Friday, March 10, 2017

தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.

அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.




இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.




இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஓய்வு வயது உயர்த்தப்படுமா?

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.

ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக போக்குவரத்து துறையை மேம்படுத்த கேரளாவை போல் தமிழக அரசும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் தினமும் இயக்கப் படும் 23 ஆயிரத்து 400 அரசு பேருந்து களில் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இத்துறையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில் அடிக்கடி உயர்த்தப்படும் டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகளால் இந்த துறை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், தமிழக அரசும் போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய பராமரிப் பின்றி இயக்கப்படுவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணிக் கொடை, விடுப்பு தொகை உள்ளிட்டவை 2013 அக்டோபர் மாதத்துக்கு பிறகு வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 8,500 பேர் அவதிப்படுகின்றனர். போதிய பணிக்கொடை பெறாமலேயே சுமார் 1000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடி வரும் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுடன் தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 50 சதவிகிதத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசைப் போல, தமிழக அரசும் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறியதாவது:
நாட்டின் பெரிய சொத்தாக கருதப்படும் ரயில்வேத் துறையில் தினமும் 2.3 கோடி பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், தமிழக அரசு பேருந்துகளில் மட்டும் தினமும் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது.

ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு மட்டுமே ரூ.1,200 கோடி நிலுவையில் உள்ளது. ஓய்வு பலன்களை பெறாமலேயே 1000 பேர் இறந்துள்ளனர். மக்களின் அத்தியாவசியமாக இருக்கும் போக்குவரத்து துறையை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 15-ம் தேதி தலைமை செயலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, வரும் தமிழக பட்ஜெட்டில் சிறப்பு நிதியை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் ’’ என்றார்.

போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து போக்குவரத்து துறை வல்லுநர்கள் கூறும்போது, “பேருந்துகளை முறையாக பராமரித்து குறித்த நேரத்தில் இயக்க வேண் டும். பணியின்போது, தொழிற் சங்கத்தினர் கட்சி பணிக்கு செல்லாமல் முறையாக அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும், உதிரி பாகங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். இந்த துறையில் மொத்தம் 15 நிர்வாக இயக்குநர்கள், 80 பொதுமேலாளர்கள், 120 துணை மேலாளர்கள் இருக்கின்றனர். மொத்த வருவாயில் 44 சதவீதத்தை சம்பளத்துக்கே ஒதுக்கிவிட்டால், துறை எவ்வாறு வளர்ச்சி பெறும்’’என்றனர்.

புதிய ஏசி: கோத்ரெஜ் அறிமுகம்

முன்னணி வீட்டு உபயோக நிறுவனமான கோத்ரெஜ் அப்ளையன்ஸஸ், புதிய ஏசி ரகத்தை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கோத்ரெஜ் என் எக்ஸ் டபிள்யூ ஏசியை அறிமுகப்படுத்தியது. அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட இந்த இயந்திரம் இன்வெர்டர் வசதியையும் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின், வர்த்தகப் பிரிவு செயல் துணைத் தலைவர் கமல் நந்தி பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 5.8 ஐஎஸ்இஇஆர் தர மதிப்பீட்டுடன் இந்த ஏசியை உருவாக்கியுள்ளோம். இந்த ஏசி இன்வெர்ட்டர் வசதி கொண்டது. இந்த வசதி கொண்ட ஏசி விற்பனையில் 2018ம் ஆண்டுக்குள் 20 சதவீத சந்தையை கைப்பற்றவும் கோத்ரெஜ் இலக்கு வைத்துள்ளது என்றார்.

இந்த ஏசி 1 டன் மற்றும் 1.5 டன் அளவுகளில் கிடைக்கும். இவற்றின் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.66 ஆயிரம் வரையில் அமைந்துள்ளது.

3 தொழில்நுட்ப சேவை: கேவிபி அறிமுகம்

பிடிஐ

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ரொக்கமில்லா பண பரிவர்த் தனையை ஊக்குவிக்கும் வகை யில் தொழில்நுட்ப அடிப்படையி லான 3 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

கோவையில் கரூர் வைஸ்யா வங்கியின் சொந்த கட்டிடமான கேவிபி டவர்ஸ் திறப்பு விழாவில் இம்மூன்று சேவைகளையும் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே. வெங்கடராமன் அறிமுகம் செய்தார்.

ஃபாஸ்டாக் (FASTag) எனப் படும் முதலாவது சேவை இந்திய நெடுஞ்சாலை நிர்வாக நிறுவனத் துடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனமானது தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் துணை நிறுவனமாகும். இந்த அட்டை இணைக்கப்பட் டுள்ள சரக்கு லாரிகள் சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

இந்த ஃபாஸ்டாக்கில் குறிப் `பிட்ட தொகை முன்னதாகவே செலுத்தப்பட்டிருக்கும். இத் தொகை ஒவ்வொரு சுங்கச் சாவடி யைத் தாண்டும்போதும் அங்கு விதிக்கப்படும் கட்டணம் குறை யும். இந்த கட்டணக் குறைப்பை அங்குள்ள சென்சார்கள் உணர்த் தும்.

அடுத்ததாக யுனைடெட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) இது மொபைல் செயலியாகும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ள வாடிக்கையாளர்கள் 24X7 மணியில் எப்போது வேண்டு மானாலும் தங்கள் கணக்கிலிருந்து வேறு கணக்கிற்கு பண பரிவர்த் தனை செய்ய முடியும். இந்த பரிவர்த்தனையானது தேசிய பேமென்ட் சர்வீஸ் தளம் (என்பிசிஐ) மூலம் செயல்படுகிறது.

மூன்றாவதாக பாரத் பில் பேமென்ட் சிஸ்டமாகும். இதன் மூலம் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், எல்பிஜி சிலிண்டர், டிடிஹெச் கட்டணம், மொபைல் சார்ந்த கட்டணங்களை செலுத்த முடியும் என்று வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

காஞ்சி மாவட்டத்தில் மழை பொய்த்ததால் வேடந்தாங்கலுக்கு பறவைகள் வரத்து குறைந்தது: இந்த சீசனில் 16 ஆயிரம் பறவைகள் மட்டுமே வருகை

ச.கார்த்திகேயன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் மழைப்பொழிவு குறைந்ததால், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகளின் வரத்து இந்த சீசனில் 16 ஆயிரமாக குறைந்துள்ளது.

பறவைகள் என்றாலே வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் நினைவுக்கு வரும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரணாலயத்தில், ஆண்டு தோறும் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து சீசன் தொடங்குகிறது. ஏரியில் பறவைகளின் இருப்பைப் பொறுத்து, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை பொதுமக்கள் பார் வைக்காக சரணாலயம் திறந்து வைக்கப்படும்.
இங்கு கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தைக் குத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவை கள் ஆண்டுதோறும் வருகை தரும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்தும் பலவகை பறவைகள் இங்கு வருகின்றன.

2015-ல் காஞ்சிபுரம் மாவட் டத்தில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்டதால், வேடந்தாங்கல் ஏரிக்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. அதனால் பறவைகள் வரத்து அபரிமிதமாக இருந்தது. 2016 ஜனவரியில் எடுக்கப்பட்ட பறவைகள் கணக் கெடுப்பின்படி, வேடந்தாங்கலுக்கு 80 ஆயிரம் பறவைகள் வந்தன.

ஆனால் கடந்த ஆண்டு, பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து, பறவைகள் வரத் தும் குறைந்திருப்பது பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை யின் சென்னை மண்டல வன உயிரினப் பாதுகாவலர் கீதாஞ் சலியிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டு குறைவான மழை கிடைத்தாலும், வனத்துறை சார்பில் வேடந்தாங்கல் ஏரிக்கான நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு இருந்ததால், போதிய அளவு நீர் கிடைத்துள்ளது. அதன் காரணமாக ஓரளவு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 16 ஆயிரத்து 100 ஆயிரம் பறவைகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவில் சாம்பல் நிற நாரை, நத்தை குத்தி நாரை, சிவப்பு அரிவாள் மூக்கன், வெண் கொக்கு, நீர் காகங்கள், இராக்கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்டவை வந்துள்ளன’’ என்றார்.

மற்றொரு வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பறவைகள் அதிக அளவில் வரவேண்டும் என்றால், ஏரியில் நீர் நிறைந்திருந்தால் மட்டும் போதாது. அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் இருக்க வேண்டும்.

சுற்றியுள்ள பகுதிகளில் விவ சாயமும் நடைபெற வேண்டும். அப்போதுதான் பறவைகளுக்கு இரை கிடைக்கும். பறவைகளும் அப்பகுதியில் வாழ விரும்பும்’’ என்றார். பறவைகள் வரத்து குறைந்திருப்பது, பறவை ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏமாற் றத்தை தந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கோவையில் அமைக்கப்படுமா?

கா.சு.வேலாயுதன்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை, மதுரை தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் நிலம் வழங்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக 5 மாவட்டங்களிலும் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், பிரதமர் மோடியை சில நாட்களுக்கு முன் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்குமாறு மனு அளித்துள்ளார்.

இது கோவை உள்ளிட்ட பிற மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும், ஆயிரக்கணக்கான கிளினிக்கு களும் உள்ளன. அவர்களது தொழில் பாதிக்கும் என்பதாலேயே எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறைக்கு கொண்டுவராமல் தடுக்கின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதிமுக பிரமுகர் வே.ஈஸ்வரன் கூறியதாவது:

2008-ல் மத்திய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதித்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனது தொகுதிக்கு அதை கொண்டுசென்றார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன்படும் வகையில் அமல்படுத்த வேண்டுமெனக் கருதுவதில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்திலும் அதுவே நடக்கிறது.

இந்த மருத்துவமனை அமையும் இடம், சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள், வெளிநாட்டு மருத்துவர்கள் வருவதற்கு ஏற்ற விமானநிலையம், அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையிலான வசதிகளுடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியாகவும் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருப்பதால், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைப் பரிசீலிக்கலாம். கோவையில் விமானநிலையம் உள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இருக்கின்றனர். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள கேரள மாநில மக்களும் வந்துசெல்ல வாய்ப்புள்ளது.

எனவேதான், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்தால்கூட சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

தமிழகத்தில் 5 இடங்களில் ஆய்வு நடத்திய மத்தியக் குழு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடமில்லை என்று கூறியதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட இடங்களில் 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் உரிய இடத்தையே கண்டுபிடிக்காத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் 2-வது பெரிய தொழில் நகரமான கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதால், இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றார்.

அவர்கள்' ஒரு இசைப் பயணம்: தலைமுறைகள் கடந்த இசையும் கவிதையும்!

எஸ்.வி. வேணுகோபாலன்
படங்கள் உதவி: ஞானம்
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவர்கள்’ எனும் வித்தியாசமான திரைப்படத்துக்கு நாற்பது வயது. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அது சிறப்பாகப் பேசப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கே.பாலச்சந்தர் அமைத்த சவாலான திரைக்கதை முதல் காரணம். அடுத்து நறுக் வசனங்கள் (‘தோல்விக்கெல்லாம் தண்டவாளத்தில் விழுவதுதான் தீர்வுன்னா நான் எத்தனை முறை விழுந்திருக்கணும்’).

பின்னர் நடிப்பு; சுஜாதா, ரஜினி, கமல், ரவிகுமார் மட்டுமல்ல, ரஜினியின் அம்மா பாத்திரத்தில் வந்து கடைசிக் காட்சியில், “நான் உங்கூடவே வரேன், மாமியாரா இல்ல, உன் குழந்தையைப் பார்த்துக்கற வேலைக்காரியா” என்று சொல்லி, எதற்கும் கரையாத ‘அனு’ பாத்திரத்தையே கரைத்துவிடும் லீலாவதி உள்பட அனைவருமே மிகச் சிறந்த நடிப்பை நல்கியிருந்தார்கள். ஆனால் இந்த எல்லா அம்சங்களையும் தூக்கிச் சாப்பிடும் ஒன்று கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் அளித்த மகத்தான பங்களிப்பு.

பொதுவாக பாலச்சந்தர் படங்களில் பின்னணி இசைக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதைக் கவனித் திருப்பவர்கள், ‘அவர்கள்’ படத்தில் அது கூடுதல் உழைப்பில் அமைந்திருப்பதை நோக்க முடியும். அப்புறம் பாடல்கள். அவற்றின் தாக்கத்தை எளிதில் வடித்துவிட முடியாது!

காற்றுக்கென்ன வேலி

இழந்த காதலையும், ஏற்ற சோக மண வாழ்வையும் தனது குழந்தையை உறங்க வைக்க இசைக்கும் தாலாட்டில் இழைக்கிறாள் அனு (சுஜாதா). ‘இப்படியோர் தாலாட்டு பாடவா அதில் அப்படியே என் கதையைக் கூறவா...’ என்று தொடங்கும் இதமான பல்லவி, பின்னர் சரணத்தில், ‘அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்/ ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்/ அதுவரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்/ நான் அதிலிருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்...’ என்று ததும்புகையில், பாடல் காற்றில் கலந்து பரவிய மண்ணெங்கும் எத்தனை எத்தனை காதல் தோல்விகளின் பெருமூச்சில் எதிரொலித்தது! அந்த ஏக்கப் புல்லாங்குழலில் கசிந்தது காதல் கண்ணீரல்லவா?

தனக்குப் பிடித்த முறையில் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் துணிச்சல் முடிவை எடுக்கும் அனு, சுதந்திர உணர்வின் உச்சத்தில் மிதக்கும் கதாபாத்திரம். அந்தச் சுதந்திர உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிக்கான பாடல், தமிழ்த் திரைப்படப் பாடல் வரிசையில் அமர்க்களமான ஒன்று. ‘காற்றுக்கென்ன வேலி/ கடலுக்கென்ன மூடி/ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடைந்துவிடாது/ மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது?...’ என்று உற்சாகக் கூக்குரலில் புறப்படும் அந்தப் பாடலின் சந்தமும், கவிதை வேகமும், சொற்களின் வீச்சும் அதற்குப் பாந்தமான தாளகதியில் அமைந்த அந்த மெட்டும் அபாரமானவை.

பாலச்சந்தர் காட்சித் தொகுப்பைத் தனது விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொடுத்து, அதற்கேற்ப இசையும் பாடலும் அமையட்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் எம்.எஸ்.வி. - கவியரசு இருவரது கூட்டணி இப்படிக் கலக்கியிருந்தது. இரண்டு எதிரெதிர் உளவியல் மனநிலைகளைப் பிரதிபலிக்கும் மேற்கண்ட இரண்டு பாடல்களையும் எஸ்.ஜானகி அசாத்தியக் குரலழகில் அற்புதமாகப் பாடியிருப்பார்.



பொம்மைக் குரலில் உண்மையின் குரல்

கமல் ஹாசன் பாத்திரத்திற்கேற்ப அந்தப் பொம்மையோடு இயைந்த பாடலான ‘ஜுனியர்… ஜுனியர்…’ என்ற பாடல் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்களில் ஒன்று. ‘சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகிறாய், மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகிறாய்…’ என்று தன்னைக் குறித்த சுயவிமர்சனமாகத் தனக்குள்ளேயே எதிரொலித்துக்கொள்ளும் விதத்திலான அந்தப் பாடலில் பொம்மைக்கான குரலைச் சிறப்பாகக் கொடுத்திருப்பார். ‘அடுத்தவர் ராகம்/ அதை நீ பாடுதல் பாவமடா’ என்ற வரிக்கு, ‘If it is apoorva raagam?’ என்ற பொம்மையின் பதிலும் பாடல் முழுக்க சோக ஹாஸ்யக் குரலில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் தனித்திறனும் மறக்க முடியாதவை.

அரிதாய் அமைந்த வரிகள்

‘அவர்கள்’ படத்தின் திரைக்கதை முடிச்சை, கவியரசு மிக எளிமையாகக் கொண்டு வந்திருந்த, ‘அங்கும் இங்கும் பாதை உண்டு/ இன்று நீ எந்தப் பக்கம்…’ என்ற பாடல், உள்ளபடியே அவர் வடித்த சிற்பம். ‘கல்லைக் கண்டாள்/ கனியைக் கண்டாள்/கல்லும் இங்கு மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்…’ என்று புறப்படும் முதல் சரணமும் சரி, ‘கண்ணா என்றாள் முருகன் வந்தான்/ முருகா என்றாள் கண்ணன் வந்தான்/ எந்தத் தெய்வம் சொந்தம் என்று கூறிப் பூஜை செய்வாள்?’ என்று தொடங்கும் இரண்டாவது சரணமும் சரி; மிக நேர்த்தியாகப் பின்னப்பட்ட புனைவு.

மூன்றாவது சரணத்தைப் பற்றிச் சொல்லாமல் எப்படி? ‘சொந்தம் ஒன்று/ பந்தம் ஒன்று/ வெள்ளை உள்ளப் பிள்ளை ஒன்று/ நடுவே ஊஞ்சல் ஒன்று’ என்ற வரியும், அதையடுத்து ‘தொடர்கதையோ, பழங்கதையோ, விடுகதையோ, எது இன்று?’ என்ற வரியும் அரிதாக வந்து அமையக்கூடிய பாடல் வரிகள். மூவரில் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்வுசெய்வது என்று திண்டாட வைக்கும் நிகழ்ச்சிப் போக்குகளின் பின்புலத்திலான அந்தப் பாடலை எஸ்.பி.பி. உள்ளத்தைத் தீண்டி உருக்கும் வண்ணம் தமது மென்குரலில் வழங்கியிருப்பார்.



அவரவர்கள் அவர்களாகவே இருப்பதும், நாயகி அனு, அவளாக இருப்பதும் அதில் நழுவிப் போகும் காதலை, உடைந்து போகும் மெல்லிதயங்களை, நொறுங்கும் உணர்வுகளை இசையும் கவிதையும் அடுத்தடுத்த தலைமுறையையும் எட்டிக் கடந்து சொல்லிச் சென்றுகொண்டிருப்பதைத் தமிழ்த் திரைப்பட வரலாறு தனியே குறித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ‘அவர்கள்’அழுத்தமான உதாரணம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...