Wednesday, May 30, 2018

13 உயிர்கள் பலி; ஸ்டெர்லைட்டுக்கு மூடுவிழா: கற்ற பாடம் என்ன? குற்றம் யார் பக்கம்?

Published : 30 May 2018 07:34 IST


எம்.சண்முகம்

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். - (கோப்புப் படம்)

விலை மதிக்க முடியாத 13 உயிர்கள் பலியான பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவிழா கண்டு வருகிறது. இந்த ஆலையை மூடும் அவசியம் குறித்து பேசும் நிலையில், இந்த ஆலை தேவையா என்ற கருத்தையும் நாம் விவாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உலகில் தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருளாக காப்பர் அமைந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 140 முதல் 300 கிராம் காப்பர் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் 1.5 கிலோ காப்பர் இடம்பெற்றுள்ளது. வீடுகளில் சராசரியாக 100 கிராம் காப்பர் பயன்பாடு உள்ளது. காற்றாலைகளில் 5 டன் காப்பர் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.2 கோடி டன் காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பர் தயாரிப்பு, தோண்டி எடுத்தல் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆய்வக முறைப்படி நடைபெறுகிறது. இதில் இரண்டாவது முறையையே ஸ்டெர்லைட் மேற்கொள்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் 8 சதவீத காப்பர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. நம் நாட்டின் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

‘கழிவுகளை வெளியேற்றுவதில்லை’

இந்நிலையில், ‘நாங்கள் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ என்ற நிலையை கடைப்பிடிக்கிறோம். எங்கள் ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேறுவதில்லை. தன்னிச்சையான நிபுணர் குழு மூலம் சோதனை நடத்தினால், அதற்கு உடன்பட தயார்’ என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘வெளிநாடுகளில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யும் நாடாகவே இந்தியா இருக்க வேண்டும் என்று அந்நிய சக்திகள் விரும்புகின்றன. அவர்கள் உள்ளூர் அமைப்புகள் உதவியுடன் போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். உண்மையை பொய் பிரச்சாரம் வென்றுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே ஸ்டெர்லைட் நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதா, போராட்டக்காரர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு மூட வைத்துள்ளார்களா போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.

முன்பெல்லாம் சாதாரண மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டும், தொழிற்சாலை வேண்டும் என்று போராடிய நிலை மாறி, தற்போது நான்கு வழிச் சாலை வேண்டாம், தொழிற்சாலை வேண்டாம் என்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று விரிவாக ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைத் துச்சமாக புறந்தள்ளிவிட்டு திட்டங்களை செயல்படுத்தும் போக்கே இந்த மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. ‘இந்த ஆலை தேவைதான், சுற்றுச்சூழலுக்கு கேடு வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உறுதியளிக்க வேண்டியவர்கள் அனுமதியளிக்கும் ஆட்சியாளர்கள், கண்காணிக்கும் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்கள். இவர்கள் பல காரணங்களால் தொழில்நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

இந்த நம்பகத்தன்மை குறைவுதான் போராட்டக்காரர்களை உருவாக்குகின்றன. அவர்களுக்குள் சமூக விரோதிகள் ஊடுருவவும் காரணமாகி விடுகிறது. வன்முறைகளைத் தூண்டும் சித்தாந்தவாதிகள் இந்த நிலைமையை பயன்படுத்தி சுயலாபம் அடைகின்றனர். அவர்களது பேச்சை சாதாரண மக்கள் நம்பி களத்தில் பலியாகும் நிலை ஏற்படுகிறது. ஆட்சியாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு, நீதிமன்றம், பத்திரிகைகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

No comments:

Post a Comment

‘Case over wedding invite with Modi message reckless’

‘Case over wedding invite with Modi message reckless’  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : The high court quashed proceedings against ...