''என் வருமானம் குதிரைக்குக் கொள்ளு வாங்கக்கூட பத்தலை!" - கரூரின் கடைசி குதிரைவண்டிக்காரர்
துரை.வேம்பையன்
RAJAMURUGAN N 28.04.2018
''எவ்வளவுதான் விதவிதமான கார், பஸ், வேன்னு ஆயிரத்தெட்டு வாகனங்கள் வரட்டுமே. குதிரைவண்டியில போற, வர்ற சுகமே அலாதியானது தம்பி. இதைச் சொல்லிதான் என் வண்டியில் மக்கள் ஏறி பயணம் போவாங்க. அதெல்லாம் அந்தக் காலம். ஆனா, இன்னிக்கு எங்களைச் சீந்த நாதியில்லை. இருபது வருஷங்களுக்கு முன்னாடி முந்நூறு குதிரைவண்டிகள் கரூர் பஸ் ஸ்டாண்டுகிட்ட நின்னு, 'தொழில்' பார்த்துச்சு. இன்னிக்கு நான் மட்டும் சொத்தக் குதிரையை வெச்சுக்கிட்டு, 'பொழப்பு' நடத்திக்கிட்டிருக்கேன். குதிரைவண்டி மூலமா கிடைக்கும் என் தின வருமானத்துல, குதிரைக்குக் கொள்ளு வாங்ககூட பத்தலை" என்று தனது குதிரைவண்டியில் கட்டிய ஹார்னில், 'நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்...' என்று எம்.ஜி.ஆர் பாடலைச் சத்தமாக ஒலிக்க, அந்தச் சத்தத்தை சற்று குறைத்துவிட்டு தனது சோகக்கதையை ஆரம்பிக்கிறார் கிருஷ்ணசாமி.
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவுக்காக இவரது குதிரைவண்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு, கரூர் முழுக்க விழிப்புஉணர்வு செய்யப்படுகிறது. மதிய சாப்பாட்டுக்காக கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வண்டியை ஓரங்கட்டியவரைச் சந்தித்துப் பேசினோம்.
''எனக்குச் சொந்த ஊர் சணப்பிரட்டி. எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. எல்லோரையும் இந்தக் குதிரைவண்டி வருமானத்துலதான் ஆளாக்கி, ஊரோட கண்ணடையற அளவுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சேன். இப்ப அவங்க பிள்ளைங்க, என்னையும் என் மனைவியையும் தனியா தவிக்கவிட்டுட்டு, தனிக்குடித்தனம் போயிட்டாங்க. குதிரை இருக்கு, வண்டி இருக்கு, உழைக்க உடம்புல தெம்பு இருக்குன்னு நம்பிக்கையா இருந்தேன். ஆனா, குதிரைவண்டியில ஏறி எனக்கு வருமானம் தர ஆள் இல்லை தம்பி. எனக்கு உடம்புல சர்க்கரை, பிரஷர், மூச்சிரைப்பு எல்லாம் இருக்கு. அதுக்கு வைத்தியம் பார்த்து சரிபண்ண காசு இல்லை.
குதிரைவண்டியில் குந்தி எங்கப்பா பார்த்த இந்தத் தொழிலை, என் அஞ்சு வயசுல தொடங்கினேன். இன்னிக்கு எனக்கு 67 வயசு. இத்தனை நாளும் இந்தக் குதிரைவண்டியை நம்பியே காலத்தை ஓட்டிட்டேன். இனி என்ன மாத்து வேலை பார்க்க முடியும்? தினமும் கிடைக்கிற 100, 200 வருமானத்துக்காக இந்தக் குதிரைவண்டியை ஓட்டுற பொழப்பைப் பார்க்கிறேன்.
காமராஜர் அய்யா காலத்துல இந்தத் தொழில் எப்படி இருக்கும் தெரியுமா? அப்போ, ஒண்ணும் ரெண்டு பஸ்கள்தான் இருக்கும். அதனால், குதிரைவண்டி, மாட்டுவண்டிகளுக்குதான் மவுசு. கரூர் பஸ் ஸ்டாண்டுகிட்ட 300 குதிரைவண்டிகளும், 200 மாட்டுவண்டிகளும் 'கிராக்கி'களுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும். வேலாயுதம்பாளையம், உப்பிடமங்கலம், க.பரமத்தின்னு 20 கிலோமீட்டர் வரை சவாரி போவோம். 50 ரூபா அன்னிக்கு நாள் வருமானம். குதிரைக்குத் தீனி 5 ரூபா செலவாவும். மீதி எல்லாம் வருமானம்தான்.
அப்போ 50 ரூபாய்ங்கிறது இப்போதைய சில ஆயிரங்களுக்குச் சமம். நினைச்சபடி வாழ்ந்தேன். அப்புறம், எண்பதுகள்ல குதிரைவண்டியில பயணம் போறவங்க குறைய ஆரம்பிச்சாங்க. இருந்தாலும், அப்போ சாராயக்கடை முக்குக்குமுக்கு இருந்துச்சு. 'ஒண்ணாம் நம்பர் கடைக்கு விடுண்ணே', 'ரெண்டாம் நம்பர் கடைக்குக் குதிரையைப் பத்துண்ணே'ன்னு குடிகாரங்க சவாரி வருவாங்க. கேட்கிற கூலியைவிட அதிகம் கொடுப்பாங்க.
2000-ம் வருடம் வரை எங்க தொழில் நல்லாதான் இருந்துச்சு. அதுக்குப் பிறகு, வருஷத்துக்கு இருபது வண்டிகள்னு குறைய ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிகூட இருபது வண்டிகள் இருந்துச்சு. அதுவும் படிப்படியா குறைஞ்சு, ஒரு மாசத்துக்கு முன்னால என்கூட மனோகரன்னு ஒருத்தன் குதிரைவண்டி சவாரி போனான். அவனும் இப்போ வண்டியை ஓட்டுறதில்லை. நான் மட்டுமே ஒட்டடை படிஞ்ச சித்திரமா இந்தக் குதிரைவண்டி ஓட்டும் தொழிலை விடாம கட்டிட்டு அழுவுறேன்.
கார், பைக்னு வீட்டுக்கு வீடு வாகனம் இருக்கு. அதெல்லாம்கூட, எங்க தொழிலை பாதிக்கலை. இந்த மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் வந்துதான் சந்துபொந்துக்குள்ள எல்லாம் போய், எங்க பொழப்புல வண்டி வண்டியா மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க. குதிரைவண்டியில பயணிகள் பயணிக்கிறது ஒழிஞ்சாலும், மார்க்கெட்களுக்கு, கடைகளுக்கு, வீடுகளுக்குப் பொருள்களை ஏத்திட்டு போற சவாரியாச்சும் கிடைச்சுது. லோடு ஆட்டோக்களும், குட்டியானை வண்டியும் திடுதிப்புன்னு கிளம்பி வந்து அதுக்கும் கள்ளிப்பால் ஊத்திடுச்சு.
இது பெண் குதிரை தம்பி. செல்லம்மாள்னு பெயர் வெச்சு செல்லமா வளர்க்கிறேன். நான் சாப்பிட்டாதான் இது சாப்பிடும். பில்லு கட்டு ஒண்ணு 70 ரூபா விற்குது. கொள்ளு ஒரு கிலோ 66 ரூபாய். குறைந்தபட்சம் குதிரைக்குத் தினமும் உணவுக்கு 200 ரூபாய் ஆவுது. ஆனா, எனக்கு ஒருநாள் அதிகப்பட்ச வருமானமே 200 ரூபாய்தான். அதையும் நான் சம்பாதிக்கிறதுக்குக் கால்ல கையில விழுந்து பயணிகளைப் பிடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோயிடும். சில நாள் 50 ரூபாக்கூட தேறாது. வட்டிக்குக் கடன் வாங்கியே காலம் ஓடுது.
குதிரைக்குத் தீனி வாங்க முடியாத நாள்ல நானும் என் மனைவியும் சாப்பிடாம, வயித்துல துணியைக் கட்டிக்கிட்டு படுத்திருவோம். செல்லம்மாள் ராத்திரி முச்சூடும் பசியில கத்திக்கிட்டே இருக்கும். எங்களுக்குப் பொட்டுத்தூக்கம் வராது. இந்த வாழ்க்கையை எண்ணி, பினாத்திக்கிட்டே படுத்திருப்போம். 'எப்படி இருந்த குதிரைவண்டி தொழில், வளர்ச்சிங்கிற பேர்ல இப்படி நொட்டானாயிட்டேன்'னு உள்ளுக்குள்ள புழுங்கிப்போறேன் தம்பி. இந்த ஒரு மாசம் சுத்தமா சவாரி கிடைக்கலை. 10,000 ரூபாய் வட்டிக்கு வாங்கித்தான் எங்க ஜீவனமும் குதிரை ஜீவனமும் நடக்குது.
ஏதோ, புண்ணியம் எந்த வருஷமும் இல்லாத அதிசயமா இந்த அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் கரூர் நகரம் முழுக்க இப்படி விழிப்புஉணர்வு பண்ண 'பொழப்பு' கொடுத்திருக்காங்க. அதனால, கர்ப்பமா இருக்கிற செல்லாம்மாளைத் தட்டிக்கொடுத்து, அதுக்காகவும் எங்களுக்காகவும் சவாரி ஓட்டுறேன். ஒண்ணு... எங்க உசிரு போகணும். இல்லைன்னா, செல்லம்மாள் காலம் முடியணும். அதுவரைக்கும் கரூர் பஸ்ஸ்டாண்டுல நானும் என் செல்லம்மாளும் சேர்ந்து 'பொழப்பு' பார்த்துக்கிட்டே இருப்போம். அது சவாரி கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி" என்றபோது, அவரது கண்கள் குளம் கட்டின. குதிரை செல்லம்மாள், தன் பங்குக்குக் கனைத்து அதை ஆமோதிக்கிறது.
'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...' என்று ஹார்னில் மறுபடியும் பாடல் ஒலிக்க, இன்னல்களைச் சுமந்தபடி கரூர் நகரச் சாலையில் பயணிக்கத் தொடங்குகிறார்கள் கிருஷ்ணசாமியும் செல்லம்மாளும்!
நமக்கோ அந்தக் காட்சி, பெரும் சோகம் ஒன்று உருண்டு ஓடுவதாகத் தோன்றிற்று!
No comments:
Post a Comment