நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!
இரா. குருபிரசாத் Coimbatore:
vikatan 30.04.2018
பொதுவாக ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாலே, சிலாகித்து ஸ்டேட்ஸ்களை பறக்கவிடும் காலம் இது. ஆனால், தினசரி உருவாகும் புதிய இந்தியாக்களில், பட்டாம்பூச்சிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அப்படியிருக்கும் போது, பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால் எப்படி இருக்கும்? சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களில்தான் பட்டாம்பூச்சிகளை காணமுடியும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குதொடர்ச்சி மலைகளில் தாவரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து, தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் பட்டாம்பூச்சிகள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
பட்டாம்பூச்சிகள் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வலசை போதலில் ஈடுபடும். அப்போது, ஓர் இடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்கு லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் நகரும். பட்டாம்பூச்சிகளால் கோடை வெயிலை தாங்க முடியாது. எனவே, அந்தக் காலகட்டத்தில் சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களுக்கு அவை நகரும். குறிப்பாக, தற்போது கோவையில் கோடை மழை நன்றாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பட்டாம்பூச்சிகள், கோவை ஆனைகட்டி பகுதிக்கு வந்து, பின்னர் ஆனைமலை பகுதிக்குச் செல்லும். அதேபோல, கன்னியாகுமரி உள்ளிட்டப் பகுதிகளிலும் வலசை போதல் நடைபெறுவதை பார்க்க முடியும்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் அமைப்பின் மோகன் பிரசாத் கூறுகையில், “இனப்பெருக்கம், உணவு, தட்பவெட்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களுக்காக பட்டாம்பூச்சிகள் வலசை போதலில் ஈடுபடுகின்றன. இந்தக் காலகட்டத்தில், ஒரே இடத்தில் பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள், நீர் உறியும் காட்சிகளைப் பார்க்க முடியும். பட்டாம்பூச்சி ஆரம்பகாலகட்டத்தில், காட்டில் கிடைக்கும் தாவரங்களை சாப்பிட்டாலும், அது முதிர்ந்த நிலையை அடையும்போது, அவற்றுக்கு அதிகப் பூக்கள் தேவைப்படும். இதனால், மலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு வந்து அவை தேன் உறிஞ்சும்.
எந்த ஒரு இடத்திலும் உயிர்ச்சூழல் சிறப்பாக அமைய, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் ஒரே தேவை நீர்தான். அதேசமயம், ஒரே இடத்தில் அதிக மழை பெய்தாலும் இவற்றால் சிறப்பாக இருக்க முடியாது. தற்போது, கோடைமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், தாவரங்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது. இது உயிர்ச்சூழல் சிறப்பாக இருக்கவும் உதவும். முக்கியமாக, இந்தச் சூழல் அதன் இனவிருத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் வலசை போதல் நடப்பதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். பட்டாம்பூச்சிகள் ஒரு பகுதிக்கு வருகிறது என்றாலே, அந்தப் பகுதியில் சூழல் சிறப்பாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எலுமிச்சை, எருக்கம், தும்பை, இலந்தை, பலா, கொன்றை, மந்தாரை, அகத்தி, வெட்சி போன்ற தாவரங்கள்தான் பட்டாம்பூச்சிக்கு மிகவும் பிடித்தவை. எனவே, அந்தத் தாவரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். 85 சதவிகித மகரந்தச் சேர்க்கை, பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களால்தான் நடைபெறுகின்றன. வனஉயிரினங்கள் பாதுகாப்புச்சட்டத்தின் அட்டவணைப் பிரிவில் இடம்பெற்றுள்ள 36 வகை பட்டாம்பூச்சிகளும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் 32 வகை பட்டாம்பூச்சிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகளை, சாதாரண பூச்சி என்று நினைத்து நாம் அடித்து வருகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால், மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்தி, பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறோம். செயற்கை மருந்துகளைத் தவிர்த்தாலே, விவசாயம் செழிப்படையும். அதேபோல, பட்டாம்பூச்சிகளும் பாதுகாக்கப்படும்” என்றார் உறுதியாக.
இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்… பட்டாம்பூச்சிகளை பாதுகாப்போம்.
No comments:
Post a Comment