Friday, April 27, 2018

உலக வன்முறையும், உள்ளூர் வன்முறையும்

By உதயை மு. வீரையன் | Published on : 27th April 2018 02:21 AM |

இப்படியெல்லாம் நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவே இதயம் கனக்கிறது. மனித நேயமே மடிந்து போனதா? நமது பண்பாடும், பாரம்பரியமும் இந்த அளவுக்கு இழிநிலையை அடையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மனித சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களை மதிக்கத் தெரியாத சமுதாயம் எப்படி முன்னேறும்? மனித உருவத்தில் திரியும் இந்த இழிந்த விலங்குகளைப் பாதுகாப்பதற்கு பணமும், பதவியும் படைத்தவர்கள் முன்வரலாமா? அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழும் மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது?

எத்தனை ஆட்சிகள் மாறினாலும், அவர்கள் நிலையில் எந்தவித மாறுதலும் இல்லையென்றால் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படத்தானே செய்யும்? அரசும், காவல்துறையும், நீதித்துறையும் அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டாமா?

தியாகமே உருவானவள் பெண் என்றார் காந்தியடிகள். அந்தத் தியாகத்தின் திருவுருவைப் போற்றி வணங்கிய பூமியா இது? அப்படியானால் சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபட்ட வேடதாரிகளா இவர்கள்?

கடந்த சில வாரங்களில் காஷ்மீரில் கதுவா கிராமத்திலும், உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் கிராமத்திலும் சிறுமிகளுக்கு எதிராக நடந்த அநீதிகளை என்னென்பது? இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நீதி கிடைக்காமல் அரசு இயந்திரங்களே தடுத்துள்ளன. காஷ்மீரில் முதல் தகவல் அறிக்கை போட விடாமல் அரசியல்வாதிகளே தடுத்துள்ளனர். உ.பி.யில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தாமதமாகவே கைது செய்யப்பட்டுள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றுதானே சட்டம் கூறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலுள்ள ரசானா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10ஆம் நாள் காணாமல் போனார். ஜனவரி 17-ஆம் நாள் அவரது உடல் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையின்போது, அப்பகுதியில் உள்ள சிறிய கோயில் ஒன்றில் அச்சிறுமி அடைத்து வைக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்தது. இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கோயில் நிர்வாகியான வருவாய்த் துறை முன்னாள் அதிகாரி, அவரது மருமகன், மகன், இவர்களின் நண்பன் மற்றும் சிறப்புக் காவல் அதிகாரிகள் இருவர், உதவிக் காவல் ஆய்வாளர் ஒருவர், தலைமைக் காவலர் ஒருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு பொதுக் கூட்டம் நடத்தியது. இதில் பா.ஜ.க. அமைச்சர்கள் கலந்து கொண்டதாகச் சர்ச்சை எழுந்தது. அதனால் அவர்கள் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளனர்.

கொலை மிரட்டல் வருவதால் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கும், அவர்களது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுவும் பரிசீலனையில் உள்ளது.
நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய அடுத்த நிகழ்வு, உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பாலியல் வன்முறை செய்ததாக 17 வயது இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக புகார் எழுந்ததால் இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.

அத்துடன் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெண்ணையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்னும் ஒரு நிகழ்ச்சி இதைவிட ஒரு பெருங்கொடுமை. பாலியல் வன்முறைக்கு உட்பட்ட சிறுமிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பெற்றோரே குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தில்லி அமன் விகார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது.
இதன்பின் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் உறவினர்கள் அந்தச் சிறுமியின் பெற்றோரை அணுகியுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு பேருக்கும் சாதகமாக நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றியளித்தால் ரூ.20 லட்சம் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக ரூ.5 லட்சத்தை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாக்கு மூலத்தை மாற்றிக் கூறுமாறு அந்தச் சிறுமியிடம் பெற்றோரே வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் அச்சிறுமி, பெற்றோர் மறைத்து வைத்திருந்த கையூட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டு அமன் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்தச் சிறுமியின் தாயாரைக் கைது செய்து, தலைமறைவாகியுள்ள அவரது தந்தையைத் தேடி வருகின்றனர். கலிகாலத்தில் இப்படியும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
இந்தியாவில் உன்னாவ் மற்றும் கதுவா பாலியல் வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக கண்டனங்கள் தெரிவிப்பதைவிட நடவடிக்கை எடுப்பதையே உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் நாடு வல்லரசாக மாறுவதை விட நல்லரசாக இருக்க வேண்டுமென்றே நல்லவர்களும், நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடல் கடந்த நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு நடவடிக்கை கோரி மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குநரான பும்சைல் லாம்போ இந்த விவகாரம் தொடர்பாக தமது மனவேதனையைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஐ.நா. சபைக்கான இந்திய ஒருங்கிணைப்பாளரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டனங்கள் முக்கியமானதுதான். அதே வேளையில் அதற்குரிய நடவடிக்கை எடுப்பது அதைவிட முக்கியமானதாகும். கொலையையும், வன்முறையையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும்கூட இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது மிகவும் வெட்கக் கேடானது என்பதைச் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியுள்ளனர். நமது குடியரசுத் தலைவரும் இதனை, வெட்கக் கேடான நிகழ்வு என்று வேதனையோடு வருணித்துள்ளார்.

"குழந்தைகளின் புன்னகைதான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயம் என நான் கருதுகிறேன். குழந்தைகள், தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று உணரும் வகையில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்தச் சமூகத்தின் மிகப் பெரிய வெற்றி. அதுதான் இந்தச் சமூகத்தின் முதல் கடமையாகும்...' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நமது தாய், சகோதரிகள், மகள்கள் ஆகியோருக்கு சம உரிமை, நீதி, சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூகத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? நாடெங்கும் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை இல்லையா?
இப்போது நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? என்ன மாதிரியான சமூகத்தை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்? எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் எதைச் சொல்லப் போகிறோம்? இது பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை ஒழித்திட கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும், பிரிட்டனும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் தெரசா மேவும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறுகிறது.
உலக வன்முறையை ஒழித்துக் கட்ட உறுதி எடுத்துக்கொண்டதுபோலவே உள்ளூர் வன்முறையாகிய பாலியல் வன்முறையும் ஒழித்துக் கட்டப்பட உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

No comments:

Post a Comment

Empty chairs greet min on surprise visit to taluk office

Empty chairs greet min on surprise visit to taluk office  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : A surprise  visit by revenue minister Kr...