மற்ற திறமைகளாலும், பரிணாம வளர்ச்சியை விளக்கும் பரிணாம மரத்தின் உச்சாணிக்கொம்பில் மனிதன் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.
உயிரினங்களே தோன்றியிராத காலத்தில், உயிரணுக்களாகத் தொடங்கி, ஒரு செல் உயிரி, பலசெல் உயிரிகளாக உருவெடுத்து, முதுகெலும்பு கொண்ட உயிரிகளாகப் பெருக்கம் அடைந்து, இறுதியில் மனிதர்களைப் போன்ற குரங்குகளில் இருந்து ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்பதாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய வரலாறு விரிகிறது. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல படிப்படியாக ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக உருவெடுக்கிறது என்பதே அதன் தத்துவமாகும். அதன்படி கடைசி உயிரினமான மனிதன் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புதிய உயிரினமாக (!) மாறுவான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. இறை நம்பிக்கை உடையவர்களோ, வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், எல்லா உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்று உறுதியாக நம்புகிறார்கள். உண்மையான இறை நம்பிக்கையும், அதனால் ஏற்பட்ட இறையச்சமும் மக்களை தவறுகள் செய்வதில் இருந்து தடுக்கிறது. நல்லொழுக்கத்தைப் பேணும் இறை நம்பிக்கை அற்றவர்கள் கூட தவறு செய்வதற்குத் துணிய மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் நற்பண்புகளால், மனிதர்களும், விலங்குகளும் ஒன்றல்ல என்று தங்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார்கள் .
தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும், ஒழுக்க விழுமியங்களும் காற்றில் கற்பூரம் கரைவதைப் போல் காணாமல் போய் விட்டதற்கு தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்வது, பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருப்பது, குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியோர் இல்லாமல் இருப்பது, தடையின்றிக் கிடைக்கும் இணையம், கைப்பேசி வசதிகள் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். சிறுவர்கள், தொலைக்காட்சியில் சில காட்சிகளைப் பார்க்கும்போது தணிக்கை அதிகாரிகள் போன்று பெற்றோர் அங்கே வந்தால், காட்சிகள் மாற்றப் பட்டு விடும். அவர்கள் பார்க்கக் கூடாதவை என்று பெற்றோர், பெரியோர் எதையெல்லாம் அவர்களிடம் இருந்து மறைத்தார்களோ, அவை எல்லாம் தற்பொழுது மிக எளிதாக கணினியிலும், கைப்பேசியிலும் கிடைக்கிறது.
அவர்களின் வயதுக்கு மீறிய, இலைமறை காயாக இருக்க வேண்டியவை எல்லாம் அவர்களின் கண்களுக்கு அருகில் தங்கு தடையின்றித் தணிக்கை செய்யப்படாமலேயே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது எப்படி சாத்தியமாகும்?
ஒழுக்கமான பெற்றோர், கண்டிப்பு, நல்ல வீட்டுச்சூழல் என்று எல்லாம் இருந்தும் பிள்ளைகள் வழி தவறுவதற்கு கெட்ட நண்பர்களின் சகவாசம் முக்கியக் காரணமாகும். சுதந்திரமான கணினி, கைப்பேசி பயன்பாட்டுடன் குடிப் பழக்கமும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். மதுவின் தீமையைப் பற்றி நாம் கேள்விப்பட்ட ஒரு குறுங்கதை, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் முன் மது, மாது, குழந்தை மூன்றும் காட்டப்படுகிறது. மது குடிக்க வேண்டும், அல்லது பெண்ணை மான பங்கப்படுத்த வேண்டும், அல்லது குழந்தையைக் கொல்ல வேண்டும், இந்த மூன்றில் ஒன்றை அவன் எப்படியாவது செய்ய வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது
.
பெண்ணை மானபங்கப்படுத்துவதும், குழந்தையைக் கொலை செய்வதும் கொடூரமான குற்றங்களாக அவனுக்குத் தோன்றவே மதுவைக் குடிக்கிறான். குடி போதையில் குழந்தையைக் கொன்று விட்டு, பெண்ணையும் மான பங்கப்படுத்துகிறான் என்று, மதுவின் தீமையை விளக்குவதாகக் கதை முடிகிறது. மதுப் பழக்கத்தாலும், கூடா நட்பினாலும், பிறன் மனை விழைதலாலும், தாயோ, தந்தையோ பெற்ற குழந்தைகளைக் கொலை செய்கிறார்கள். இன்னும் கணவன், மனைவியை அல்லது மனைவி கணவனைக் கொலை செய்ததாகப் பத்திரிகைகளில் வரும் சில செய்திகளைப் படிக்கும்போது மிருகப் பண்புகள் மரபணுக்கள் வழியாக மனிதர்களிடம் படிமம் போல் படிந்து மக்களை, மாக்களாக்கி விட்டதோ என்றும், "தாயிற் சிறந்த கோயிலுமில்லை,' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்பதெல்லாம் இத்தைகையோருக்கு எள்ளளவும் பொருந்தாது என்றும் எண்ணத் தோன்றுகிறது.
குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்பதாக மனிதர்களின் வாழ்நாட்களை மூன்று பருவங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். குழந்தைப்பருவம் எதுவும் எழுதப்படாத, சுத்தமான கரும்பலகைக்குச் சமம். நாம் அவர்களை எப்படி வளர்க்கிறோமோ, எந்த சூழலில் வளர்கிறார்களோ அப்படியே கரும்பலகை நிரப்பப்படுகிறது. நாற்பது நாட்களுக்கு நாய் கூட பிள்ளை வளர்க்கும் என்று பெரியோர் அடிக்கடி கூறுவார்கள். பிள்ளைகள் வளர வளர பிரச்னைகள் வரும் சமயம் எல்லாம் அவர்களின் கூற்று, நினைவில் வரும். இந்தக் கடினமான கடமையை, பெற்றோர் நல்ல விதமாகப் பூர்த்தி செய்து விட்டால் இளமைப்பருவம் அழகாக மலரும். இப்பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்கள் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும்.
ஆபத்தான அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் பெற்றோருக்கு இவ்வளவு சவால்கள் இருந்திருக்காது. கைக்கெட்டும் தூரத்தில் அவை நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளை, புதையலைக் காக்கும் பூதம் போல் காக்கும் பணி நிச்சயமாக சவால் நிறைந்ததுதான். அவற்றை சமாளித்து வெற்றி பெற்று விட்டோமானால் நாம் கனவு காணும் புதிய சமுதாயத்தில் நன்மக்களைப் பெற்ற பெற்றோர் என்று அனைவரும் கொண்டாடுவர்; நாமும் பெருமிதம் கொள்ளலாம். வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது. "மாக்கள் அல்ல நாம், மக்கள்' என்பதை என்றும் நினைவில் கொண்டு நம் குழந்தைகளை நன்மக்களாக வளர்ப்பதில் மிகுந்த அக்கறையும், முயற்சியும் எடுப்போம்.
No comments:
Post a Comment