Saturday, March 18, 2017

ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஜி.மெயிலும் முக்கியமான ஒரு பயன்பாட்டு இணையமாகவே இருந்து வருகிறது. இளைஞர்களுக்கு அலுவலகம், படிப்பு, வேலை முதலான இடங்களில் வீட்டு முகவரி, போன் நம்பரை அடுத்து இணைய முகவரியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இணையமுகவரியில் ஜி.மெயில் முகவரிதான் பெரும்பாலானவர்கள் தேர்வாகவும் உள்ளது. ஜி.மெயில் மூலம் டாக்குமென்ஸ் எனப்படும் எழுத்து சார்ந்த ஆவணங்கள் அதிகமாக அனுப்பப்பட்டாலும், ஜி.மெயில் மூலமாக போட்டோவும், வீடியோவும் அனுப்பும் தேவையும் உள்ளது. இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்.
தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MB-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உரிமையாளரான பஞ்சாப் விவசாயி!

பஞ்சாப் விவசாயி சம்பூரன் சிங் என்பவரின் நிலத்தை, வடக்கு ரயில்வே கையகப்படுத்தியது. இது தொடர்பாக சம்பூரன் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு ரூ.1.47 கோடி தர நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு ரயில்வே ரூ.47 லட்சம் மட்டுமே வழங்கியது. முழுப்பணம் செலுத்தப்படவில்லை.

இதையடுத்து, தனக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடி வந்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டில் அவருக்கு ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ரயில் டெல்லி-அம்ரிஸ்டர் இடையே இயங்கி வருகிறது.

இதற்கான நீதிமன்ற ஆர்டருடன் லூதியானா ரயில் நிலையத்துக்கு சம்பூரன் சென்றார்.

ஆனால், அதில் பயணிகள் இருந்ததால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். ரயில் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்ற பிறகு, ரயிலை எடுத்துக் கொள்கிறேன் என சம்பூரன் கூறினார்.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு ரயில்வே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, சம்பூரனுக்கு வழங்கப்பட்ட ரயில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், வருகின்ற சனிக்கிழமைக்குள் சம்பூரனுக்கு வழங்க வேண்டிய பணம் வழங்கப்பட வேண்டும், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுபோன்ற தீர்ப்பு வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்தாண்டு கூட கர்நாடக நீதிமன்றமும் இதுபோன்ற வழக்குக்கு, 62 வயது விவசாயி ஒருவருக்கு ரயில் வழங்க உத்தரவிட்டிருந்தது.
Dailyhunt

தூக்கத்தைக் கெடுக்கணும்னே வருவீங்களாய்யா? - ஆம்னிபஸ் அடாவடிகள்!




இப்போது அந்த பஸ்களில் பயணிப்பதே பெரிய அட்வென்ச்சராகத்தான் இருக்கிறது. அடிக்கடி சென்னையில இருந்து வெளியூர் போற ஆளா பாஸ் நீங்க? அப்போ கண்டிப்பா இதெல்லாம் உங்களுக்கும் நடக்கும்தானே?

* எங்கே பஸ் ஏறுவது என்பதில் தொடங்குகிறது முதல் பஞ்சாயத்து. முதலில் டிக்கெட் புக் பண்ணும்போது சென்னைக்குள் நமக்கு வசதியான இடத்தில் ஏறுவதாக டிக் அடித்திருப்போம். கடைசி நேரத்தில் போன் செய்து, 'செல்லாது செல்லாது, நாங்க அப்டிக்கா பைபாஸ் வழியாதான் பரதேசம் போறோம்' எனப் பதற வைப்பார் டிரைவரண்ணன். அப்புறமென்ன அவசர அவசரமாய் ஆட்டோ, கார் என சிக்குவதில் ஏறி அவர்கள் சொன்ன இடத்துக்குப் போக வேண்டியதுதான்.

* எம்.டி.சி பேருந்துகளில் 'சீட் மாறி உட்காருப்பா' எனச் சொல்பவர்களைக்கூட விட்டுவிடலாம்.
ஆம்னி பஸ்ஸிலும் அதே அக்கப்போரா? கஷ்டப்பட்டு விண்டோ சீட் புக் செய்தால், 'சார் எனக்கு அப்பப்போ வாந்தி வரும்' என நம் புது சட்டையைப் பார்த்துக்கொண்டே சொல்வார்கள். தியாகம் செய்துவிட வேண்டியதுதான். இப்போதெல்லாம் ஸ்லீப்பர் பஸ்களிலும் சீட் மாறச் சொல்கிறார்கள். அடப்பாவிகளா இங்கேயுமா?

* பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் மட்டுமல்ல, சில சமயம் எதிரில் உட்கார்ந்திருப்பவரும் பிரச்னைதான். முழு ஜன்னலையும் திறந்து வைத்துவிட்டு தூங்கிவிடுவார்கள். அடிக்கிற காத்துக்கு நமக்குத்தான் அடிவயிற்றில் திரவம் முட்டும். அதையும் தாண்டி லைட்டாக கண்ணசரும்போது 'டொய்ங்' என ஹாரன் அடித்து வண்டிகள் கடக்கும். இந்தச் சத்தத்தில் தூக்கம் கோவிந்தாதான்.

* தொண்டை வரை தின்றால் பயணத்தின்போது அவஸ்தை என காலி வயிற்றைத் தண்ணீர் கொண்டு நிரப்பி வைத்திருப்போம். நம் நேரத்திற்கென கமகமவென மசால் தோசையை மடியில் வைத்து சாப்பிட்டுக் கதறவிடுவார் பக்கத்து சீட்டு ஜென்டில்மேன். முந்தின சீட் சிட்டிசன் சாப்பிட்டுக் கை கழுவிய தண்ணீர் காற்றில் நம் முகத்தில் அபிஷேகம் செய்ய, வயிற்றில் கிடக்கும் ஈரத்துணியை வைத்தே துடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

* ஹெட்செட் மாட்டினாலும் சரி, ஹர்பஜன் ஸ்டைலில் இறுக்க அடைத்து துண்டு கட்டினாலும் சரி, இதில் இருந்து தப்பிக்கவே முடியாது. 'குறட்டை'. அமைதியாய் செல்லும் பேருந்தில் திடீரென ஜூராசிக் பார்க் சவுண்ட் எஃபெக்ட்ஸ் எல்லாம் கேட்கும். காது வைப்ரேஷன் மோடிலேயே இருக்கும். தூக்கத்தை பக்கத்து பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

* ஸ்லீப்பர் பேருந்துகளில் மட்டும் நடக்கும் அக்கப்போர் இது. பஸ் பிடிக்க வந்த களைப்பில் ஏறியதும் ஸ்க்ரீனை எல்லாம் இழுத்துவிட்டு கையை சுகமாய் முட்டுக் கொடுத்து தூங்கத் தொடங்கியிருப்போம். சட்டென ஸ்க்ரீனை தூக்கி, 'ஓ ஆள் இருக்கா? சாரி' என நகர்வார்கள். ஒரு ஸ்டாப்ல இப்படி நடந்தா பரவாயில்ல, ஒவ்வொரு ஸ்டாப்லேயும் இப்படி நடந்தா என்ன நியாயம் பாஸ்?

* இத்தனைத் தொல்லைகளையும் தாண்டி அதிகாலையில் தூக்கம் தூக்கிக்கொண்டு போயிருக்கும். விழித்துப் பார்க்கும்போது இறங்க வேண்டிய இடம் தாண்டி பத்து கிலோமீட்டர்கள் வந்திருப்போம். அப்புறமென்ன, தூங்கவிடாமல் செய்த ஒவ்வொருவரையும் மனசுக்குள் திட்டி, அத்துவானக் காட்டில் இறங்கி இன்னொரு பஸ் பிடித்து ஊருக்குப் போக வேண்டியதுதான்.

ஹேப்பி Journey ப்ரோ!

-நித்திஷ்
Dailyhunt

'இன்டர்நெட் இனி அடிப்படை உரிமை..!'- கேரள அரசு அதிரடி அறிவிப்பு




இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநில அரசு, இன்டர்நெட் வசதியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் உணவு, நீர் மற்றும் கல்வி போல கேரளாவில் இனி இன்டர்நெட் வசதியும் அடிப்படை உரிமை பட்டியலில் சேர்ந்துள்ளது. இதற்காக மாநில அரசு, 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் இன்டர்நெட் வசதியை கொடுக்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளது.

இந்தப் புதிய திட்டம் குறித்து கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், 'இந்தத் திட்டத்தின் மூலம் இன்டர்நெட் என்பது மக்களின் அடிப்படை உரிமையாக மாறுகிறது. இன்னும், 18 மாதங்களில் 'கே-போன் நெட்வொர்க்' நவீன தொழில்நுட்ப வசதி மூலம் 1,000 கோடி ரூபாய் செலவில் திட்டம் அமல்படுத்தப்படும்.
2017-2018 ஆண்டுக்குள் அனைத்து அரசாங்கப் பரிமாற்றங்களும் ஆன்லைனில்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

முன்னர் ஐக்கிய நாடுகள் சபையும், இன்டர்நெட் வசதியை ஒவ்வொரு நாடும் அடிப்படை உரிமை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

பேரம் பேசும் அமைச்சர்; பட்டியல் போடும் முதல்வர்! அதிரவைக்கும் ராமதாஸ்



முதல்வர் பழனிசாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் மீது பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 14 ஆசிரியர் பணியிடங்களையும், அதன் உறுப்புக் கல்லூரிகளில் 24 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முன்பே அப்பணியிட நியமனங்களுக்கான பேரம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்கள், மூன்று இணைப் பேராசிரியர்கள், 9 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 14 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 21-ம் தேதி கடைசி நாளாகும். அதேபோல பெரியார் பல்கலைக்கழக ஆளுகையில் உள்ள பெண்ணாகரம் உறுப்புக் கல்லூரி, எடப்பாடி உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் 24 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டு, இம்மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நியமனங்களில், பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி ஒரு பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க, விடுமுறை நாள்களையும் சேர்த்து 12 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கான அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, ஒருவார இடைவெளிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள், கடைசி நாள் ஆகிய இரு நாள்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள 10 நாள்களில் ஆறு நாள்கள் மட்டும்தான் அரசு வேலை நாள்களாகும்.
இப்பணிக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனும்போது, ஏதோ ஒரு மாநிலத்தில், குக்கிராமங்களில் வாழும் ஒருவர், இந்த அறிவிக்கையைப் படித்து விண்ணப்பம் செய்வதற்குக் கால அவகாசம் போதாது. இதை வைத்துப் பார்க்கும்போது, பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட சிலர் மட்டும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதற்கான நிபந்தனைகளை சிலருக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டதைவிட பெரிய மோசடியாக உள்ளது. தாங்கள் விரும்பியவர்களுக்கு வேலை வழங்கவே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவை ஒருபுறமிருக்க, இந்தப் பணிகளுக்கு வெளிப்படையாகவே பேரம் பேசப்படுகிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள 14 பணியிடங்களுக்கு, ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, இரு கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு தமது தூதர்கள் பேசுவார்கள் என்று நேர்காணலுக்கு வந்த சிலரிடம் துணைவேந்தரே கூறியிருக்கிறார். 

பேராசிரியர் பணிக்கு 50 லட்ச ரூபாய், இணைப்பேராசிரியர் பணிக்கு 40 லட்ச ரூபாய், உதவிப் பேராசிரியர் பணிக்கு 35 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று துணை வேந்தர்களின் தூதர்கள் கூறியிருக்கின்றனர். மற்றொருபுறம் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்த பலர், தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகனைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, துணைவேந்தரின் தூதர்கள் குறிப்பிட்ட அதேதொகையைக் கூறி, மேலிடத்துக்குத் தர வேண்டியிருப்பதால், அதற்கும் குறைவாக வாங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சரும், துணைவேந்தர்களின் தூதர்களும் குறிப்பிட்ட தொகையைக் கையூட்டாகத் தர எவரும் தயாராக இல்லை என்பதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆள் தேர்வு நடைமுறையை அப்படியே விட்டுவிட்டு, புதிதாக ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகக் குற்றம்சாற்றப்படுகிறது.

 இப்போது பல்கலைக்கழகத்துக்கும், உறுப்புக் கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு, பேரங்கள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ள உறுப்புக் கல்லூரியில் உதவிபேராசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில், முதலமைச்சரே தலையிட்டு தமக்கு வேண்டியவர்களின் பட்டியலை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் அனைவரும் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் தேர்வுசெய்தால்தான் அவர்களால் வழங்கப்படும் கல்வியும் தரமாக இருக்கும். ஆனால், உயர்கல்வி அமைச்சரும், பல்கலைக்கழகத் துணைவேந்தரும் போட்டி போட்டுக்கொண்டு தரகர்களை நியமித்து, பேராசிரியர் பணிகளை ஏலம்போட்டு விற்பது மிகப்பெரிய அவலமாகும். பேராசிரியர் பணிகளைத் தரகர்கள் மூலமும், நேரடியாக விற்பனைசெய்துவரும் உயர்கல்வி அமைச்சர்தான் துணைவேந்தர் நியமனம் மிகவும் வெளிப்படையாக நடப்பதாக கூறுகிறார். இந்தச் செயல், 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம் வரும் ஜூன் 15-ம் தேதியுடன் முடிகிறது. பணிக்காலம் முடிய இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், புதிய நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்பது மரபாகும். மாறாக, அவசர அவசரமாக புதிய பணியிடங்களை நிரப்புவது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மனப்போக்கையே காட்டுகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் நியமன ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எனவே, பெரியார் பல்கலைக்கழகப் பணி நியமனங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, சரியான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், மற்ற கல்லூரிகளில் நடந்த பணி நியமன ஊழல் பற்றியும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கங்கை அமரன் குறித்து தமிழிசை கலகல பேச்சு!



தனது பிரபலத்தைப் பயன்படுத்தாமல், வேட்பாளராக கங்கை அமரன் உயர்ந்திருக்கிறார் என்று பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன், பன்னீர் அணி சார்பில் மதுசூதனன், பா.ஜ.க சார்பில் கங்கை அமரன், தே.மு.தி.க சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர்த் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரனை அறிமுகம்செய்துவைக்கும் நிகழ்ச்சி, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது பிரபலத்தைப் பயன்படுத்தாமல், வேட்பாளராக கங்கை அமரன் உயர்ந்திருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதிக்காக தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். மேலும், தமிழகத்துக்கு நீட் (NEET) தேர்வு வேண்டும் என்பதே என் கருத்து என்றார் தமிழிசை.

இதைத் தொடர்ந்து பேசிய கங்கை அமரன், என்னை வேட்பாளராகத் தேர்வுசெய்த பா.ஜ.க தலைமை மற்றும் தமிழிசைக்கு நன்றி என்றார்.

முடங்கியதா விஜிலென்ஸ் இணையதளம்?

VIKATAN

இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணைய (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, அதில் இருந்த அனைத்துத் தரவுகளும் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அந்தத் துறையில் கடந்த நான்கு மாதங்களாகப் பணிகள் நடப்பதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.



குறிப்பாக, ஊழல்வாதிகளின் பெயர்ப் பட்டியல் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த கோசியா என்பவர், ஆர்.டி.ஐ மூலம் ஜவுளித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் உங்களது புகார் மீது தற்போது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று விஜிலென்ஸ் அவருக்கு பதிலளித்தது.

விஜிலென்ஸின் தரவுகளைக் கடந்த ஆண்டு வரை டி.சி.எஸ் (TCS) கண்காணித்து வந்தது. இதையடுத்து, அதனுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகு, இந்த ஆண்டு முதல் தேசியத் தகவலியல் மையம் ( National Informatics Centre), விஜிலென்ஸின் தரவுகளைக் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், தரவுகள் அழிந்ததாகக் கூறுவதை விஜிலென்ஸ் மறுத்துள்ளது. ''தொழில்நுட்பக் கோளாறால் தரவுகளை எடுக்க முடியவில்லை. ஆனால், தரவுகள் எதுவும் அழியவில்லை'' என்று கூறியுள்ளது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...