ஆணென்ன... பெண்ணென்ன..!
By பா. ராஜா | Published on : 26th April 2018 02:27 AM |
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையெனறெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை தலைகவிழ்ந்தார் -என்றான் எட்டயபுரத்து மாகவி பாரதி. இன்று அது உண்மைதான். "பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்' என்றும் பாடினான். அதுவும் ஓரளவுக்கு உண்மையாயிற்று.
வீட்டில் தாயாகவும், தெய்வமாகவும் மதிக்கப்படும் பெண், வீட்டுக்கு வெளியே, சமுதாயம் என்ற பரந்த வெளியில், ஆணுக்கு ஒருபடி கீழ் என்ற நிலையிலேயே மதிக்கப்படுகிறார். அது பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி, பொது இடமாக இருந்தாலும் சரி, இத்தகைய நிலையே காணப்படுகிறது. ஆணுக்குக் கீழ்ப்படிபவளே பெண் என்ற மனோபாவம் ஆண்களிடம் இன்றும் தொடர்கிறது என்பதே யதார்த்த நிலை. பெண் உரிமை குறித்த பெண்கள் மேடைகளில் பேசினாலும், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் முழங்கினாலும், அந்தப் பேச்சு, அந்தச் சபையோடு, மேடையோடு முடிந்துவிடுகிறது.
ஒரு பெண் அலுவலகத்துக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தாலும், வீட்டில் குடும்பப் பொறுப்பு முழுவதும் அப் பெண்ணின் தலைமீதே விழுகிறது. இரட்டைப் பணியைச் செய்ய வேண்டிய நிலை பெண்ணுக்கு ஏற்படுகிறது. பணிக்குச் செல்லும் பெண்களைவிடுங்கள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தர வேண்டும் என்று கணக்கிட்டால், அக் குடும்பத் தலைவரால், மாதம் எவ்வளவு தொகையை ஊதியமாகத் தர முடியும்? ஆணுக்குப் பெண் நிகரல்ல என்ற நிலை சமுதாயத்தில் நிலவுவதுபோல, தொழில் நிறுவனங்களில் இரு பாலருக்கும் ஊதியம் வழங்குவதில் பாகுபாடு காணப்படுகிறது. இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழையானாலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் மத்தியதரக் குடும்பத்தினர் ஆனாலும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குடும்பத்தின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இருவரின் வருமானமும் போதாத நிலை உள்ளது. இந் நிலையில், பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வேறுபாடு நிலவுவது ஏன்? இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை. உலக நாடுகளிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பெண் பணியாளர்களைவிட ஆண் பணியாளர்களுக்கு ஊதியம் 20% அதிகமாக அளிக்கப்படுகிறதாம். ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பணிக்குச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊதிய விகிதத்தில் 10% வேறுபாடு உள்ளதாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பணி அனுபவம் அதிகரிக்கும்போது, ஊதிய வேறுபாடும் அதிகரிக்கிறது என்றும் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் ஊதியத்தில் 20% வேறுபாடு என்பது 2017-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதுவே 2016-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 24.8 சதவீதமாக இருந்ததாம். ஊதிய விகிதத்தில் மட்டும் பெண் பணியாளர்களுக்குப் பிரச்னையில்லை. பணியிடங்களிலும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்னைகளை அவர்கள் சந்தித்து வருகின்றனராம். பல்வேறு பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் பல ஆயிரம் ஆண், பெண் ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2017-இல் 41% பெண் பணியாளர்களுக்குப் போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை என அதில் தெரிய வந்துள்ளது; 32% பெண்களுக்கு நிறுவனங்களில் உயர் பதவிகள் வழங்குவதில் தடை ஏற்பட்டது; அதுபோல, 29% பெண்களுக்கு அவர்களுக்கு திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை. 27% பெண் பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்தில் அதிக இடைவெளி இருந்தது. 20% பெண் பணியாளர்களுக்கு குழந்தைகளைப் பராமரிப்பதற்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. இப்படி பல்வேறு பிரச்னைகளை பெண்கள் பணியிடங்களில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல இந்த நிலை, வளர்ந்த நாடான பிரிட்டனிலும்தான். உதாரணமாக, பிரிட்டனில் 10 நிறுவனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அவற்றில் 8 நிறுவனங்களில் பெண் பணியாளர்களைவிட ஆண் பணியாளர்களுக்கு அதிக அளவு ஊதியம் அளிக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இதே நிலைதான். மேலும், இத்தகைய ஆண்-பெண் பாகுபாடு அங்கு நீண்ட காலமாகவே நிலவிவருகிறதாம்.
இங்குள்ள நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தில் ஆண் பணியாளர்களுக்கும் பெண் பணியாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு சுமார் 17% எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களிலும் இந்தப் பாகுபாடு காணப்படுகிறது.
அதுபோல, தொழில்மயமாகிவிட்ட தென்கொரியாவில் இரு பாலருக்கிடையேயான ஊதிய வேறுபாடு 36.6%, ஜப்பானில் 26.6%, நெதர்லாந்தில் 20.5%, அமெரிக்காவில் 18% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பெண் விடுதலை முழக்கமும் பெண்கள் பணிக்குச் செல்வதும் நூற்றாண்டு காலமாக உள்ள மேற்கத்திய நாடுகளிலேயே இந்த கதியென்றால் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆணுக்குப் பெண் அனைத்து நிலைகளிலும் நிகராக முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. மகாகவியின் வரிகள் கனவாகவே தொடர்கிறது.
No comments:
Post a Comment