Wednesday, April 5, 2017

மதுரை: தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு, வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

தாலுகா மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை போன்றவற்றில் அதிக அளவில் செவிலியர் பற்றாக்குறை இருப்பதால், அவற்றை நிரப்ப கடந்த பிப்., மாதம் அரசாணை (எண் 21, 32) வெளியிட்டது.அதில் 779 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு எப்போது, எங்கு நடைபெறும் என்ற விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் முறையான கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பே, தரகர்களாக செயல்படும் செவிலியர் சங்கங்களில் நிர்வாகிகள், அரசியல்வாதிகள் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: கடந்த 2007ல், செவிலியர் பணியிடங்களை நிரப்பும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டது.

அதில் காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்களை சுகாதாரத்துறையின் இணையத்தளத்தில் ஒவ்வொரு மாத இறுதியிலும் வெளியிட வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி, இடம் உள்ளிட்ட விபரங்களை சுகாதாரத்துறை அலுவலக தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.

ஆனால் பெரும்பாலான விதிமுறைகளை சுகாதாரத்துறை கடைபிடிப்பதில்லை. லஞ்சம் கொடுத்து பணியில் சேரும் செவிலியர்கள் அதனை ஈடுகட்ட நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் நிலை உள்ளது, என்றார்.
கலந்தாய்வு நடத்தாமல் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை ரத்து செய்து, முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசின், 'இ - -சேவை' மையங்களில், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், மாநிலம் முழுவதும், 303, 'இ - -சேவை' மையங்கள் அனைத்து தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.

வருமானம், இருப்பிடம், ஜாதி, முதல் பட்டதாரி சான்றிதழ்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை, கட்டணம் செலுத்தி, இங்கு மக்கள் பெறுகின்றனர்.பல்வேறு மாவட்டங்களில், 'எல்காட்' சேவை ஏப்., 1 முதல், கேபிள் கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 'இ- - சேவை' மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், ஏப்., 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக, கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.இதன்படி, 10 மற்றும் 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம், 5 ரூபாய் வரையும், 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு, 10 ரூபாய் வரையும் உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட சேவைக்கு, 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
 பெண்ணுக்கு கருணை பணி வழங்க உத்தரவு

மதுரை: 'திருமணமான பெண்ணிற்கு, நான்கு வாரங்களில் கருணை பணி வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி யில், டிரைவராக பணியாற்றிய பிச்சை, 2008 மார்ச், 17ல் இறந்தார். அவரது மகள் யசோதை, கருணைப் பணி நியமனம் கோரி, வங்கி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். நடவடிக்கை இல்லாததால், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலிக்க, 2014ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
வங்கி நிர்வாகம், 'தந்தை இறந்தபோது, மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆதலால், கருணைப் பணி கோர தகுதி இல்லை' எனக் கூறி நிராகரித்தது.

இதை எதிர்த்து, உயர்நீதிமன்றக் கிளையில் யசோதை மனு தாக்கல் செய்தார். மனுதாரருக்கு பணி வழங்க, 2015ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர், 30 வயதை கடந்து விட்டார்' எனக் கூறி நிராகரித்தார். அதை எதிர்த்து, யசோதை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பதிவாளரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றக் கிளை, யசோதைக்கு பணி வழங்க மீண்டும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வங்கி சார்பில், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள், ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு அடங்கிய அமர்வு விசாரித்தது. வங்கி தரப்பில், 'வங்கியின் துணை விதிகளின்படி கருணைப் பணி வழங்க வழிவகை இல்லை; பணிக்குரிய வயதை கடந்து விட்டார். அவர் நிவாரணம் கோர முடியாது' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:திருமணத்தை காரணமாகக் கூறி, கருணைப் பணி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மனுதாரர், 30 வயதை கடந்ததால், அவர் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. தனி நீதிபதி விசாரிக்கும்போது, வயது பற்றி வங்கி தரப்பில் தெரிவிக்கவில்லை.

 கருணைப் பணிக்கு, அதிகபட்ச வயது, 40 என வங்கியின் துணை விதிகளில் உள்ளது. இதை கருதியே, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த கோணத்தில் பார்த்தாலும், தனி நீதிபதியின் உத்தரவில் குறைபாடு காண முடியாது. வங்கியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.மனுதாரர், நீண்ட நாட்களாக நியாயம் கோரி, இந்நீதிமன்றத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு, நான்கு வாரத்திற்குள் பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.
 ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் இனி பெண்கள் 'ராஜ்யம்'

சிவகங்கை: பெரும்பாலான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம்பெற்றுள்ளனர். மேலும் பெயர், முகவரி என, அனைத்திலும் குளறுபடியாக உள்ளது.இதில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்து 'ஸ்மார்ட்' கார்டு ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான 'ஸ்மார்ட்' கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆதாரில் உள்ள விபரங்களே பதியப்பட்டுள்ளதால், பல குளறுபடிகளும் அரங்கேறியுள்ளன. குடும்பத் தலைவராக இடம்பெற்ற பெண்களுக்கு அவரது தந்தை ஊரின் முகவரியே உள்ளது. இதனால் பலரது கார்டுகளில் பெயர், மாவட்டம், தாலுகாக்கள் மாறியுள்ளன. ஏராளமான எழுத்து பிழைகளும் உள்ளன.

இதுகுறித்து கேட்ட கார்டுதாரர்களிடம் வழக்கம்போல் 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது,' என கூலாக, வழங்கல்துறை அலுவலர்கள் பதிலளித்து வருகின்றனர்.

கார்டுதாரர்கள் கூறுகையில், ' கணவர் வெளிநாட்டில் இருந்தால் (அ) இறந்தால் தான் குடும்பத் தலைவராக மனைவி இடம் பெறுவர். ஆனால் கணவர் ஊரில் இருந்தும் 'ஸ்மார்ட்' கார்டில் குடும்பத் தலைவராக பெண்கள் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்,' என்றனர்.

வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதால் ஏராளமான தவறுகள் உள்ளன. ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி முழுவதும் கணினிமயமாகி விட்டது. இதனால் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. 'ஆன்லைன்' மூலம் தான் 'ஸ்மார்ட்' கார்டில் திருத்தம் செய்ய முடியும். விரைவில் அதற்கான உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.
 ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம்: அதிகாரி விளக்கம்

வங்கிகளில், 2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் பரிமாற்றம் செய்தால், 100 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்ற, மத்திய அரசின் விதிமுறை, தபால் துறை, கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது' என, அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க, இரண்டு லட்சத்துக்கும் மேல் பண பரிமாற்றம் செய்ய தடை விதித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஏப்., 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இவ்விதிமுறை, அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துமா என, குழப்பம் நிலவியது.இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் உதவி மைய தலைவர் வணங்காமுடி கூறியதாவது: பொதுத்துறை வங்கியான, 'ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா'வில் மட்டுமே, இவ்விதிமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிலும், தனிப்பட்ட டிபாசிட் கணக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும். சம்பள கணக்காளர்கள், பேங்கிங் கம்பெனி, கூட்டுறவு வங்கி, தபால் துறையின் சேமிப்பு வங்கி மற்றும் அரசுத்துறை சார்ந்த பண பரிமாற்றங்களுக்கு நிச்சயம் பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(ஏப்.,5) முடிகிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல், நடக்கிறது. இதற்கான, 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 1ல் முடிந்தது. இந்தத் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க, தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. அதனால், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்று(ஏப்.,5) வரை நீட்டிக்கப்பட்டது. இன்று நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும்.

'தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தால், வரும் கல்வி ஆண்டில், மருத்துவச் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்கலாம்' என, கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் ரிசார்ட்டுகள் 'ஹவுஸ்புல்'

ஏற்காடு: பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கான, 'புக்கிங்' முடிந்து விட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள, சுற்றுலா தலமான ஏற்காடுக்கு, ஏப்ரல், மே மாதங்களில், பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணியர் படையெடுப்பது வழக்கம். நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், ஏற்காடுக்கு வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

 இங்கு அரசின் அனுமதி பெற்ற ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என, 105 மட்டுமே உள்ளன. அனுமதி பெறாத ரிசார்ட்டுகள், 450. இவை தவிர ரிசார்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ள வீடுகள், 500க்கும் மேற்பட்டவை உள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வரும் சனி, ஞாயிற்றுகிழமைகளுக்கு, அனைத்து ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ரிசார்ட்டுகள் பெயரில் இயங்கி வரும் வீடுகளுக்கு, தற்போது புக்கிங் நடந்து வருகிறது. ஏப்.,14 சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, ஏப்.,13 - 16 வரை, அனைத்து ரிசார்ட்டுகளின் முன்பதிவும் முடிந்து விட்டது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...