Sunday, April 29, 2018

மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம்

Published : 27 Oct 2015 10:54 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள்.

தொடுதலும் உணவே

சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான். உணவை விட ஆதரவும் பாராட்டும்தான் தொடர்ந்து பிள்ளையை வளர்க்கிறது. தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் விலங்கினங்களின் குட்டிகள் தொடுதல் இல்லாதபோது குறைந்த ஆயுட்காலத்தில் இறந்து போகின்றன.

மொழியறிவு வளரும் வரை வார்த்தைகள் தரும் நம்பிக்கையும் பாராட்டும் தொடுதல் மூலமாகவே முழுமையாக நிகழ்கிறது. பிறகு வார்த்தைகள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் வளர்ந்த பின்னாலும் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை ஒரு தொடுதல் சொல்லிவிடும் என்பதுதான் உண்மை.

தொடுதலுக்கு இசைந்து வெளிவரும் வார்த்தைகள் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வைத் தருகிறாள். விரல் பிடித்து அழைத்துச் செல்லும் அப்பா பாதி ஆசிரியர் ஆகிறார். தட்டிக்கொடுத்துக் கதை சொல்லும் பாட்டி கற்பனையை வளர்க்கிறாள். தோளில் கை போட்டு ரகசியம் பேசும் சகோதரன் உலகைச் சொல்லிக்கொடுக்கிறான். வாரி அணைக்கும் காதலி ஆசையை அள்ளித் தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளை உங்கள் பொறுப்பை உணர்த்துகிறான். உடல் மொழி சொல்லாததை வாய் மொழி சொல்வது கடினம்.

பேச்சுகளின் பெருக்கம்

நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய் மொழி ஆதிக்கம் பெருகுகிறது. வார்த்தைகள் மூலம் தான் பெரும்பாலான செய்திகள் செல்கின்றன. அதனால் வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்று விட்டன.

உறவுகள் இயந்திரத்தனமாக இயங்குகையில் தேவைகள் கருதி மட்டுமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரம் தான் செல்வம் என்று இயங்குகின்ற உலகில் பொருள் ஈட்ட வழியில்லாத வார்த்தைகள் குறைந்து போகின்றன. பிரச்சினை என்றால் பேசுகிறோம். காரியம் என்றால் பேசுகிறோம். பரஸ்பர அன்புக்கும் நட்புக்கும் அபிமானத்துக்கும் பேசும் பேச்சுகள் குறைந்துவருகின்றன.

இதனால் மனதார ஒருவரைப் பாராட்டுவது என்பதே அரிதான செயலாகிறது. ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக இப்படிப் பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்று சந்தேகப்படுகிறோம்!

எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை மனதாரப் பாராட்டுதல் என்பது பாராட்டுபவரின் மன வளத்தைக் காட்டுகிறது. அது ஒரு பரிமாண வளர்ச்சி. அதனால் தான் பலருக்கு மனதாரப் பாராட்டும் மன விசாலம் இருப்பதில்லை.

ஆனால் நாம் அனைவரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். எங்கிருந்து பாராட்டு வரும்? கொடுத்தால்தானே திரும்பப்பெற?

நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவரில் எத்தனை பேர் மனதாரச் சமைத்தவரை பாராட்டுகின்றனர்? சரியில்லை என்றால் திட்டித் தீர்க்க யோசிப்பதில்லை.

“ஒரு நாளில் எத்தனை பேரிடம் பாராட்டு வாங்குகிறோமோ அவ்வளவு நல்ல சேவையைச் செய்கிறோம்!” என்பது சேவை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சொல்லித் தரும் பாடம். இதை நான் சற்றுத் திருப்பிப்போட்டுச் சொல்வேன். “ஒரு நாளில் எத்தனை பேரைப் பாராட்டுகிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.”

பாராட்டுவதற்காக பாராட்டு

பாராட்டுவதற்குப் பாராட்டப்படும் பொருளோ மனிதரோ அருகதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவரின் அருகதைதான் முக்கியம்.

நம் வாழ்க்கையை மெலிதாகத் தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறு காரியங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் நாள் அன்று நிச்சயம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் மனிதர்களின் நல்ல பண்புகளை, நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்றும்.

வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டு அவசியமா என்று வாதாடுவார்கள். அது வீண் வாதம். பாராட்டுகள் அதிகமானால் பாதகமில்லை. குறைவானால் தான் பாதகம். முடியாதவரிடம் முடியும் என்று சொல்லிச் சற்று அதிகப்படியாகப் பாராட்டினால் பிழையில்லை. ஆனால் முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும் பொழுது பலர் தங்கள் திறமைகளின் மேல் நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்கள்.

பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில்கூடப் பெரிய பாராட்டுகள் அவசியப்படவில்லை. நல்ல வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருக்கும். இன்று மூன்று பேராய், நான்கு பேராய் சிறுத்துள்ள குடும்பங்களில் வாய் மொழியே குறைந்துவருகிறது. அவசர யுகத்தில் பாராட்டுக்கு ஏது நேரம்?

ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். ஒரு பத்துப் பேரை இன்று மனதார, பிரதி பலன் எதிர்பார்க்காமல் அவர்கள் நல்ல செயல்களுக்குப் பாராட்டுங்கள். சங்கிலித் தொடர்ச்சியாக நல்ல நிகழ்வுகளை நடத்துவீர்கள்.

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிவிட்டால் அவரிடம் பாராட்டத்தக்கவல்ல பண்புகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுக்கான வீரிய விதைகளைத் தூவும்.

பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடுபவர்கள் பலர் இருப்பார்கள். பாராட்டை இன்றே செய்யுங்கள். உறவுகளில் குறைகள் சொல்வதைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களைத் தொட்டுச் செல்லும் உறவுகளில்; மனிதர்களில் யாரையெல்லாம் பாராட்டலாம் என்று பட்டியல் போடுங்கள். இன்றே செயல்படுத்துங்கள்.

பாராட்டு ஒரு மூலதனம். அது பன்மடங்கு பெருகி உங்களிடம் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...