Sunday, April 29, 2018

தாலிக்கட்டு, தாலி எடுக்கும் நிகழ்வு, திருநங்கைகள் சங்கமம்... களைகட்டும் கூவாகம் திருவிழா!
மு.ஹரி காமராஜ்


தே.சிலம்பரசன்
vikatan 29.04.2018

அனைத்து ஜீவன்களிலும் இறைவன் உறைகிறார் என்பதும், அதன் காரணமாக அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க வேண்டும் என்பதும், இந்து மதத்தின் ஒப்பற்ற தத்துவம். சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்பது போன்ற பேதங்கள் எதுவும் இறைவனின் சந்நிதியில் இல்லை. அவரவர் வழிமுறைகளின்படி அவரவர் வழிபாடுகளைச் செய்துகொள்ள அனுமதிக்கும் இந்து மதத்தில், மரியாதைக்கு உரியவர்கள் என்பதால், 'திரு' என்ற சிறப்பு வார்த்தையை சேர்த்து, 'திருநங்கைகள்' என்று அழைக்கப்படுபவர்களுக்கும் சில வழிபாட்டு முறைகள் இருக்கவே செய்கின்றன.

திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் விழா குறிப்பிடத்தக்கது. இந்த விழா திருநங்கைகள் சங்கமிக்கும் விழாவாக மட்டுமல்லாமல், திருநங்கைகளின் பெருமையை மற்றவர்கள் உணரச் செய்யும் திருநாளாகவும் திகழ்கிறது. முற்காலத்தில் திருநங்கைகள் ஆட்சிப் பொறுப்பிலும், கலைத்துறையிலும் மிகச் சிறப்பான இடத்தை வகித்திருக்கிறார்கள் என்பது வரலாறு.



அரவான் என்னும் கூத்தாண்டவருக்கு கடலூர், கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் 32 ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் விழுப்புரம் மாவட்டம், மடப்புரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை மாதம் நடைபெறும் விழாவில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் திருநங்கைகள் கலந்துகொள்கின்றனர்.

கிருஷ்ணனின் அம்சமே திருநங்கைகள்:

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்றால், சகல லட்சணங்களும் பொருந்திய ஆண்மகன் ஒருவனை பலியிடவேண்டும். அப்போது அர்ஜுனனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்த அரவான் என்பவன் தன்னை பலிகொடுக்க முன்வந்தான். ஆனால், திருமணம் நடைபெற்ற ஒருவனைத்தான் பலி கொடுக்க முடியும் என்பது சாஸ்திரம். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் பலியாகப் போகும் ஒருவனை மணந்துகொள்ள எந்தப் பெண் முன்வருவாள்? அரவானை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். எனவே, பகவான் கிருஷ்ணரின் அம்சம்தான் திருநங்கைகள்’ என்று சொல்லப்படுகிறது.



திருவிழா விவரங்கள் :

மகாபாரதப் போரின் நினைவாக கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், அரவான் திருவிழா 18 நாள்கள் நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி தினத்தில் அரவானைக் கணவனாக எண்ணிக்கொண்டு, திருநங்கைகள் கோயில் அர்ச்சகர்களின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என்று கோயிலில் திருவிழா களைகட்டும். மறுநாள் விடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை, கொலைக்களத்துக்குக் கொண்டு செல்லப்படும். அப்போது திருநங்கைகள் ஒப்பாரிவைக்கும் சடங்கு நடைபெறும். அரவான் தலை துண்டிக்கப்பட்டதும், கணவனை இழந்த திருநங்கைகள் ஓலமிட்டு, தாலி களைந்து, பூவை அறுத்து, வளையல் உடைத்து அழுவார்கள். பிறகு வெள்ளைப் புடவை கட்டி விதவைக் கோலம் பூணுவத்தோடு விழா முடிவுறும்.



திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'Trans Rights Now Collective' என்னும் அமைப்பின் நிறுவனர் கிரேஸ் பானு கூவாகம் திருவிழாவைப் பற்றியும், கூவாகம் விழாவினால் தங்களுக்குக் கிடைத்திருக்கும் நன்மைகள் பற்றியும் பேசியவர், சில குறைகளையும் ஆதங்கத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''கூவாகத்தில் நடைபெறும் திருவிழாவை ஒதுக்கிவிட்டு, எங்கள் வரலாற்றையும் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கவே முடியாது. எங்கள் வரலாற்றை அவ்வப்போது எங்களுக்கு நாங்களே நினைவுபடுத்திக் கொள்ளவும், பல பகுதிகளிலும் பரவியிருக்கும் நாங்கள் ஒன்றாக சங்கமிக்கும் விழாதான் கூவாகம் அரவான் திருவிழா. காலம்காலமாக எங்களின் பூர்வீக அடையாளமாக இந்த கூவாகத் திருவிழா இருந்து வருகிறது. இன்னும் கூட சிலர் இது ஒரு களியாட்டக் கூத்து என்று விமர்சித்தாலும், இது எங்களின் உரிமைத் திருவிழாவாகவே தொடர்ந்து வருகிறது.

ஆடல், பாடல், அழகிப்போட்டி, திறனறியும் நிகழ்ச்சிகள் என்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதுடன், எங்களை புதுப்பித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆண்டுதோறும் எங்கள் முன்னேற்றங்களை அளவிடவும் இந்த விழா உதவுகிறது. வெறும் அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சென்ற ஆண்டிலிருந்து எங்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு, பாராட்டும் விதமாக விருது அளிக்கும் விழாவையும் நடத்துகிறோம். இந்த இடத்தில் ஒன்றுகூடி நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள்தான், எங்கள் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கிறது. நாங்கள் பத்து, இருபது பேர்கள் கொண்ட சிறு குழு இல்லை என்பதையும், பெரும்பான்மை எண்ணிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் எங்களுக்கு உணர்த்தும் திருவிழா கூவாகம் திருவிழா.

வெறும் போகப் பொருள்களாக திருநங்கைகளை நினைத்திருந்தவர்கள், இன்று தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டதற்கு, கூவாகத்தில் நாங்கள் சங்கமிக்கும் விழாதான் காரணம். நாட்டின், உலகின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பல்வேறு கலாசாரங்களைக் கொண்டிருந்தாலும், இந்த விழா எங்களை ஒன்றிணைத்துவிடுகிறது. வாழ்க்கையில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தாதது மட்டுமல்லாமல், எங்களைக் கண்டு ஒதுக்கியவர்கள்கூட இன்று எங்களுக்கு கௌரவம் தருகிறார்கள் என்றால் கூவாகம் விழாதான் காரணம். முழுக்க முழுக்க எங்களுக்கே எங்களுக்கான இந்த விழா, எங்கள் உரிமை, உற்சாகம், உறவுப் பாலம் என்றே சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலாக இந்த விழாதான் எங்களை நாகரிகமாக மாற்றியது.



வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில், நாங்கள் அளிக்கும் காணிக்கையும், தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலியும் கோயிலுக்குத்தான் போகிறது. ஆனால், இதுவரை கோயில் நிர்வாகம் எங்களுக்கு கழிப்பிட வசதியைக்கூட செய்து தரவில்லை. தங்குவதற்கு ஒரு மண்டபத்தைக்கூட இன்னும் கட்டவில்லை என்பது வருத்தமான விஷயம். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் திருநங்கையர் போலீஸில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்காததோடு, 'இந்த விழாவில் அது சகஜம்தானே' என்ற கமென்ட் வேறு கிடைக்கிறது. அவர்கள் ஊர்த் திருவிழாவில் பெண்களைச் சீண்டினால் அப்படித்தான் இருப்பார்களா?' நாங்களும் பெண்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. எங்களையும் கௌரவமாக நடத்த வேண்டும்'' என்று வேதனையோடு சொல்கிறார் கிரேஸ் பானு.

இந்த விழாவைக் குறித்து திருநங்கையான இன்பாவிடம் பேசினோம். ''எங்களின் வழிபாட்டுக்கு உரிய இந்த விழாவில் சில ஆண்கள் செய்யும் தொந்தரவுகள் எங்களைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இங்கு வரும் திருநங்கைகளும் இதைப் புனித விழாவாகக் கருதி எந்தத் தவறும் செய்யாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இந்த விழாவையொட்டி அரசு அதிகப் பேருந்துகளை கூவாகம் மார்க்கத்தில் இயக்க வேண்டும். புதிதாக கூவாகம் விழாவுக்கு வரும் திருநங்கையர்கள் இந்த விழாவின் புனிதம், புராணம், வரலாறு எல்லாம் தெரிந்துகொண்டு வர வேண்டும். அப்போதுதான் அங்கு நடக்கும் தவறுகள் களையப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 30, மே 1, மே 2 ஆகிய மூன்று நாள்களில் திருவிழா நடைபெறுகிறது. 1-ம் தேதி தாலிக்கட்டும், மறுநாள் தாலி எடுக்கும் நிகழ்வும் நடக்கும்’’ என்றார்.



கூவாகம் திருவிழா புராதன விழா மட்டுமல்ல, பெருமைக்கு உரிய திருநங்கையர்களின் உரிமை விழாவும்கூட. பெண்மையை மதிப்பவர்கள் நிச்சயம் இந்த விழாவையும் மதிப்பார்கள் என்றே நம்புவோம்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...