Friday, April 20, 2018

மோசடியாக திருமண பதிவு சார் பதிவாளர் 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 19, 2018 23:01

சென்னையில், விதிகளை மீறி, 2,000 திருமணங்களை பதிவு செய்த புகாரில், பம்மல் சார் பதிவாளர், வசந்தகுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும், திருமணங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்கள் பல்வேறு விதிமீறல்களில், ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருப்பினும், சில சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து, மோசடி திருமண பதிவு நடப்பதாக புகார்கள் வந்தன.இது தொடர்பாக நடந்த விசாரணையில், பம்மல், மாதவரம் சார் பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட கால வரையறையில், 2,000 திருமணங்கள் பதிவானது தெரிய வந்தது. இலங்கையை சேர்ந்த நபர்களின் திருமண பதிவுக்கு, காவல் துறையின் தடையின்மை சான்று இல்லாமல், சார் பதிவாளர், தன்னிச்சையாக விதிகளை மீறி, திருமணங்களை பதிவு செய்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து, பம்மல் சார் பதிவாளர், வசந்தகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, மாநிலம் முழுவதும் மோசடி திருமண பதிவுகளை மேற்கொண்ட, சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என, கூறப்படுகிறது. - நமது நிருபர் -
வயதிற்கேற்ப ஓய்வூதியம் உயர்த்த விதிகளில் திருத்தம்

Added : ஏப் 19, 2018 22:40

சென்னை, ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 80 முதல், 84 வயதிற்கு உட்பட்டோருக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில், 20 சதவீதம்; 85 முதல், 89 வயது வரை உள்ளோருக்கு, 30 சதவீதம்; 90 முதல், 94 வயது வரை உள்ளோருக்கு, 40 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், 95 முதல், 99 வயது வரை உள்ளவர்களுக்கு, 50 சதவீதம்; 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 100 சதவீதம், உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும், பணிக்கொடை பலன் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தால், இரண்டு மடங்கு மாத சம்பளம்; ஓராண்டுக்கு மேல், ஐந்தாண்டுக்குள் இறந்தால், ஆறு மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல், ஐந்தாண்டு முதல், 11 ஆண்டுக்குள் இறந்தால், 15 மடங்கு மாத சம்பளம்; 20 ஆண்டுக்கு மேல் இறந்தால், அதிகபட்சமாக, 33 மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
'யானை கருணை கொலை கூடாது'

Added : ஏப் 19, 2018 22:38

சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி, 42, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகிறது.இது தொடர்பான வழக்கில், யானையை கருணைக் கொலை செய்வதற்காக, அதன் உடல்நிலை குறித்த அறிக்கையை அனுப்ப, உயர் நீதிமன்றம்அறிவுறுத்தியது.சேலம், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் லோகநாதன் தலைமையில், மருத்துவக் குழுவினர், 12 மணி நேரம் ஆலோசித்து, நேற்று முன்தினம் அறிக்கை தயாரித்தனர். அது, நேற்று காலை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.கால்நடை அதிகாரிகள் கூறியதாவது:யானைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்த உடல் எடை, தற்போதைய உடல் எடை சேகரிக்கப்பட்டது.தற்போது, அதன் உடல் நலனில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதால், தொடர் சிகிச்சை அளிக்கிறோம்.அதனால், தற்போதைக்கு கருணைக் கொலை செய்யவேண்டாமென அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சித்ரா பவுர்ணமி - தி.மலையில் விரைவாக சுவாமி தரிசனம்

Added : ஏப் 19, 2018 22:35

திருவண்ணாமலை,''சித்ரா பவுர்ணமியன்று, அருணாசலேஸ்வரர் கோயிலில், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.சித்ரா பவுர்ணமிக்கு, திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் கந்தசாமி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலையில் வரும், 29 காலை, 6:58 முதல் மறுநாள் காலை, 6:52 வரை, சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேரம் உள்ளது.சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாம், என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் வசதி, 12 மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, மூன்று பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கோயிலினுள், பக்தர்கள் வரிசையில் நிற்கும் பாதை அகலப்படுத்தி, விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டம் முழுவதும், 2,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து, கிரிவலம் பாதைக்கு செல்ல, 40 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலையேறவும், மலையை சுற்றிலும், கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.பவுர்ணமி தினத்தில், 14 ரயில்கள், திருவண்ணாமலை வழியாக செல்கிறது. இந்த ரயில்களின், காலநேரம் குறித்து, முன்கூட்டியே அறிவிக்கப்படும். 45 இடங்களில், விவசாய நிலங்களில் குளிக்கும் வசதியுடன் கூடிய, தற்காலிக இலவச பாத்ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாருடன் 12 டிக்கெட் முன்பதிவு: ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஏப் 19, 2018 20:54

கோவை,: 'ரயில் பயணியர், ஆதார் எண்ணை இணைத்து மாதம்தோறும், 12 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், www.irctc.co.in எனும் இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து லட்சக்கணக்கானோர் தினமும் பயணிக்கின்றனர். இதில், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு வசதிகளும், சலுகைகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன.ரயில் பயணத்தில் ஆள் மாறாட்டம், டிக்கெட் முறைகேடு போன்றவற்றை கட்டுப்படுத்த, முன்பதிவு செய்வதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பயணி ஒருவர் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் பெறமுடியாது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிக்கெட்' முறைகேடுகளை கட்டுப்படுத்த, ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இணைய தளத்தில் ஆதார் எண்ணை இணைத்து, பயணி ஒருவர் மாதம்தோறும், 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம். ஆறு டிக்கெட் வரை பெற ஆதார் அவசியமில்லை' என்றார்.
சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம்

Added : ஏப் 20, 2018 04:15



திருமலை : கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் வி.ஐ.பி.,க்களின் சிபாரிசு கடிதங்கள் இன்று(ஏப்.,20) முதல் ஏற்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 16ம் தேதி வரை இது கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து. மேலும், வாரத்தில் மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி., தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்

20.04.2018

புதுடில்லி: கரன்சி தட்டுப்பாட்டைப் போக்க, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக் கும் பணி,முழுவீச்சில் நடப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.நாடு முழுவதும், பல மாநிலங்களில், திடீரென ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.




தெலுங்கானா, ம.பி., ஆகிய மாநிலங்களில், பல, ஏ.டி.எம்., இயந்திரங்களில், 20 நாட்களாக பணம் நிரப்பப்படவில்லை.

தமிழகத்திலும் கூட சில பகுதிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதை அடுத்து, ரூபாய் நோட்டு அச்சிடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. 'செக்யூரிட்டி பிரின்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம்' ரூபாய் நோட்டு அச்சிடும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக, 70 ஆயிரம் கோடி மதிப்புக்கு, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டு கள் அச்சிடும் பணி நடக்கிறது.4 அச்சகங்களில், இரவு - பகலாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின் றன.அச்சிடப்பட்ட நோட்டுகளை, சோதனை முடிந்த பின், உடனுக்குடன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணியும் நடக்கிறது.

'இந்த வார இறுதிக்குள், பணத்தட்டுப்பாடு நீங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.பி.ஐ., முதன்மை அதிகாரி, ரஜ்னிஷ்குமார் கூறுகையில், ''தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த மாநிலங்களில், ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு, ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. ''இன்று முதல், எஸ்.பி.ஐ.,கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களில், பண தட்டுப்பாடு இருக்காது,'' என்றார்.

NEWS TODAY 23.12.2025