Monday, April 30, 2018

காலை நடை அனுபவங்கள்

By வாதூலன்  |   Published on : 30th April 2018 02:07 AM
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னைக்கு மீண்டும் குடியேறிய சமயம், அதிகாலை வேளையில் கடற்கரை காவல் நிலையம் வரை நடை பயில்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும். அந்தக் கால தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புலவர். அரை டிராயருடன் வடமொழித் தோத்திரங்களைப் பொருள் விளக்கி விஸ்தரிக்கும் கம்பெனி நிர்வாகி. வேல் மாறலுக்குப் பாட அழைப்பு விடுக்கும் முருக பக்தர். சைக்கிளில் முட்டுக் கொடுத்து, கீழே இறங்காமலேயே உள்ளூர்ச் செய்திகளை விவரமாகக் கூறும் பிரமுகர்... இப்படிப் பலர். பேச்சு முற்றும் முழுக்க அன்றைய அரசியல் ஆளுமைகளைப் பற்றித்தான் என்று சொல்ல வேண்டியதில்லை.
 ஒரு சில எம்.ஸிடி. பள்ளித் தோழர்களைப் பார்ப்பதுண்டு. வங்கியில் உடன் பணியாற்றிய அதிகாரிகளையும் கூட தற்செயலாகப் பார்த்ததுண்டு. ஆனால் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ரசனையே வேறு!
 கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் நடையுடன் பேச்சையும் முடித்துவிட்டுத் திரும்பும்போது பேருந்துக்காக காத்து நிற்கும் இளைஞர்கள் கண்ணில் படுவார்கள். அனைவர் கையிலும் ஆங்கில நாவல், அல்லது ஏதாவதோர் அரசியல் ஏடு!
 இன்று எல்லாமே மாறிப் போய்விட்டது. கடற்கரைக்குப் போகும் வழியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கடைகளும் பெருகிவிட்டன. கடந்து செல்லும் காலத்தின் கனம் பழைய நண்பர்களை அமுக்கிவிட்டது. யாருக்கும் முன்போல தாழ்வான படித்தளங்களில் அமர்ந்து பேசத் தெம்பில்லை. இன்றைக்குப் பேருந்துக்காக காத்திருக்கும் இளைஞர்கள் எல்லார் கையிலும் நவீன செல்லிடப்பேசிகள்! பேருந்து வரும் வரையில் - அது கல்லூரிப் பேருந்தானாலும் அவர்கள் பணியாற்றும் அலுவலகப் பேருந்தானாலும் - செல்லிடப்பேசியிலேயே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 அன்றிலிருந்து இன்று வரை என் வயதொத்த சில மனிதர்களிடம் மாறாமல் காணப்படும் ஓர் இயல்பு - ஓயாமல் பழைய காலங்களை அசை போடுவது!
 "அதெல்லாம் பொற்காலம் சார்! இப்போது எல்லாம் கெட்டு குட்டிச்சுவராகிவிட்டது' என்று புலம்புவார்கள். அதே சூட்டோடு சூடாக, அயல்நாட்டில் வசிக்கும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஸ்கைப் போன்ற இணையவழியாக உரையாடுவதையும் பெருமையடித்துக் கொள்வார்கள்.
 "பொற்காலத்தில் ஏன் இத்தகைய நவீன வசதி இல்லாமற் போனது' என்று எனக்குத் தோன்றும். இந்த "வசதிகள்' இல்லாததால்தான் அது பொற்காலமாயிருந்ததோ என்றும் எனக்கு ஒருசில சமயம் தோன்றியதுண்டு.
 சில வசதியானவர்கள் காடாறு மாதம், நாடாறு மாதம் என்பதுபோல, வெளிநாடு சென்று, பிள்ளை பேரன்களுடன் சிறிது காலம் கழித்துவிட்டு உலகம் சுற்றிய வாலிபராகத் திரும்பி வருவார்கள். இது போன்ற ஒரு நண்பர் காலை நடையின்போது, எங்கள் குடும்ப நலனை விசாரித்து, "உங்களுக்குப் பரவாயில்லை, பையன் பெண் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். என்னைப் பாருங்கள், ரெண்டு பையன்களும் அயல்நாட்டில். நாங்கள் அநாதைகள்' என்று சொன்னார். அவர் கையில் கனமான காய்கறிப் பை இருந்தது.
 நான் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் என் மனைவி பதிலடி கொடுத்தாள் -"உங்களை யார் அவர்களை அங்கெல்லாம் அனுப்பச் சொன்னது? உங்களுக்கும் அந்தப் பெருமை வேண்டித்தானே இருக்கிறது? இப்படிப் பேசாதீர்கள்' என்று சற்று வேகமாகவே கூறிவிட்டாள். நண்பர் மெளனமாக நகர்ந்துவிட்டார்.
 பாவம், ஏதோ அதிருப்தி இருப்பது போலப் பாசாங்கு செய்து, கூட இரண்டு சர்டிபிகேட் வாங்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். என் மனைவி அதற்கு இடம் தரவில்லை. இதனால் நண்பருக்கும் எனக்கும் சில நாள் மனத்தாங்கல் இருந்தது வேறு விஷயம்.
 ஆனாலும் மனைவி அல்லது மகள் என ஸ்திரீகளுடன் காலை நடை போவது சற்று வித்தியாசமான அனுபவம்தான். அங்கங்கு ஏதாவது காய்கறியோ, மளிகைப் பொருளோ மலிவாக விற்கும் கடை நடைபாதையில் தெரிந்தால், சட்டென்று நின்றுவிடுவார்கள். ஆந்திரா சித்தூரிலிருந்து புளி, தனியா; தென் மாவட்டங்களிலிருந்து பனங்கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி இத்யாதி... எனவே அவ்விதம் போகும்போது பர்ஸ் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
 அடுத்தது, உணவு சாதனங்களுக்கு சமமாக பெண்களை ஈர்ப்பது உடை. அதாவது, பிரபல கடைகளில் வாங்குவது அல்ல. இது வேறு ரகம்: சிவன் கோயிலில் ஏலம்விடும்போது வாங்குவது; ஏதாவது கோயில் விசேஷத்தின்போது, பந்தக்கால் நடும்போது கிடைப்பது. இத்தனைக்கும் புடவையின் தரம் சுமாராகத்தான் இருக்கும். இருந்தாலும் அதைப் பற்றி சக பெண்மணிகளிடம் ரசித்துப் பேசுவது அவர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாயிருக்கும்.
 மூன்றாவது - வீடு. எங்குமிருப்பது போல எங்கள் பகுதியிலும் மளமளவென்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. பாதியில் நிற்கிற கட்டடங்கள்; சொன்னபடி அடுக்குமாடி வீட்டை முடிக்க இயலாமல் திணறுகிற ஒப்பந்தக்காரர்கள்; தனி வீட்டிலிருந்து அடுக்குமாடிக்கு குடிபுகுந்தவர்களுக்கு நேரும் சிரமங்கள்; இவற்றைப் பற்றி காலை நடையில் பெண்கள் பேசத் துவங்கினால் போதும்... பேச்சு நீண்டு கொண்டே போகும்.
 ஆக, ஆதி மனிதன், எஸ்கிமோ போல மூன்று "உ"க்கள் (உணவு, உடை, உறைவிடம்)தான் இன்றும் புதிய வடிவில் முன்னுரிமை பெறுகின்றன.
 இப்போதெல்லாம் காலத்தின் அழுத்தம் காரணமாக காலை நடை என்பது அருகிலுள்ள கோயில் வரைக்கும்தான் எனச் சுருங்கிவிட்டது. எவ்வாறாயினும், மூத்த குடிமக்களுக்கு காலை நடை என்பது உகந்த, உவப்பான விஷயம்தான். இளங்காலை வெயிலும் மிதமான காற்றும் புத்துணர்வைக் கூட்டுகிறது. நண்பர்களிடம் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதால் மனச்சுமை குறைகிறது. தெரிந்தவர்களின் வட்டத்தைப் பெருக்குகிறது. சில நினைவுகள் ஞாபக சக்தியை வளர்க்க வழி வகுக்கிறது.
 ஆனால் ஒன்று: காலை நடையின்போது கிட்டுகிற மருத்துவ உபதேசங்களை மட்டும் அறவே புறக்கணியுங்கள். அவற்றை நடைமுறையில் பின்பற்றினால் உறக்கம் கெட்டுவிடும்.
 

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...