Saturday, April 1, 2017

பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை : குஜராத் அரசு!

குஜராத்தில் இனி பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என, அம்மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 1954ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்ட
மசோதாவில் திருத்தம் செய்து, பசுக்களை கடத்துதல் மற்றும் வதைசெய்தல் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதிலிருந்து பசுவதை செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து புதிய சட்ட மசோதாவாக இன்று மார்ச் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை குஜராத் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும், பசு கடத்தலுக்கு பயன்படும் வாகனத்தை நிரந்தரமாக பறிமுதல் செய்யும்படியும் சட்டம் திருத்தப்பட்டு பின்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்றபெயரில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் பசுவை கொள்வதற்கும், மாட்டிறைச்சிக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன??
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:

*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.


* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.


*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.


* பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* பெருநகர எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

* நகரவாழ் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, ரூ.3000 வைத்திருக்க வேண்டும்.

* சிறுநகர எஸ்.பி.ஐ., வாடிக்கை வாடிக்கையாளர்கள் ரூ.2000 வைத்திருக்க வேண்டும்.

* கிராமப்பகுதி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வைப்பத்தொகை ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட வைப்பு தொகை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

* காற்று மாசை குறைக்க பி.எஸ்., 4 வகை வாகனங்கள் விற்கும் உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுள்ளது..

* தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்! சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்



ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று, முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல், பழைய குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதற்குப் பதில், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், குடும்ப அட்டையில் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது.

இதனிடையே, குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. பல இடங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் தயாரானது.



இந்த நிலையில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, சென்னை கொரட்டூரில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வங்கிக் கணக்கு முதல் ரயில் பயணம் வரை... இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்!’


2017-18-ம் ஆண்டிற்கான நிதி ஆண்டின் பல்வேறு கட்டண மாற்றங்கள், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. புதிதாக வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகை 41 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் இன்று முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. மேலும், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை வங்கி இருப்பாக வைத்திருப்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி மாநகரப் பகுதிகளில் இருக்கும் வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையை 5,000 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ஆயிரம் ரூபாயும், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை உறுதியாகவில்லை என்றால் அவர்களுடைய முன்பதிவு ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப அளிக்கும் வழக்கம் அமலில் இருந்தது. தற்போது, ரயில் புறப்படும் வரை இருக்கை உறுதியாகாத பட்சத்தில் அவர்கள் அடுத்த ரயிலில் பயணிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பதவியில் அமர்ந்த ராமமோகன ராவ்! - டெல்லி லாபியை வளைத்த பின்னணி 
VIKATAN 


தலைமைச் செயலகத்தில் வைத்தே ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான பெருமைக்குரியவர் ராமமோகன ராவ் ஐ.ஏ.எஸ். 100 நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர், நேற்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணி அமர்த்தப்பட்டிருக்கிறார். ‘அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. சசிகலா தரப்பை வளைப்பதற்காக, அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது டெல்லி லாபி மூலம் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்’ என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்த ராமமோகன ராவ், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் கட்டளைகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவே அவருக்குப் பதவி வழங்கப்பட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் பேசி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் ஜெயலலிதா. அடுத்த ஒரே வாரத்தில் வேலூரைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியை வளைத்தது மத்திய அமலாக்கத்துறை. அவருடைய சென்னை அலுவலகம் உள்பட அனைத்து இடங்களையும் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் ஆராய்ந்தது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தின. சேகர் ரெட்டி, பிரேம் குமார், சீனிவாசலு என ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டனர். இதன் நீட்சியாக சேகர் ரெட்டியின் வர்த்தகத் தொடர்புகளுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இதன்பின்னர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் உதவியோடு, தலைமைச் செயலகத்திலும் அதிகாரிகள் ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், 'என்ன ஆவணங்கள்?' என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ராமமோகன ராவ் மகனின் வர்த்தக நிறுவனங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

“வருமான வரித்துறையின் நடவடிக்கைகளில் ராமமோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆவணங்களைக் காட்ட முடியவில்லை. ஆனால், சேகர் ரெட்டியைக் காரணமாக வைத்துக் கொண்டு, 'தன்னைக் கைது செய்து விடுவார்கள்' என அஞ்சியவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கிவிட்டார். அப்போது அவரைச் சந்தித்த ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள், சில ஆலோசனைகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் ராமமோகன ராவ். இந்த சந்திப்பில், ‘ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்தில் இப்படியொரு ரெய்டு நடந்திருக்குமா? என் வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. இன்னமும் நான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாரும் பதவியை விட்டு நீக்க முடியாது. ரெய்டு நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான மிரட்டலுக்கு ஆளானேன்' என பகிரங்கமாகப் பேட்டியளித்தார். அவரது துணிச்சலை வருமான வரித்துறை அதிகாரிகளோ, அமலாக்கத்துறை அதிகாரிகளோ எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் மீதான நடவடிக்கைகளை வேகப்படுத்தவில்லை. அவரது மகனை மட்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவழைத்தனர்.



மாநில அரசும் அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் மட்டும் வைக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ‘என் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என்னைத் தேடி வந்து சஸ்பெண்ட் ஆர்டரைக் கொடுக்கச் சொல்லுங்கள்' என தன்னை சந்திக்க வருகின்றவர்களிடம் கொந்தளிப்பைக் காட்டி வந்தார் ராமமோகன ராவ். இதன்பிறகு, தனக்கு நெருக்கமான டெல்லி வட்டார அதிகாரிகள் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றார். ‘அவர் பதவிக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை' என கிரீன் சிக்னல் கிடைத்ததும், அவருக்கான உத்தரவு வேகமாகத் தயாராகியது. அவருக்கான டெல்லி உதவிகளைச் செய்ததில், முன்னாள் மாண்புமிகுவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலகத்தில் வலம் வருகிறது. 'புதிய பதவிக்கு வரப் போகும் ஐ.ஏ.எஸ்கள் யார்?' என்ற விவாதமும் நடந்து வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காமல் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்" என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

ராமமோகன ராவ் பதவிக்கு வந்தது குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோவிடம் பேசினோம். “பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த தவறுகளை முழுமையாக அறிந்தவர் ராமமோகன ராவ். அந்த தைரியத்தில்தான், 'நான் இன்னமும் தலைமைச் செயலாளர்' எனப் பேட்டி அளித்தார். இவ்வளவு ஊழல்களைச் செய்துவிட்டு, துணிச்சலாக பேசுகிறார் என்றால், ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பதுதான் காரணம். 'நான் சிக்கினால், உங்களையும் சேர்த்தே நான் சிக்க வைப்பேன்' என்பதுதான் அவருடைய வாதம். பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் வழிக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதற்காக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு வழிநடத்தியது.

தலைமைச் செயலாளர் தவறு செய்திருந்தாலும், ரெய்டு நடவடிக்கையில் இறங்குவது குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் சொல்லியிருக்க வேண்டும். அப்படி எந்தத் தகவலையும் அவர்கள் சொல்லவில்லை. அரசின் ஊழல்களை விரிவாக அறிந்தவர் ராமமோகன ராவ். அரசுக்கு எதிராக அவர் கருத்துக்களைப் பேசியபோதே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகளின்படியே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 'ஏன் இவ்வளவு நாட்கள் இவர்கள் அமைதியாக இருந்தார்கள்?' என்பதே ரகசியம்தான். அவர் மீது அம்பு எய்தால், நம்மை நோக்கியே அந்த அம்பு பாயும் என்ற பயம்தான், அவருக்குப் பதவி கொடுக்கக் காரணம். மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால்தான் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகளைப் பணிய வைத்துப் பதவிக்கு வருவது என்பது சரியான வழிமுறை அல்ல" என்றார் நிதானமாக.

-ஆ.விஜயானந்த்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் இதன் இலவச ஆஃபர் முடிவதாக இருந்தது. இதையடுத்து மார்ச் 31-ம் தேதி வரை (இன்று) இதன் இலவச ஆஃபர் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இலவச ஆஃபர் முடிந்த பிறகு, ரூ. 99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் ஆஃபர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது.



இதனையடுத்து, ஜியோ இலவச ஆஃபர் இன்றுடன் முடியும் நிலையில், ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராவதற்கும் இன்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது. இந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) + ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்), அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.

மேலும், தற்போது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?




மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தங்கள் உத்தரவுகளில் ரொம்ப ஸ்டிரிக்ட். ஒரு தேதி சொன்னால், அதற்கு மேல் நேரம் கொடுப்பதில்லை. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ அப்படி அல்ல. டிசம்பர் 31 அன்று வரை இலவச டேட்டா, கால்கள் என்றார்கள். அடுத்து அதை மார்ச் 31 வரை நீட்டித்தார்கள். பின் 99ரூபாய் கட்டணம் செலுத்தினால் பிரைம் மெம்பர் ஆகலாம் என்றார்கள். இதோ, அடுத்த சலுகையையும் அறிவித்துவிட்டார்கள். ஏப்ரல் 15 வரை பிரைம் மெம்பர் ஆவதற்கான காலக்கெடுவை தளர்த்தியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல… ஏப்ரல் 15க்குள் பிரைம் மெம்பர் ஆகி, 303ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் இலவச சேவை தொடரும் என்கிறது ஜியோ.

இன்னும் பிரைம் மெம்பர் ஆகாதவரா நீங்கள்?

ஜியோவின் சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 99 ரூபாய் பிரைம் கட்டணத்துடன், 303 ருபாய் ரீசார்ஜ் செய்துவிடுங்கள். அதன்படி, அடுத்த மூன்று மாதங்கள் ஜியோ சேவைகள் இலவசமாக கிடைக்கும். பிரைம் கட்டணம் 99 உடன், 303 ரூபாய் சேர்த்து கட்டினால் மூன்று மாதங்கள் இணையச்சேவைகள் கிடைக்கும். மாதம் 133ரூபாய்க்கு தினம் 1ஜிபி டேட்டாவும், இலவச கால்களும் கிடைக்கும். இந்த மூன்று மாதங்களில் டேட்டா வேகம் குறைந்தாலோ, சேவையில் பிரச்னை இருந்தாலோ நீங்கள் ஜியோவில் இருந்து வெளியேறலாம்.

303 ரூபாய் கட்ட நான் தயாரில்லை… பிரைம் உறுப்பினராகவும் ஆக மாட்டேன் என்பவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இலவச சேவைகள் தொடரும். அதன் பின் கிடையாது.



நீங்கள் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிட்டீர்களா?

ஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 303 ரூபாய் ரீசார்ஜ் செய்யுங்கள். ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இதுவரைக்கும் நீங்கள் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். அதன்பின் நீங்கள் கட்டியிருக்கும் 303 ரூபாய்க்கான பீரியட் தொடங்கும். ஆக, ஏப்ரல் 10 ஆம் தேதி நீங்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஜூலை 10 ஆம் தேதிதான் உங்கள் பெய்ட் பீரியட் தொடங்கும். அதன் பின் 28 நாட்களில் உங்கள் வேலிடிட்டி முடியும். மீண்டும் 303 ரூபாய் கட்ட 28 நாட்களுக்கு சேவைகளை பெறலாம்.

இது தவிர கீழ்கண்ட பிளான்கள் பிரைம் யூஸருக்கு உண்டு.

Rs 19 plan: ஒரு நாள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், 20 எம்.பி 4ஜி டேட்டா

Rs 49 plan: 3 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 600 எம்.பி 4ஜி டேட்டா

Rs 96 plan: 7 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 7 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…

Rs 149 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 2 ஜிபி 4ஜி டேட்டா

Rs 303 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 28 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…

Rs 499 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 56 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை மட்டுமே…

ஜியோவின் இலவச காலம் முடிவுக்கு வந்தால் தான் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் பிளான்களோடு ஒப்பிட முடியும். மார்க்கெட்டும் ஒரு கட்டுக்குள் வரும். ஆனால், அடுத்தடுத்து ஜியோ இலவச காலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மற்ற நிறுவனங்கள் செய்வதறியாமல் இருக்கிறார்கள். ஜியோவின் அறிக்கை படி ஏற்கெனவே 7.2 கோடி பேர் ஜியோவின் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள். இந்த 15 நாட்களில் அந்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.


-கார்க்கிபவா

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...