Wednesday, May 30, 2018

இரண்டாக உடைந்த ரயில் சக்கரம் - பெரும் விபத்து தவிர்ப்பு! 

பிரேம் குமார் எஸ்.கே.

ஓடும் ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்ததால், அதிவிரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



ரயில்வே துறையில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் போன்ற பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும். ஆனால், நேற்று காலை அதிவிரைவு ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் - யஷ்வந்த்பூர் அதிவிரைவு ரயிலின் சக்கரம், ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது இரண்டாக உடைந்துள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து விநோத சத்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திச் சோதித்துள்ளார். அப்போது ஒரு பெட்டியில், ஒரு சக்கரம் இரண்டாக உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே உயர் அதிகாரிகள், ”இதுபோன்று இது வரை நாங்கள் பார்த்தது இல்லை. ரயில் சக்கரத்தில் பிரச்னை வருவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். சக்கரம் அதிக முறை பயன்படுத்தப்பட்டதா அல்லது தயாரிப்பில் நடந்த குளறுபடியா என விசாரணை நடைபெறும்” என்றனர்.

  இதுபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் சக்கரத்தின் நிலைகுறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024