Monday, May 28, 2018

அரபிக்கடலில் புயல் சின்னம்; 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

Added : மே 28, 2018 01:28



சென்னை : அரபிக்கடலில் உருவான இரண்டாவது புயல், நேற்று கரையை கடந்த நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால், மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில், முன் எப்போதும் இல்லாத வகையில், புயல்கள் உருவாகின்றன. இந்த மாத துவக்கத்தில், கன்னியாகுமரிக்கு மேற்கே, அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானது. 'சாகர்' என, பெயரிடப்பட்ட இந்த புயல், மேற்கு திசையில் சுழன்று, ஏடன் வளைகுடா வழியாக சென்று, ஏமன் நாட்டில் கரையை கடந்தது. இந்தப் புயல், கரையை கடந்த நாளில், குமரிக்கு மேற்கே, மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதுவும் வலுப்பெற்று, புயலாக மாறியது.

காற்றழுத்த தாழ்வு :

'மேகுனு' என பெயரிடப்பட்ட, இந்த புயல், சாகர் புயல் சென்ற அதே பாதையில் பயணித்து, நேற்று ஓமன் நாட்டில், கரையை கடந்தது. இந்நிலையில், மூன்றாவதாக, அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. கேரளா, கர்நாடகா கடற்பகுதிக்கு அருகே உருவாகியுள்ள, இந்த காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், மணிக்கு, 100 கி.மீ., வேகத்திற்கு காற்று வீசும் என்றும், வானிலை மையம் கணித்துள்ளது. அதனால், வரும், 30ம் தேதி வரை, அரபிக்கடலில், மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், எது புயலாக மாறும்; எது வலுவிழக்கும் என்பது, இரண்டு நாட்களில் தெரியவரும்.

மழை நிலவரம் :நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம், பெரியாறில், 7 செ.மீ., மழை பதிவானது. வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை மற்றும் அரியலுாரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலூர் ஆகிய, வடக்கு உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...