Saturday, April 1, 2017

வங்கிக் கணக்கு முதல் ரயில் பயணம் வரை... இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்!’


2017-18-ம் ஆண்டிற்கான நிதி ஆண்டின் பல்வேறு கட்டண மாற்றங்கள், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. புதிதாக வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகை 41 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் இன்று முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. மேலும், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை வங்கி இருப்பாக வைத்திருப்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி மாநகரப் பகுதிகளில் இருக்கும் வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையை 5,000 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ஆயிரம் ரூபாயும், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை உறுதியாகவில்லை என்றால் அவர்களுடைய முன்பதிவு ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப அளிக்கும் வழக்கம் அமலில் இருந்தது. தற்போது, ரயில் புறப்படும் வரை இருக்கை உறுதியாகாத பட்சத்தில் அவர்கள் அடுத்த ரயிலில் பயணிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024