Tuesday, March 21, 2017

ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்
ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு

சென்னை,:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்து உள்ளது.




முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்., 22 இரவில், உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.

ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூவர் மூலம் ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சென்னை,

அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஜோசப், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ஏழாவது அட்டவணை

இம்மனுக்கள், தற்காலிக தலைமை நீதிபதி, எச்.ஜி.ரமேஷ் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், சார்பு செயலர் மணிராம் தாக்கல் செய்த பதில் மனு:அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள, இரண்டாவது பட்டியலின்படி, 'பொது சுகாதாரம், மருத்துவமனைகள்' மாநில அரசின் கீழ் வருகிறது. அதன்படி, மாநில முதல்வருக்கு தேவையான மருத்துவ வசதியை அளிக்க வேண்டியது, மாநில அரசின் பொறுப்பு.

ஒப்பிடமுடியாது

மேலும், 'போலீஸ்' மற்றும் 'பொது ஒழுங்கு'ம் ஏழாவது அட்டவணைப்படி, மாநில அரசின் கீழ் வருகிறது. குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துவது, கிரிமினல்கள் மீது காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கும், மாநில அரசே பொறுப்பு.

எனவே, மாநில அரசுக்கு தான், இதில் முக்கிய பொறுப்பு உள்ளது. விசாரணை கமிஷன் சட்டப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதற்கு, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நேதாஜி இறந்த சம்பவம், சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்தது. நேதாஜி இறப்பையும், ஜெ., இறப்பையும் ஒப்பிட முடியாது. அவை இரண்டும் ஒன்று அல்ல. விசாரணை முடியும் வரை, ஜெ.,யின் உடலை பத்திரமாக வைத்திருக்கும்படியோ, குழு அமைக்கும்படியோ, எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. இந்த வழக்கில், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் -
10 முக்கிய அம்சங்கள்


சென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@Image1@

இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...

01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.

03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.
05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்.
06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'? என்ற கேள்வி எழுகிறது.

07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.

08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம். 

09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார். 

10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
279 தொழில்நுட்ப கல்லூரிகள்
23 பல்கலைகள் 'டுபாக்கூர்'

புதுடில்லி, :நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.





ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும்
வெளியிடுகின்றன.

சான்றிதழ் கிடைக்காது


அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும், 23பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் கல்லுாரிகளும் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் படித்தால், அங்கீகாரம் பெற்ற கல்விச் சான்றிதழ் கிடைக்காது என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில், 66 போலி கல்லுாரிகள் மற்றும் 23 போலி பல்கலைகளுடன், டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிர மாநிலங்கள்உள்ளன.


கடிதம்


'இந்த போலி கல்லுாரி, பல்கலைகள் குறித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தகவல்

கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிய அனுமதியை பெறும்படி, இந்த கல்வி அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

போலி கல்வி நிறுவனங்கள் குறித்த தகவலை,www.ugc.ac.in மற்றும் www.aicte-india.org இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் பாலியல் தொல்லை: 90 நாட்கள் சம்பள விடுமுறை

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு உள்ளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்துடன் விடுப்பு:

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொலைக்கு உட்பாட்டால், அவர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கமிட்டிகள், பாலியல் குறித்த விசாரணையை நடத்தும் காலத்தில், குற்றம் புரிந்தவர்கள் அச்சுறுத்தல்கள் விடுப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிந்துரையின்படி..

மேலும், இந்த விடுமுறை, விசாரணை கமிட்டியின் பரிந்துரையின்படி வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலத்திலிருந்து கழிக்கப்படாது எனவும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 19, 01:58 PM

பெண்களை பாதிக்கும் ‘வாட்ஸ் அப்’ வாழ்க்கை

குடும்பத்தலைவிகள் கூட இப்போது ‘வாட்ஸ் அப்’புடன் வாழ்க்கை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தனக்கு கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியை செல்போனிலே அவர்கள் செலவிடுவது, அவர்களது குடும்ப வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள பத்து அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருங்கள்:

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதி எது? என்ற கேள்வியை கேட்டால், “அப்படி எந்த பகுதியும் இந்த உலகில் கிடையாது” என்பதுதான் உண்மையான பதில்.

வீட்டில் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதம் ஏற்படலாம். நடந்து செல்லும் போது ரோட்டில் அசம்பாவிதம் ஏற்படலாம். பயணிக்கும்போதும் பிரச்சினை ஏற்படலாம். வேலைபார்க்கும் இடத்திலும், ஓட்டல் போன்று தங்கும் இடத்திலும் பாதுகாப்புமின்மை ஏற்படலாம்.

அதனால் எங்கு, எப்போது, எப்படி பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும் என்று சொல்ல முடியாது. எப்போதும், எதுவும் நடக்கலாம். ஆனால் இதை நினைத்து யாரும் பயப்படவேண்டியதில்லை. எப்போதும் விழிப்புடன் இருக்க உடலையும், மனதையும் விழிப்பாக வைத்திருக்கவேண்டும்.

உடலை விழிப்பாக வைத்திருப்பது என்பது, முறையான உடற் பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது. ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடல், பலமானதாக இருக்கும். அதற்காக நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மனம் விழிப்பாக இருக்க தியானம், யோகாசனம் போன்றவை தேவை. தியானம் செய்யும் பெண்களின் உள்ளூணர்வு மிக சிறப்பாக வேலை செய்யும். அதன் மூலம் அவர்கள் அதிக விழிப்புணர்வை பெறலாம். மனதும், உடலும் விழிப்பாக இருந்தால் எல்லா நெருக்கடியான சூழ்நிலைகளையும் பெண்களால் சமாளிக்க முடியும்.

எங்கேயும், எப்போதும் பதற்றம் வேண்டாம்:

தன் கண் முன்னே என்ன நடந்தாலும், தனக்கோ- தன் உறவினர்களுக்கோ என்ன நேர்ந்தாலும் பதற்றம் அடைந்துவிடாதீர்கள். பதற்றமடைந்து விட்டால் பயம் வந்து விடும். பயம் வந்துவிட்டால் தெளிவான முடிவினை எடுக்க முடியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது தெளிவற்ற முடிவினை எடுத்திருந்தால், அதற்கு உங்கள் பதற்றம்தான் காரணமாக இருக்கும். பதற்றமின்றி யோசித்தால் தெளிவான, சரியான முடிவுகளை எடுக்கமுடியும்.

தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது:

வாழ்க்கையில் பெண்கள் பணத்தை இழக்கலாம். பதவியை இழக்கலாம். உறவுகளை கூட இழக்கலாம். ஆனால் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. சரித்திர காலத்தில் இருந்து இந்த காலம் வரை, வாழ்க்கையில் தோற்றுப் போனதாக கருதப்பட்ட பல பெண்கள் மீண்டும் எழுந்து வந்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்ததுதான். ஒரு சாதாரண சுண்டெலிகூட உயிர் போகும் நேரத்திலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உயிர்தப்ப போராடும். ஆனால் பல பெண்கள் சாதாரண பிரச்சினைகளுக்கே தன்னம்பிக்கையை இழந்து நடைபிணம்போல் ஆகிவிடுகிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும். பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு உதாரணமாக தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டவேண்டும்.

உறவுகளை மேம்படுத்துங்கள்:

இப்போது பெரும்பாலான உறவுகள் செல்போன் உறவுகளாகத்தான் இருக்கின்றன. செல்போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதும், வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கையாகிக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் திருமணங்கள்கூட செல்போன் வழியாக நடந்து விடும் நிலை உருவாகிவிடும். அதனால் செல்போனில் உறவாடுவதை குறைத்து நேரடியாக உறவினர்களை சந்திப்பதையும், பேசுவதையும், உணர்வுகளை பகிர்ந்து கொள்வதையும் அதிகரியுங்கள். நீங்கள் ஒரு மணி நேரம் செல்போனில் செலவிட்டால் உங்கள் குழந்தைகள் நான்கு மணி நேரத்தை செலவிடும். உங்கள் கணவர் மூன்று மணி நேரத்தை செலவிடுவார். அப்படிப்பட்ட நிலை உருவாகும்போது உங்கள் வீட்டிற்குள்ளே மூன்று பேர் இருந்தால், மூன்று பேரும் மூன்று தீவுகள் போல் ஆகிவிடுவீர்கள்.


பிடிவாதம் பிடியுங்கள்:

பொதுவாக குழந்தைகளிடம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று கூறுவோம். ஆனால் பெண்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டும். நல்லவைகளை செய்ய, தேவையற்றவைகளை கைவிட, நல்ல கொள்கைகளுக்காக அவர்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டும். அந்த நல்ல செயலை செய்துமுடிக்கும் வரை பிடிவாதத்தை கைவிடாதீர்கள். பிடிவாதம் பிடித்து, உங்களிடம் இருக்கும் தேவையற்ற பழக்கத்தைகூட கைவிடலாம்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்:

வழக்கம்போல் எல்லாம் இயல்பாக நடந்துகொண்டிருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. பிரச்சினைகள் வரவேண்டும். மோதல்கள் வரவேண்டும். தொல்லைகள் வரவேண்டும். பிரச்சினைகளை நீங்களாக உருவாக்காமல், அதுவாக வந்தால் மனம் தளர்ந்து போகாதீர்கள். கற்ற கல்வியும், பெற்ற வாழ்க்கையும், கிடைத்த அனுபவங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவையான சக்தியை பெண்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளியாதீர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். அதை நேரடியாக சமாளியுங்கள். உங்களால் முடியும். நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால் பிரச்சினைகளே உங்களை கண்டு விலகிப்போய்விடும். பிரச்சினைகளை கண்டு பயந்தால், தெரு நாய் போன்று அது உங்களை துரத்தத்தான் செய்யும்.

செயலால் பதிலடி கொடுங்கள்:

உங்களை யாராவது குறைவாக மதிப்பிட்டால், அவர்களுக்கு பேச்சால் பதிலடி கொடுக்க வேண்டாம். செயலால் பதிலடி கொடுங்கள். மல்யுத்த விளையாட்டில் ஈடுபட சாக்‌ஷி மாலிக் விருப்பம் தெரிவித்தபோது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்து வீட்டினரும் ‘பெண்ணான நீ அடி வாங்கி விட்டு வந்து எங்கள் முன்னால் அழுது கொண்டு நிற்பாய்’ என்று கூறி, மல்யுத்தத்தில் அவர் பங்குபெறக் கூடாது என்றார்கள். அவர் பேச்சால் பதிலடிகொடுக்கவில்லை. மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களால் பதிலடிகொடுத்தார். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வாங்கி, இந்தியாவிற்கு பெருமையும் சேர்த்தார். அதுபோல் உங்களை யாராவது குறை சொன்னால் அவர்களுக்கு செயலால் பதிலடிகொடுத்து, உங்களை பாராட்டும்படி செய்யுங்கள்.


பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்:

பெண்மை என்பது மிகப்பெரிய அற்புதம். தாய்மை என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். உங்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது. உங்களால்தான் ஒவ்வொரு வீடும் இயங்கு கிறது. உங்களால்தான் ஒவ்வொரு அலுவலகங்களும் இயங்குகிறது. தாயாக, மனைவியாக, சகோதரியாக உங்களால்தான் உறவுகள் காப்பாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட பெண்மை என்னும் பெருமையை பெற்றிருக்கும் உங்கள் வாயில் இருந்து ‘நான் பெண்ணாக பிறந்ததால்தானே இப்படி எல்லாம் நடக்கிறது’ என்ற எதிர்மறையான வார்த்தை வந்துவிடக்கூடாது. ‘நான் பெண்’ என்று தலைநிமிர்ந்து நில்லுங்கள். நான் பெண் என்று தலை நிமிர்ந்து செல்லுங்கள்.

சமயோசிதமாக செயல்படுங்கள்:

நீங்கள் எவ்வளவு தைரியமிக்கவராக இருந்தாலும், சமயோசிதமாக செயல்பட கற்றுக்கொள்ளுங்கள். ஆபத்தான நேரங்களில் சமயோசிதம் உங்களை காப்பாற்றும். அதுபோல் உங்களை சுற்றி எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் சூழ்நிலைக்கு தக்கபடி சமயோசிதமாக செயல்படுங்கள். சமயோசிதமாக செயல்பட பக்குவம் தேவை. அது உங்களிடம் எப்போதும் இருக்கவேண்டும்.

உங்களுக்காக வாழுங்கள்:

கடந்த காலங்களில் பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர் களது பெற்றோருக்காக வாழ்ந்தார்கள். திருமணத்திற்கு பிறகு கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தார்கள். பின்பு பேரக் குழந்தைகளுக்காக வாழ்ந்தார்கள். மரணத்தின் கடைசி நிமிடம் வரை அவர்களுக்காக அவர்கள் வாழ்ந்ததில்லை. அது ஒரு வாழ்க்கை இல்லை. ஆன்மிக உணர்வுடன் சொன்னால் இது ஒரு அற்புதமான பிறவி. இந்த ஜென்மத்தை நீங்கள் முழுமைப்படுத்தவேண்டும் என்றால் உங்களுக்காக நீங்கள் வாழவேண்டும்.
தமிழ்நாட்டில் எப்போதுமே எந்த பிரச்சினைகள் தலையெடுத்தாலும், உடனடியாக அரசியல்கட்சிகள் ஆர்ப்பாட்டமாக அதுபற்றி அறிக்கை வெளியிடும்.

மார்ச் 21, 02:00 AM

தமிழ்நாட்டில் எப்போதுமே எந்த பிரச்சினைகள் தலையெடுத்தாலும், உடனடியாக அரசியல்கட்சிகள் ஆர்ப்பாட்டமாக அதுபற்றி அறிக்கை வெளியிடும். அரசு நடவடிக்கை எடுக்கிறேன் என்றுகூறும். ஆனால், இந்த வேகம் தொடர்ந்து இல்லாமல் போய் விடுவதால், முயற்சிகள் பட்டுப்போய் விடுகின்றன. அதேநேரத்தில் முதலில் முளைவிட்ட அந்தபிரச்சினை வேகமாக வளர்ந்து, ஒருகட்டத்தில் யாராலும் தடுக்க முடியாத வகையில் ஆழமாக வேரூன்றி விடுகிறது. அதுபோன்ற ஒரு பிரச்சினைதான் பவானிஆற்றின் குறுக்கே இப்போது கேரள அரசு தடுப்பணை கட்டிய விவகாரம். ஆரம்பத்தில் இருந்த வேகம் அரசிலும், அரசியல் கட்சிகளிடமும் இப்போது இல்லை. தமிழ்நாட்டில் ஆற்றுவளம் மிகமிகக் குறைவு. இருக்கும் கொஞ்சநஞ்ச ஆற்றுத் தண்ணீரை வைத்து தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையையும், விவசாயத்தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ‘தாமிரபரணி’ ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இதுபோல, உருவாகும் மற்றொரு ஆறு பவானி ஆறாகும். காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான பவானி ஆறு, நீலகிரி மாவட்டம், குந்தா மலைப்பகுதியில் அப்பர் பவானியில் உற்பத்தியாகி சிறிதுதூரம் தமிழ்நாட்டில் ஓடி, முக்காலி வழியாக கேரள வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. தமிழ்நாட்டில் உருவாகும் இந்த பவானி ஆறு, அட்டப்பாடி பள்ளத்தாக்கை வளப்படுத்தி மீண்டும் கிழக்குநோக்கித் திரும்பி அத்திக்கடவு வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடுகிறது.

கேரளாவில் ஒட்டுமொத்தமாக 22 கிலோமீட்டர் தூரம்தான் பவானி ஆறு ஓடுகிறது. கேரள அரசாங்கம் தங்கள் எல்லைக்குள் ஓடும் பவானிஆற்றில் தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி, சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கிவைக்க திட்டமிட்டது. இந்த 6 தடுப்பணைகளும் கட்டப்பட்டால், பவானி ஆற்றில் ஓடும் பெரும்பாலான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு தண்ணீரே வராதநிலை ஏற்பட்டு விடும். ஏனெனில், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையிலிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 2½ லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்களுக்கு நீர்ஆதாரம் பவானிஆற்றின் மூலமாகத்தான் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், தற்போது கேரள நீர்ப்பாசனத்துறை முதல் தடுப்பணையான தேக்குவட்டை தடுப்பணையை கட்டிமுடித்துவிட்டது. அட்டப்பாடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய தேவைகளுக்காக இந்த தடுப்பணையை கட்டுகிறோம் என்று காரணம் கூறுகிறது. 77 மீட்டர் நீளமும், 1½ மீட்டர் உயரமும் கொண்ட இந்த தடுப்பணை, கேரள அரசு திட்டமிட்ட 6 தடுப்பணைகளில் முதல் தடுப்பணையாகும்.

கோவையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பவானி ஆறு நுழைவதற்கு முன்னால் இந்த தடுப்பணை கட்டப்பட்டுவிட்டது. அடுத்த தடுப்பணையான மஞ்சிக்கண்டி தடுப்பணையிலும் வேகமாக வேலை முடிந்துவருகிறது. அந்தபணி இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று கருதப்படுகிறது. அதுவும் முடிந்து, அடுத்த 4 தடுப்பணைகளும் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டால், பவானி ஆற்றில் தண்ணீரை பார்க்கமுடியாது. வளமான பவானி ஆறு வறண்டுபோய் கிடக்கும் பவானி ஆறாகி விடும். பவானிஆறு காவிரி ஆற்றின் கிளை ஆறு என்றவகையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இருக்காமல், போர்க்கால நடவடிக்கை எடுத்து, இந்த தடுப்பணைகள் கட்டும் முயற்சியை தடுத்துநிறுத்தாவிட்டால், கொங்குமண்டலம் பஞ்சமண்டலாக ஆகப்போவதை தடுக்கவே முடியாது. இதற்கு சரியான தீர்வு வேண்டுமென்றால், இருமாநிலங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு சுமுகநிலையை உருவாக்க இரு மாநில முதல்–அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் ஒன்றாக உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய அரசாங்கமும் இதில் உரிய பங்காற்ற வேண்டும்.

Monday, March 20, 2017

சிட்டுக் குருவி

கொசுக்களை ஒழிக்கும் சிட்டுக்குருவி... அவற்றை அழித்தது யார்? #WorldSparrowDay

‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா.. அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா...’’ என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் நினைவின் இடுக்கில் இருந்து பட்டெனப் பறக்கும் ஒரு சிட்டுக்குருவி. மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. 
கூரைகள், வீடுகளின் முற்றங்கள், இடுக்குகளில் தனக்கான கூடுகளைத் தானே வடிவமைத்துக்கொண்டு காலையில், ‘க்வீச்...க்வீச்..’எனக் குட்டிக் குயிலாகத் துயிலெழுப்பும் சிட்டுக்குருவிகள் சத்தம் இன்றைக்குக் கேட்பது அரிதாகிவிட்டது. கிராமங்களிலேயே இந்த சத்தம் அரிதானபோது நகரங்களில் கேட்கவே வேண்டாம். உயிர்பன்மயத்தில் உடைந்துபோன கண்ணிகளை ஒட்ட வைக்கும் முயற்சியில் உலகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருகட்டமாக சிட்டுக்குருவி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக டெல்லி அரசு இதை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

தென்னைஓலையின் நார் கிழித்து, சின்னஞ்சிறிய அலகால், கூடுகளைப் பின்னும் அழகே அலாதியானது. தானியங்கள், சிறிய பூச்சி இனங்கள், சில தாவரங்களின் பூக்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சிட்டுகளின் அழிவால், பயிர்களின் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, மகசூலும் குறைந்து வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி எனப் பலபெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள், காகத்திற்கு அடுத்து மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் பறவை. இவை அழிய, செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, குருவிகளின் கருவை சிதைக்கிறது எனச் சொல்லப்பட்டாலும் அவை, இன்னமும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், செல்போன் டவர்கள் வருவதற்கு முன்பாகவே குருவிகளை விரட்டிவிட்டன நமது செயல்கள்.
வெளிக்காற்று உள்ளே வராமல் குளிரூட்டப்பட்ட வீடுகள், நெருக்கமான வீடுகள், முற்றம் இல்லாமல் முழுவதுமாக மூடிய வீடுகள், மரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் சிட்டுகள் நகரங்களில் இருந்து நகர்ந்துவிட்டன. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் ‘மெத்தைல் நைட்ரேட்’ காற்றில் கலந்து வளிமண்டலங்களை மாசுபடுத்துகின்றன. 

இதனால், சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும் சில பூச்சி இனங்கள் அழிந்துபோகின்றன. இதனால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை சிட்டுக்குருவையை நகரங்களை விட்டு விரட்டிவிட்டது. பலசரக்குக் கடைகளில் சிந்திச்சிதறும் தானியங்களை உண்டுவந்தன. பல்பொருள் அங்காடிகள் வந்த பிறகு அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நகரங்களில் இருப்பதைப் போலவே கிராமப்பகுதிகளிலும் வாழவழியில்லை. கிராமப்பகுதிகளிலும், பயிர்களில் தெளிக்கும் ரசாயனங்கள், குறைந்துப்போன சிறுதானிய சாகுபடி ஆகியவை இந்த இனம் அழிய காரணமாகிவிட்டது. வேறு என்னதான் செய்யும் அந்தச் சின்னஞ்சிறிய உயிரினம்? வாழ்தலுக்காக உணவு கிடைக்கும் பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன. கொசுக்களின் முட்டை சிட்டுக்குருவிகளின் விருப்ப உணவு. குருவிகள் இல்லாததால், கொசுக்கள் கொட்டமடிக்கின்றன..நோய்கள் நம்மை வட்டமடிக்கின்றன. 

‘எத்தனை அடிச்சாலும் தாங்குறான்டா’ என வடிவேல் காமெடிபோல, இத்தனை இன்னல்களுக்கும் இடையில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன சிட்டுக்குருவிகள். அவற்றைக் காக்க வேண்டிய நமது சமூகக் கடமை. முதலில் நமது குழந்தைகளுக்குக் குருவிகளை அறிமுகம் செய்து வையுங்கள். கடிகாரத்திலேயே குருவியின் ஓசையை மணிக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது நம்மோடு போகட்டும். நம் குழந்தைகளாவது, சிட்டுகளின் சிம்பொனியைக் கேட்கட்டும். இதற்காக நாம் அதிகம் மெனக்கெடவேண்டாம். வாய்ப்பிருப்பவர்கள், வீடுகளில் சிட்டுக்குருவி தங்குவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுங்கள், வீட்டு மொட்டைமாடி, பால்கனி போன்ற இடங்களில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், கொஞ்சம் சிறுதானியங்களையும் வைத்தால் போதும் ஓடோடி வந்து உக்கார்ந்துவிடும் சிட்டுக்குருவி. பழைய பானைகள், அட்டைப்பெட்டிகள் என ஏதாவது ஒன்றில் சிறிது வைக்கோல் நிரப்பி ஒருமூலையில் வைத்து விட்டால், குருவிகள் அதில் குடியேறிவிடும். தற்போது கடைகளில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் கிடைக்கின்றன. நாம் மனது வைத்தால் நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம். அதற்குத் தேவை சிறிது தானியம், சிறிது தண்ணீர், பெரிய மனது.. இவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றனதானே..!
-ஆர்.குமரேசன்

NEWS TODAY 23.12.2025