Sunday, April 29, 2018

``பக்கத்து வீட்டு அண்ணங்கதான் இப்படி பண்ணாங்க!'' - கவனத்துக்கு வராத கோவை பாலியல் வன்முறை 

இரா. குருபிரசாத் Coimbatore: 

vikatan

காஷ்மீரில் 8 வயது சிறுமி, கடத்தப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட அதே நேரத்தில்தான், நம் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில், காஷ்மீர் சிறுமியின் வயதை ஒட்டிய 5 சிறுமிகள், பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த மூவரும் 15 வயதைத் தாண்டாத சிறுவர்கள் என்பது வேதனையான அதிர்ச்சி.

,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சிறு கிராமம். அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், உடல் பரிசோதனை செய்தார். அப்போது, ஒரு சிறுமியின் பிறப்புறுப்பில் வீக்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்தச் சிறுமியிடம் மருத்துவர் பேச்சுக் கொடுத்துள்ளார். அவள் சொன்னவை பேரதிர்ச்சி தருபவை. ``எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற அண்ணங்கதான் தினமும் இப்படிப் பண்ணுவாங்க. என்னைய மட்டுமில்லே. இதே மாதிரி, நாலு பேரை பண்ணுவாங்க” என்றவள், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அந்தச் சிறுவர்களின் பெயரையும் சொல்லியிருக்கிறாள்.

இந்தச் சம்பவம் சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்துள்ளது. ஓர் சிறுமியின் பிறப்புறுப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியால் சிறுநீரை அடக்கமுடியாமல், பலமுறை வகுப்பறையிலேயே கழித்திருக்கிறாள். ``வகுப்பறைக்குள் இப்படி பண்ணக்கூடாது” என ஆசிரியர் பலமுறை கூறியும், அடக்க முடியவில்லை. ஒருகட்டத்தில், சிறுமியின் பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். அவர்களோ தங்கள் மகளை மருத்துவரிடம்கூட அழைத்துச் செல்லவில்லை என்பது வேதனையின் உச்சம்.

இந்நிலையில், சுகாதார மருத்துவர் மூலம் குழந்தைகளின் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். அந்தச் சிறுவர்களின் மீது புகார் அளிக்கவும் மறுத்திருக்கிறார்கள்.

அந்தச் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள், அருகருகே வசித்துவருபவர்கள். வெளி உலகம் குறித்து அறியாதவர்கள். இதனால், ``அந்தப் பசங்களும் எங்க சொந்தக்காரங்கதான். எங்கப் பொண்ணுங்களுக்கு நீங்க சொல்ற மாதிரி எந்தப் பிரச்னையும் இல்லை. இது எங்க குடும்பப் பிரச்னை. நாங்களே பார்த்துக்கிறோம். யாரும் தலையிட வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.



சிறுமிகளுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை முதலில் கண்டறிந்த மருத்துவரான ப்ரீத்தி, இந்த விவகாரத்தை சைல்டு லைனுக்கு தெரிவித்துள்ளார். அவர்களும் அந்தக் கிராமத்துக்குச் சென்று, சிறுமிகளின் பெற்றோரிடம் பேசியும் ஒத்துழைக்கவில்லை. ``உங்ககிட்டே வந்தால், எங்க குழந்தைகளை ஹோமுக்கு கூட்டிட்டுப் போய்டுவீங்க. அதனால், நாங்களே பார்த்துக்கிறோம் கிளம்புங்க” என்று விரட்டியுள்ளனர்.

எனவே, சைல்டு லைன் அதிகாரிகள் சார்பில், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் 3 சிறுவர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். விஷயம் தமிழக டி.ஜி.பி வரை சென்றது. சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் நடையோ நடை நடந்துள்ளனர். ஆனால், சிறுமிகளின் பெற்றோர்கள் மசியவேயில்லை. இதுதொடர்பாக, அந்தப் பள்ளியில் கவுன்சிலிங் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினத்திலிருந்து சிறுமிகள் பள்ளிக்கு வரவில்லை. சில சிறுமிகள் தேர்வுகளையும் எழுதவில்லை. “அந்தக் ஸ்கூலுக்கு வந்தாதானே இதெல்லாம் பண்ணுவீங்க? எங்க புள்ளைங்களை வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறோம்” என்று சொல்கிறார்களாம்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த ஒன்றாம் மற்றும் 3-ம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் சிறுவர்கள் என்பதால், இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மருத்துவர் ப்ரீத்தி, ``அந்தச் சிறுமிகள் யாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யமுடியவில்லை. பரிசோதனை செய்து பார்த்தால்தான் பிரச்னையின் முழுமை தெரியவரும். பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மைனர் என்பதால், எங்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்றார்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, ``யார் கேட்டாலும் இப்படி ஒரு விஷயம் நடக்கவேயில்லைனு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுமிகளும் சிறுவர்களும் `அப்படி எதுவும் நடக்கலை’னு அழுத்தமா சொல்றாங்க. அவங்க வீட்டிலும் ஒத்துழைக்க மாட்டேங்கறாங்க. பசங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்படி சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தலாம்னு இருக்கோம்” என்றனர்.

சைல்டு லைன் தரப்பில், ``சிறுமிகளின் பெற்றோர்கள் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவே தயாராக இல்லை. எந்த ஒரு பிரச்னையையும் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முழு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். இதைப் பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்” என்றனர்.



இந்நிலையில், இந்த வழக்கை சத்தமில்லாமல் முடித்துவிடும் வேலைகளும் ஒரு பக்கம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், அந்தப் பகுதியின் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரை, சிறுமிகளின் பெற்றோர்கள் அணுகியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அவரின் பங்கும் முக்கியமானது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டிருந்த 3 மாணவர்களும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.

``தமிழகத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்கதான், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சமூகம் குறித்த விழிப்பு உணர்வும் அவர்களிடம் இல்லை. அவர்களின் ஜாதிகளைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், இதுபோன்ற விஷயங்களுக்குக் குரல் கொடுப்பதில்லை'' என்று வருத்தப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது விஷயமாக பேசிய மனநல மருத்துவர் ஷாலினி, ``அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததுதான் பெரிய பிரச்னை. `போலீஸ்கிட்ட போனாலும், நம்ம பேர்தான் கெடும். நமக்கு எந்தப் பலனும் இல்லே’ என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். அரசின் மீது நம்பிக்கையிருந்தால், கண்டிப்பாக போராட முன்வருவார்கள். இதுபோன்ற விஷயங்களை நாம் பக்குவமாக கையாள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் பங்கும் இதில் இருக்கிறது. காஷ்மீர் சிறுமி விவகாரம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதும், அது சம்பந்தமாக விவரங்கள் ஆபாச வலைதளங்களில் அதிகளவு தேடப்பட்டுள்ளது. நமது மாணவர்களுக்குப் பாலியல் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்பது தெரிவதில்லை.

இதுகுறித்து. பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஊடகங்களிலும் இதுதொடர்பாக அதிகளவு விழிப்பு உணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும். இதுபோன்ற உணர்வு விளம்பரங்களை இலவசமாக வெளியிட வேண்டும் என அரசே ஓர் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, அந்தச் சிறுமிகளின் குடும்பத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், பலமுறை எடுத்துச் சொல்லியும், இந்த விஷயம் தொடர்பாக பேச முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.



வக்கிரம் படைத்தவர்களின் வன்முறை ஒரு பக்கம் என்றால், அறியாமையில் கிடக்கும் பெற்றோர்கள் இன்னொரு பக்கம். பாவம் குழந்தைகள். அரசு என்ன செய்யப்போகிறது?

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...