Tuesday, March 21, 2017

ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்
ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு

சென்னை,:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்து உள்ளது.




முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்., 22 இரவில், உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.

ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூவர் மூலம் ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சென்னை,

அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஜோசப், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ஏழாவது அட்டவணை

இம்மனுக்கள், தற்காலிக தலைமை நீதிபதி, எச்.ஜி.ரமேஷ் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், சார்பு செயலர் மணிராம் தாக்கல் செய்த பதில் மனு:அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள, இரண்டாவது பட்டியலின்படி, 'பொது சுகாதாரம், மருத்துவமனைகள்' மாநில அரசின் கீழ் வருகிறது. அதன்படி, மாநில முதல்வருக்கு தேவையான மருத்துவ வசதியை அளிக்க வேண்டியது, மாநில அரசின் பொறுப்பு.

ஒப்பிடமுடியாது

மேலும், 'போலீஸ்' மற்றும் 'பொது ஒழுங்கு'ம் ஏழாவது அட்டவணைப்படி, மாநில அரசின் கீழ் வருகிறது. குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துவது, கிரிமினல்கள் மீது காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கும், மாநில அரசே பொறுப்பு.

எனவே, மாநில அரசுக்கு தான், இதில் முக்கிய பொறுப்பு உள்ளது. விசாரணை கமிஷன் சட்டப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதற்கு, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நேதாஜி இறந்த சம்பவம், சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்தது. நேதாஜி இறப்பையும், ஜெ., இறப்பையும் ஒப்பிட முடியாது. அவை இரண்டும் ஒன்று அல்ல. விசாரணை முடியும் வரை, ஜெ.,யின் உடலை பத்திரமாக வைத்திருக்கும்படியோ, குழு அமைக்கும்படியோ, எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. இந்த வழக்கில், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...