Wednesday, April 5, 2017

 பெண்ணுக்கு கருணை பணி வழங்க உத்தரவு

மதுரை: 'திருமணமான பெண்ணிற்கு, நான்கு வாரங்களில் கருணை பணி வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி யில், டிரைவராக பணியாற்றிய பிச்சை, 2008 மார்ச், 17ல் இறந்தார். அவரது மகள் யசோதை, கருணைப் பணி நியமனம் கோரி, வங்கி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். நடவடிக்கை இல்லாததால், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலிக்க, 2014ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
வங்கி நிர்வாகம், 'தந்தை இறந்தபோது, மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆதலால், கருணைப் பணி கோர தகுதி இல்லை' எனக் கூறி நிராகரித்தது.

இதை எதிர்த்து, உயர்நீதிமன்றக் கிளையில் யசோதை மனு தாக்கல் செய்தார். மனுதாரருக்கு பணி வழங்க, 2015ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர், 30 வயதை கடந்து விட்டார்' எனக் கூறி நிராகரித்தார். அதை எதிர்த்து, யசோதை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பதிவாளரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றக் கிளை, யசோதைக்கு பணி வழங்க மீண்டும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வங்கி சார்பில், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள், ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு அடங்கிய அமர்வு விசாரித்தது. வங்கி தரப்பில், 'வங்கியின் துணை விதிகளின்படி கருணைப் பணி வழங்க வழிவகை இல்லை; பணிக்குரிய வயதை கடந்து விட்டார். அவர் நிவாரணம் கோர முடியாது' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:திருமணத்தை காரணமாகக் கூறி, கருணைப் பணி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மனுதாரர், 30 வயதை கடந்ததால், அவர் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. தனி நீதிபதி விசாரிக்கும்போது, வயது பற்றி வங்கி தரப்பில் தெரிவிக்கவில்லை.

 கருணைப் பணிக்கு, அதிகபட்ச வயது, 40 என வங்கியின் துணை விதிகளில் உள்ளது. இதை கருதியே, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த கோணத்தில் பார்த்தாலும், தனி நீதிபதியின் உத்தரவில் குறைபாடு காண முடியாது. வங்கியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.மனுதாரர், நீண்ட நாட்களாக நியாயம் கோரி, இந்நீதிமன்றத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு, நான்கு வாரத்திற்குள் பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024