Tuesday, April 24, 2018


கால் டாக்ஸியில் ரூ.14.7 லட்சத்தை தவறவிட்ட துபாய் பயணி: ஜாலியாக செலவு செய்து சிக்கிய ஓட்டுநர்

Published : 23 Apr 2018 15:18 IST

சென்னை



சௌதி ரியால், கைதான கால்டாக்சி ஓட்டுநர் மதன்குமார், கண்காணிப்பு கேமரா பதிவு படம்: சிறப்பு ஏற்பாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கால் டாக்ஸியில் பயணம் செய்த துபாய் பயணி ஒருவர் ரூ.14.7 லட்சத்தைத் தவறவிட்டார். அதை உரியவரிடம் ஒப்படைக்காமல் ஜாலியாக செலவு செய்த ஓட்டுநர் போலீஸாரிடம் சிக்கினார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோல் தொழில் செய்து வரும் தொழிலதிபர் அப்துல் ரஷீத் (40). இவர் துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடந்த மாதம் சென்னை வந்தனர், பின்னர் ரயிலில் கேரளா சென்றனர். இந்நிலையில் மீண்டும் துபாய் செல்ல கடந்த 13-ம் தேதி கேரளாவிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினர்.

அங்கிருந்து மதன் குமார் (39) என்பவரின் கால் டாக்ஸி மூலம் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் இறங்கிய அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் விமானத்தில் ஏறிவிட்டனர். அவர்களை ஏற்றிச்சென்ற கால் டாக்ஸியில் அப்துல் ரஷீத் தனது பை ஒன்றை தவறுதலாக விட்டு விட்டார். அதில் ரூ.14.75 லட்சம் மதிப்புள்ள 82 ஆயிரம் சவுதி ரியால் நோட்டுகள் இருந்தன.

மதன் குமாருக்கு பயணிகள் தவறவிட்டுச் சென்ற பை என்று தெரிந்தும் அதை போலீஸில் ஒப்படைக்க மனம் வரவில்லை. இரண்டு நாட்கள் அதை சும்மா வைத்திருந்த மதன் குமார் தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சவுதி ரியாலை இந்தியப் பணமாக மாற்றியுள்ளார்.

ரூ.12 லட்சம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் ரூ.1.5 லட்சத்தில் தனது மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தனது வீட்டு உரிமையாளரிடம் ரூ.5.5 லட்சத்தை கொடுத்து லீஸ் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். வழக்கம் போல் சென்ட்ரலில் கால் டாக்ஸியை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் பணத்தைப் பறிகொடுத்த அப்துல் ரஷீத் சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் தனது கைப்பையை 82,000 ரியாலுடன் கால் டாக்ஸியில் தவற விட்டுவிட்டதாகவும் அதை ஓட்டுநர் எதுவும் ஒப்படைத்தாரா? என்றும் கேட்டுள்ளார்.

போலீஸார் இல்லை என்று தெரிவித்து, அந்த கால் டாக்ஸியின் அடையாளம் தெரியுமா? என்று கேட்டபோது அதிகாலை என்பதால் ஞாபகத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் 13-ம் தேதி அதிகாலை ரயில் நிலைய வாசலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தபோது ஓட்டுநர் மதன் குமார் ரஷீதின் பையை தோளில் வைத்து தனது காருக்கு அழைத்துச்செல்வது தெரிய வந்தது.

உடனடியாக மதன் குமார் குடியிருக்கும் சூளை பகுதிக்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர். மதனிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கப் பணம், அவரது மனைவிக்கு வாங்கிக்கொடுத்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். பொதுவாக பயணிகள் தவறவிடும் பொருட்களை நேர்மையாக ஒப்படைக்கும் ஓட்டுநர்களைப் பார்த்த போலீஸாருக்கு மதன் குமாரின் செய்கை அதிர்ச்சி அளித்துள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரசை நம்பாதீங்க : இணைப்பு ரயில் தாமதத்தால் அவதி

Added : ஏப் 24, 2018 05:17

நாகர்கோவில்: கன்னியாகுமரி--சென்னை எக்ஸ்பிரஸ் தினமும் தாமதமாவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி ரயில்கள் உள்ளன. அனந்தபுரி ரயில் சென்னைக்கு காலை 8:00 மணிக்கு மேலும் செல்வதால், கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலையே பயணிகள் விரும்புகின்றனர். மாலை 5:20க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6:00 மணிக்கு சென்னை சென்றடையும்.பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இங்கிருந்து கன்னியாகுமரி எக்ஸ் பிரஸ் ரயிலாக புறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து வரும்போது கொல்லம் - திருவனந்தபுரம் இடையே பல சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கும் வழிவிட வேண்டியுள்ளதால் கன்னியாகுமரிக்கு குறைந்தது அரைமணி முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகிறது. இதனால் சென்னை செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கன்னியாகுமரி - சென்னை இடையே தனி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தெரியாமல் ஜெயித்து விட்டேன்! : புலம்பும் நடிகர் கருணாஸ்

Added : ஏப் 24, 2018 05:23

ராமநாதபுரம்: ''தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என்று இப்போது நினைக்கிறேன்,'' என நடிகரும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் புலம்பினார்.திருவாடானை தொகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து, கலெக்டர் நடராஜனை கருணாஸ் சந்தித்தார். பின் அவர் கூறுகையில், ''அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்குள் போக முடியவில்லை,'' என்றார்.'அப்படியானால் உங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே' என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு கருணாஸ்,''கடிதம் கொடுக்கவில்லை. தொகுதிக்கு எந்த பணியும் செய்ய முடியாமல் இந்த பதவி தேவையா என சட்டசபையில் பேசி விட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என நினைக்கிறேன். மாவட்டத்தில் எனக்கு பாதுகாப்பே இல்லை. தொகுதிக்குள் வரும் போது, நான்கு பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகின்றனர். கேட்டால், இன்னொரு சமுதாயத்தினர் எறிந்ததாக சொல்கின்றனர். அமைச்சர் மணிகண்டனால்தான் நான் தொகுதிப் பக்கமே வருவதில்லை.இவ்வாறு கூறினார்.முன்னதாக, தளிர்மருங்கூர் கிராமத்தினர் குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது, கருணாசை பார்த்து, 'நீங்கள் ஓட்டு கேட்க வந்தீர்கள் சார்... அதுக்கப்புறம் வரவே இல்லை' என்றனர்.
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

Added : ஏப் 24, 2018 02:36 | 



சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

மாநில செய்திகள்

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


t
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் 24, 2018, 05:00 AM

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.

அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும்.

இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.

இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாநில செய்திகள்

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி




தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஏப்ரல் 24, 2018, 05:45 AM

சென்னை,

அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- போராட்டத்தில் போலீசார் மீது எதார்த்தமாக நடந்த நிகழ்வை மட்டும் கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று உங்கள் மீது இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறாரே?

பதில்:- போலீசார் சீருடையில் இருக்கிற போது, கை வைப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் சட்டம் கையில் இருக்கிறது என்று போலீசாரும் வரம்பு மீறி போகக்கூடாது.

கேள்வி:- குருமூர்த்தி உங்களை சந்தித்தற்கு என்ன காரணம்?

பதில்:- குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். இதில் தனித்துவம் ஒன்றும் கிடையாது.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு, திரைத்துறையில் இருந்த நண்பர்கள் கூட உங்களை விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது.

கேள்வி:- சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள். கட்சி பணி எந்த நிலையில் இருக்கிறது. நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்:- மன்றத்துக்குள் நடக்கிற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் தெரியாது. கண்டிப்பாக உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்லாமல் அதை செய்ய முடியாது. சரியான காலத்தில் அதை தெரிவிப்பேன்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையே?

பதில்:- அது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது உண்மையானால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது.

கேள்வி:- கவர்னர் பெயரும் அடிபடுகிறதே?

பதில்:- அதை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.

கேள்வி:- பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை முகநூல், டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, அட்மின் பதிவு செய்ததாக மழுப்பலாக கூறி வருகிறார்களே...

பதில்:- தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதில் 2-வது கருத்தே கிடையாது.

கேள்வி:- கனிமொழி தொடர்பாக...

பதில்:- அது பற்றி, நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சந்தித்து பேசினார். காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், தற்போதைய தமிழக அரசியல் நிலை குறித்தும், தொடர்ந்து அரங்கேறி வரும் போராட்டங்கள் குறித்தும் 2 பேரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. சந்திப்பு முடிந்ததும் ஆடிட்டர் குருமூர்த்தியை வீட்டுக்கு வெளியே வந்து ரஜினிகாந்த் வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் எவ்வாறு செயல்படவேண்டும்? என்று ஆலோசனை வழங்கினார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் ரஜினி கண்டிப்புடன் கூறியதாக கூறப்படுகிறது.

காலா படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றார். அவர் தமிழகம் திரும்பியதும், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து விமானத்தில் அவர் துபாய் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் 2 வாரங் கள் தங்கி முழு உடல் பரிசோதனை செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, அமெரிக்கா, கனடாவை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அவர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார். ரஜினிகாந்து டன் அவரின் மகள் ஐஸ்வர்யா வும் சென்றார்.

இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களோடு ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் நிறைவடைந்த பின்னர் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும், கொடி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தலையங்கம்

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லையா?





உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

ஏப்ரல் 24 2018, 03:30 AM

ஜனநாயகத்தின் அஸ்திவாரம் என்னவென்றால், ‘உள்ளாட்சி அமைப்புகள்’ தான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கெல்லாம் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந்தேதியுடன் பதவிகாலம் முடிவடைந்தது. அக்டோபர் 17 மற்றும் 19–ந்தேதிகளில் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தநேரத்தில் தி.மு.க. சார்பில் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு அரசும் வார்டுகளை வரையறை செய்யப்போகிறோம் என்றுசொல்லி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் ஆகியோர்களுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், வார்டுகளின் தொகுதி வரையறைகளை உருவாக்குவதற்காகவும் பரிந்துரை செய்வதற்கு தொகுதிவரையறை ஆணையம் ஒன்றை அமைப்பதாக கூறி, அந்த சட்டத்தை அரசு நிறைவேற்றி தொகுதிவரையறை ஆணையமும் அமைத்துவிட்டது. இனி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்தபிறகுதான் தேர்தல் நடத்தமுடியும். இப்போது மறுவரையறை ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுவரையறை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வந்த 8 ஆயிரத்து 9 ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 642 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4 ஆயிரத்து 367 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. சென்னை மாநகராட்சி தவிர, மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10 ஆயிரத்து 952 ஆட்சேபணை மனுக்கள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 933 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் 7 ஆயிரத்து 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதேபோல, சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில், 586 ஆட்சேபணைகள் கருத்துருக்களில் 190 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், 20 மனுக்கள் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், மீதமுள்ள 376 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களையெல்லாம் பரிசீலனை செய்தபிறகுதான், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாசல் திறக்கப்படும். இந்த ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில் வார்டுகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அதற்குபிறகும் நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்தால், இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென்று தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டிய பெருமளவிலான நிதி கிடைக்காமல் போகும்நிலை ஏற்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். எனவே, மறுவரையறை பணிகளுக்காக ஆணையத்திற்கு வந்துள்ள ஆட்சேபணைகள், கருத்துருக்களை எவ்வளவு விரைவில் பரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரை அனுப்ப முடியுமோ? அவ்வளவு விரைவாக அனுப்பவேண்டும். அரசும் உடனடியாக இடஒதுக்கீடுகள் கூடிய மறுவரையறை ஏற்பாடுகளை செய்து ஆணை வெளியிடவேண்டும். ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த, மக்கள் வசதிகளைப்பெற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும்.

NEWS TODAY 25.12.2025