Friday, April 27, 2018

மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை
By DIN | Published on : 25th April 2018 04:26 AM |




இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டயப் படிப்புக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பட்டப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்தும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசை அனுமதிக்கவும் கோரி தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 18-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், 'நீட் ' மதிப்பெண் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதமான இடங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்து வருகின்றன. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அளித்து வரும் இதுபோன்ற இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 'முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தால் அது தரத்தை நீர்த்துப் போகச் செய்யும்' என்று இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தீர்ப்பு: இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு வருமாறு: 

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் 9(4), (8) ஆகியவற்றுக்கு எதிராக இடைக்கால நிவாரணம் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு தொடங்கி அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகம் அளித்து வருகிறது. இதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்ற வாதமும் நிராகரிக்கப்படுகிறது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறை 9(4) அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூறவில்லை. ஊக்க மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றே தெரிவிக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு தனியொரு ஏற்பாட்டை பரிந்துரைப்பது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதிக்கும். 

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க மாநிலங்களுக்கு அனுமதித்தால் தரத்தில் சமரசம் செய்ய நேரிடும். தற்போதைய நிலையில் விதிமுறை 9(4) -இல் கூடுதல் அர்த்தத்தை தேடினால், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒழுங்குமுறை அதிகாரங்களில் அத்துமீறி தலையிடுவது போலாகி விடும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள 'இடஒதுக்கீடுகள்' என்ற சொல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சமூக, கல்வியில் பின்தங்கியோருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு இடஒதுக்கீட்டையே குறிக்கிறதே தவிர, அரசு மருத்துவர்களுக்கானது அல்ல. தற்போதைய நிலையில் அளிக்கப்பட்டுள்ள எவ்விதமான இடைக்கால நிவாரணமும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ கல்வியில் சேர்வதற்கு தனியொரு ஏற்பாட்டை பரிந்துரைப்பது மருத்துவ கல்வியின் தரத்தைப் பாதிக்கும்.*

No comments:

Post a Comment

‘Case over wedding invite with Modi message reckless’

‘Case over wedding invite with Modi message reckless’  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : The high court quashed proceedings against ...