Sunday, April 29, 2018


இனிப்பு தேசம் 2: சிறுநீர் சுவைப்பும் சவாரி சிகிச்சையும்!

Published : 21 Apr 2018 10:20 IST

மருத்துவர் கு. சிவராமன்




நீரிழிவு ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது இருந்துதான் வருகிறது. இந்த நோயைப் பற்றி நம்மிடமும் கிரேக்கத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிவுகள் இருந்திருக்கின்றன.

சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்ப்பதைப் பார்த்து, ‘இனிப்பு எப்படி இதில்?’ என கிரேக்கத்திலும் இந்தியாவிலும் ஆராயத் தொடங்கியிருக்கின்றனர். இப்படிச் சிறுநீர் கழித்தவர்களை, சித்தமும் ஆயுர்வேதமும் பிரமேகம், மதுமேகம் என மேக நோய் உடையவர்களாக அடையாளம் காட்டியிருக்கின்றன.

கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா எனும் எகிப்திய மருத்துவர், நீரிழிவைப் பற்றிப் பேசியிருக்கிறார். அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்து, உடலை இளைக்கச் செய்து கொல்லும் விநோதமான நோய் என இதைப் பதிவும் செய்திருக்கிறார். அரேஷியஸ் எனும் கிரேக்க மருத்துவர், ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக் கரைந்து வெளியேறும் நோய்’ என்றும் அப்போது பேசியிருக்கிறார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த நோய்க்கு ஏற்பட்டது. Mellitus என்றால் மது (தேன்) என்று பெயர்.

சிறுநீர் சுவைப்பாளர்கள்

எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற்கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி இருந்தனராம். அவர்களுக்கு ‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ என்று பெயருண்டு.

மைசூர்பாகில் பாகுபதம் எப்படி இருக்கிறது என்பதைக் கரண்டியில் பார்ப்பதுபோல, சாம்பாரில் உப்பு எப்படி என்பதை நாவில் சுவைத்துப் பார்ப்பதுபோல, சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப் பார்த்து, அப்புறம் நாவில் சுவைத்துப் பார்த்து, பல வருட காலத்துக்கு நோயைக் கணித்துச் சொல்லியிருக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் நோயா?

சித்த மருத்துவத்தில் மேக நோயின் பிரிவாகத்தான் பிரமேகம் அல்லது மதுமேகம் சொல்லப்படுகிறது. மேக நோயின் பத்து அவஸ்தைகளாக, மெலிய வைப்பதில் இருந்து முதுகில் ஏற்படும் ‘கார்பங்கிள்’ (carbuncle) கட்டிகள்வரை அன்றே அடையாளமும் காட்டியுள்ளனர். கடைசியாக குணப்படுத்தப்படாத மேகநோயின் முடிவில், மெல்ல உடலை இளைத்துக் கொல்லும் என்றும், சித்த மருத்துவம் பதறியிருக்கிறது.

‘ஏன் இந்த நோய் வருகிறது?’ என யோசித்ததில், ‘கன்னி மயக்கத்தால் கண்டிடும் மேகமே’, ‘கோதையர் கலவி போதை: கொழுத்த மீனிறைச்சி போதை, ஓதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண்போருக்கு’ எனக் காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது சித்த மருத்துவம்.

எல்லாம் அளவுக்கு மிஞ்சும்போது, இந்த நோய்க்கு வழிவகுக்குமா என்பது மிக முக்கியமான ஆய்வுக்குரிய விஷயம். அதிலும் மிக முக்கியமாக, ‘சுக்கில/சுரோணித தாதுபலத்தை வலுப்படுத்தும் பல சித்த ஆயுர்வேத மருந்துகள் மதுமேகக் கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன’, என்பது சமீபத்திய ஆய்வுத்தரவுகள் என்பதால், ‘கோதையர் கலவி போதை’ காரணி, பாரபட்சமில்லாத ஆய்வுக் கண்களோடு, கொஞ்சம் உற்றுப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்தான்.

‘சவாரி சிகிச்சை’

இங்கு மட்டுமல்ல, ‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்?’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வந்திருக்கும்போல! ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ மருத்துவமாக இருந்திருக்கிறது.

‘இனிப்பை நீக்கிவிட்டுக் கசப்பாய், துவர்ப்பாய்க் கொடுப்பா’ என இந்திய மருத்துவம் பாகற்காய், கோவைக்காய், வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு எனப் பட்டியலிட்டது. அதே காலத்தில், மேற்கத்திய உலகும் இந்த நோய்க்கு உணவில் எப்படி சிகிச்சை அளிக்கலாம் எனச் சிந்தித்திருக்கிறது. சர்க்கரையை நேரடியாகத் தரும் அத்தனை தானிய, கிழங்கு உணவையும் நிறுத்திவிட்டு, வெறும் மாமிசத்தையும் கொழுப்புள்ள புலாலையும் கொடுத்து, இனிப்பு நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

உணவும் உடற்பயிற்சியுமே மருந்து!

அப்போலனைர் எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவைக் கட்டுப்படுத்தி இருக்கிறார். அதற்குப் பின்னரே, ஓட்ஸ் வைத்தியம், பட்டினி வைத்தியம், உருளை வைத்தியம் எனப் பல வைத்திய முறைகள் 1900-களில் சர்க்கரை நோய்க்கு உலாவி இருக்கின்றன.

இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் கெடோனி, ஒருபடி மேலே போய், நோயாளிகளுக்குக் குறைந்த உணவைக் கொடுத்து அவர்களைத் தன் மருத்துவமனை அறையில் போட்டு அடைத்துவைத்துச் சாவியைக் கையில் வைத்துக்கொண்டு சிகிச்சை அளித்து, வெற்றிபெற்றதை ஆவணப்படுத்தினார்.

1916-ல் அமெரிக்க பாஸ்டன் நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன.

(தொடரும்)

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...