எய்ம்ஸ் மருத்துவமனை கோவையில் அமைக்கப்படுமா?
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை, மதுரை தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் நிலம் வழங்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக 5 மாவட்டங்களிலும் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், பிரதமர் மோடியை சில நாட்களுக்கு முன் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்குமாறு மனு அளித்துள்ளார்.
இது கோவை உள்ளிட்ட பிற மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும், ஆயிரக்கணக்கான கிளினிக்கு களும் உள்ளன. அவர்களது தொழில் பாதிக்கும் என்பதாலேயே எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறைக்கு கொண்டுவராமல் தடுக்கின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மதிமுக பிரமுகர் வே.ஈஸ்வரன் கூறியதாவது:
2008-ல் மத்திய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதித்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனது தொகுதிக்கு அதை கொண்டுசென்றார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன்படும் வகையில் அமல்படுத்த வேண்டுமெனக் கருதுவதில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்திலும் அதுவே நடக்கிறது.
இந்த மருத்துவமனை அமையும் இடம், சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள், வெளிநாட்டு மருத்துவர்கள் வருவதற்கு ஏற்ற விமானநிலையம், அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையிலான வசதிகளுடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியாகவும் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருப்பதால், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைப் பரிசீலிக்கலாம். கோவையில் விமானநிலையம் உள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இருக்கின்றனர். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள கேரள மாநில மக்களும் வந்துசெல்ல வாய்ப்புள்ளது.
எனவேதான், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்தால்கூட சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
தமிழகத்தில் 5 இடங்களில் ஆய்வு நடத்திய மத்தியக் குழு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடமில்லை என்று கூறியதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட இடங்களில் 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் உரிய இடத்தையே கண்டுபிடிக்காத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் 2-வது பெரிய தொழில் நகரமான கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதால், இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment