மகன் வீட்டுக்குச் சென்று திரும்பிய அரசு அதிகாரிக்கு கொள்ளையன் கொடுத்த அதிர்ச்சி!
விகடன்
சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்ற அரசு அதிகாரி வீட்டில் 54 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய், வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம், சந்தானம்மாள் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். சுற்றுலாத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களின் மகன் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மகனின் வீட்டுக்கு சீனிவாசனும் அவரின் மனைவியும் சென்றனர். பிறகு நேற்றிரவு அவர்கள் வீடு திரும்பினர். முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவிலிருந்த 54 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் ரூபாய், வெள்ளி பொருள்கள் ஆகியவை கொள்ளைப் போயிருந்தது.
இதுகுறித்து ஜெயந்தி, சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கைவரிசைக் காட்டியிருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டைச் சுற்றி ஓடிய மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நகை, பணம், வெள்ளி பொருள்களைக் கொள்ளையடித்துள்ளனர். பின்பக்கமாகத்தான் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்" என்றனர்.
No comments:
Post a Comment