Wednesday, May 30, 2018

``மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..! - இந்த ஆசை சரிதானா? 

க.சுபகுணம்  vikatan 30.05.2018

கோடைக்காலம் தொடங்கியவுடன் கையில் நைலான் நரம்புகளால் செய்த தூண்டில்களை எடுத்துக்கொண்டு குளம் குளமாகத் தேடிச்சென்று மீன்பிடித்த நினைவுகள் பலரது மனதில் குளத்தோரச் சிற்றலைகளைப் போல் அலைமோதிக் கொண்டிருக்கும். அன்றெல்லாம் தேடித் தேடிச் சென்று கலங்கிய குளங்கள் தெளியும் வரை பொறுமை காத்திருந்தத் தருணங்களும், பொறி, அரிசிச் சோறு போன்றவற்றைத் தூவிவிட்டு அதைச் சாப்பிட மீன்கள் மேலே வரும்வரை நீரில் சிறு அலைகூடத் தளும்பவிடாமலும், தேவையான அளவு மீன்கள் மேலே வரும்வரை சிறு ஓசைகூடச் செய்யாமல் அமைதிகாத்த நிமிடங்களும் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத நினைவுக் குமிழிகள்.



அந்த நினைவுக் குமிழிகளுக்குள் நாம் தேடிப் பிடித்த அனைத்து மீன் வகைகளும் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. நமது ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவகக் குளங்களில். தூண்டிலில் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிச் சேகரிக்கும் மண்புழு இரைகளில் தொடங்குகிறது அன்றைய சிறுவர்களின் மீன் பற்றிய அறிவு. மண்புழுவைத் தூண்டிலில் கட்டிவிடுவதன் மூலம் அனைத்து மீன்களையும் பிடித்துவிட முடியாது. சூரை, கெண்டை, வவ்வால் போன்ற மீன்களை மட்டுமே அப்படிப் பிடிக்க முடியும். கொரத்தி, ஜிலேபி போன்ற சில மீன்களை நீரில் உணவைத் தூவி வலை போட்டுத்தான் பிடிக்க முடியும்.

கல் இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கல்லுளிமங்கன் முதல் சாப்பிடுவதற்கு ஆகாததால் கண்ணில் பட்டாலும் அவசியமின்றிக் கொல்லக்கூடாது என்று அப்படியே விட்டுவிட்ட ஓலை மீன் வரை எதையும் எப்போதும் தேவையின்றிப் பிடித்ததில்லை. பொழுதுபோக்காகவே இருந்தாலும் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு முன்னமே திட்டமிட்ட மீன்களைத் தவிர வேறு எதையும் பிடித்ததில்லை.



அன்று சிறுவர்களாய் நாம் குளங்கள் தேடி ஓடினோம். அதையே ஸ்போர்ட் ஃபிஷிங் (Sport Fishing) என்ற பெயரில் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு வித்தியாசம், நாம் சில மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டோம். இவர்கள் வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாம் போகலாம், மீன் பிடிக்கலாம். எவ்வளவு மீன்களை வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு விதியுண்டு. நாம் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும்.
இந்த வகைப் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் எழுதப்படாத ஒரு விதியுண்டு. ஒருமுறை பிடிக்கப்பட்ட மீன் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம். ஆனால், பிடித்தவுடன் கடலில் விட்டுவிட வேண்டும். அதற்கு ஏற்படும் காயங்களைப் பற்றியோ, அவற்றின் உடலில் சேரும் செயற்கை இரைகளைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் இல்லை. அது வெறும் மீன் தானே.



செயற்கை இரைகளைப் பயன்படுத்தி பிடிக்கும் இவர்கள் பிடிக்கப்படும் மீன்கள் கடலிலேயே மீண்டும் விடப்படுவதால் வளம் குறையாது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அந்தச் செயற்கை இரைகள் பிடித்த பிறகு விடப்படும் மீனின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதையும் அந்த பிளாஸ்டிக் இரை அதை எப்படியும் கொன்றுவிடும் என்பதையும் ஏன் மறந்து விடுகிறார்கள்?

உணவுக்காக வேட்டையாடலாம் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்காகக் கூட எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 95% மீன்கள் இந்தக் கடும் சோதனைகளைக் கடந்தும் உயிர் வாழ்கின்றனதான். ஆனால், இங்கே கொல்லப்படுவதல்ல பிரச்னை. மீன்களை ஒவ்வொருவராகப் பிடித்து அதற்கு 1%, 3%, 5% என்ற அளவுகளில் காயங்களைத் தந்துவிட்டு இரக்க குணத்தோடு அதை மீண்டும் வாழவிடுவது எவ்வளவு பெரிய கபட நாடகம்?

உணவுக்காக மீன் பிடிப்பவர்கள் மீண்டும் அவற்றின் வம்சம் வளர்வதற்காகக் கொஞ்சம் விட்டுவைப்பார்கள். ஆனால், இத்தகைய பொழுதுபோக்கு மீனவர்கள் தங்கள் சுய திருப்திக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தான் கொல்லவில்லையே! மீண்டும் உயிருடன் விட்டு விடுகிறார்களே! என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மீன்களுக்கு இயற்கையாகவே தப்பித்து வாழக்கூடிய திறன் உண்டு. ஆனால், நமது மனநிம்மதிக்காக அவற்றைப் பிடித்துத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புகார் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். இது கவனிக்கப்பட வேண்டிய விபரீத பிரச்னை. லாப நோக்கோடு உளவியல் ரீதியாக இந்த வகை ஆசைகளை வளர்த்தெடுக்கும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள், ஆசைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இயற்கையின் அடிப்படை அறங்களை மக்கள் மத்தியில் மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.



``ஓர் உயிரினத்துக்குக் காயம் உண்டாக்கும் வகையில் செய்யும் செயல்கள், கொடுக்கும் தண்டனைகள், வற்புறுத்திச் செய்யவைக்கும் செயல்கள் அது தண்டனையாகவோ அல்லது கொடுப்பவரின் மன நிம்மதிக்காகவோ எதுவாக இருப்பினும் அது சித்ரவதை தான்."

இது நமது சட்டத்தில் சித்ரவதை குறித்து எழுதப்பட்டிருக்கும் விளக்கம். இதில் எந்த உயிருக்கும் என்ற வரையறையில் மீன்களும் உள்ளடங்கும். இதற்கும் பலர் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். மீன்களுக்கு வலிகளை உணரும் நரம்பு மண்டலங்கள் இல்லாததால் இந்தச் செயல்களால் அவை எதையும் உணராது என்கிறார்கள். நம்மை சில நிமிடங்கள் சுவாசிக்க வழியற்ற வகையில் விட்டுவிடுவோம். மீண்டும் சுவாசிக்க அனுமதிக்கலாம். மீண்டும் அவ்வாறே சுவாசிக்க வழியின்றிச் செய்யலாம். மீண்டும் அனுமதிப்போம். இவ்வாறாகத் தொடர்ச்சியாக இம்சித்துக்கொண்டே இருந்தால், அப்போது புரியும் மீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் விடும்வரை மூச்சுத்திணறி அவை படும்பாடு.

என்றோ ஒரு பாட்டி சொன்ன வரிகள், ``தினமொரு பொழுதுபோக்கு இருந்தால், சூரியனைக் கண்ட பனிபோல் கவலைகள் கரையும்".

உண்மைதான். அது அடுத்த உயிர்களின் கவலைகளை அடித்தளமாகக் கொண்ட பொழுதுபோக்குகளாக இல்லாத வரையிலும்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...