கால் டாக்ஸியில் ரூ.14.7 லட்சத்தை தவறவிட்ட துபாய் பயணி: ஜாலியாக செலவு செய்து சிக்கிய ஓட்டுநர்
Published : 23 Apr 2018 15:18 IST
சென்னை
சௌதி ரியால், கைதான கால்டாக்சி ஓட்டுநர் மதன்குமார், கண்காணிப்பு கேமரா பதிவு படம்: சிறப்பு ஏற்பாடு
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கால் டாக்ஸியில் பயணம் செய்த துபாய் பயணி ஒருவர் ரூ.14.7 லட்சத்தைத் தவறவிட்டார். அதை உரியவரிடம் ஒப்படைக்காமல் ஜாலியாக செலவு செய்த ஓட்டுநர் போலீஸாரிடம் சிக்கினார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோல் தொழில் செய்து வரும் தொழிலதிபர் அப்துல் ரஷீத் (40). இவர் துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடந்த மாதம் சென்னை வந்தனர், பின்னர் ரயிலில் கேரளா சென்றனர். இந்நிலையில் மீண்டும் துபாய் செல்ல கடந்த 13-ம் தேதி கேரளாவிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினர்.
அங்கிருந்து மதன் குமார் (39) என்பவரின் கால் டாக்ஸி மூலம் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் இறங்கிய அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் விமானத்தில் ஏறிவிட்டனர். அவர்களை ஏற்றிச்சென்ற கால் டாக்ஸியில் அப்துல் ரஷீத் தனது பை ஒன்றை தவறுதலாக விட்டு விட்டார். அதில் ரூ.14.75 லட்சம் மதிப்புள்ள 82 ஆயிரம் சவுதி ரியால் நோட்டுகள் இருந்தன.
மதன் குமாருக்கு பயணிகள் தவறவிட்டுச் சென்ற பை என்று தெரிந்தும் அதை போலீஸில் ஒப்படைக்க மனம் வரவில்லை. இரண்டு நாட்கள் அதை சும்மா வைத்திருந்த மதன் குமார் தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சவுதி ரியாலை இந்தியப் பணமாக மாற்றியுள்ளார்.
ரூ.12 லட்சம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் ரூ.1.5 லட்சத்தில் தனது மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தனது வீட்டு உரிமையாளரிடம் ரூ.5.5 லட்சத்தை கொடுத்து லீஸ் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். வழக்கம் போல் சென்ட்ரலில் கால் டாக்ஸியை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் பணத்தைப் பறிகொடுத்த அப்துல் ரஷீத் சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் தனது கைப்பையை 82,000 ரியாலுடன் கால் டாக்ஸியில் தவற விட்டுவிட்டதாகவும் அதை ஓட்டுநர் எதுவும் ஒப்படைத்தாரா? என்றும் கேட்டுள்ளார்.
போலீஸார் இல்லை என்று தெரிவித்து, அந்த கால் டாக்ஸியின் அடையாளம் தெரியுமா? என்று கேட்டபோது அதிகாலை என்பதால் ஞாபகத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் 13-ம் தேதி அதிகாலை ரயில் நிலைய வாசலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தபோது ஓட்டுநர் மதன் குமார் ரஷீதின் பையை தோளில் வைத்து தனது காருக்கு அழைத்துச்செல்வது தெரிய வந்தது.
உடனடியாக மதன் குமார் குடியிருக்கும் சூளை பகுதிக்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர். மதனிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கப் பணம், அவரது மனைவிக்கு வாங்கிக்கொடுத்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். பொதுவாக பயணிகள் தவறவிடும் பொருட்களை நேர்மையாக ஒப்படைக்கும் ஓட்டுநர்களைப் பார்த்த போலீஸாருக்கு மதன் குமாரின் செய்கை அதிர்ச்சி அளித்துள்ளது.
No comments:
Post a Comment