Sunday, May 20, 2018

காஞ்சி முனிவரின் கோடீஸ்வர காரோட்டி

Published : 15 May 2018 10:00 IST

ஸ்ரீதர் சுவாமிநாதன்










‘‘மேத்தா... தலையை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியலே...’’

முக்தி அடைவதற்கு முதல் நாள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இவை. தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசியவர்... சுமார் 75 ஆண்டுகளாக குரு சேவையையே பணியாகக் கொண்டு வாழ்ந்து வரும் 83 வயதான சந்திரசேகர மேத்தா. பல தலைமுறைகளாக அவரது குடும்பமே காஞ்சி மடத்துக்கும் சங்கராச்சாரியார்களுக்கும் பணியாற்றி வருகிறது.

மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்ட இவரது பெயரும் சந்திரசேகரன்தான். அந்தப் பெயரை இவருக்கு வைக்கும்படி ஆசி வழங்கியதும் மகா பெரியவர்தான். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அணுக்கத் தொண்டராக இருந்து 64 ஆண்டுகளாக அவரோடு அருகிலேயே இருந்து பணியாற்றியதோடு, அவருக்கு கார் ஓட்டிய பெருமைக்கு உரியவர் சந்திரசேகர மேத்தா. ‘‘காஞ்சி முனிவரின் அருளாசியால் பெரும் கோடீஸ்வரக் குடும்பம் எங்களுடையது. அவர்களுக்கு சேவை செய்வதே எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்’’ என்று சிலிர்ப்புடன் கூறும் சந்திரசேகர மேத்தாவை சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்தோம். அவரது நினைவுகளில் இருந்து..

சந்திரசேகர மேத்தாவின் முன்னோர்கள் குஜராத்தின் ‘கேடவாள்’ என்ற வகுப்பைச் சேர்ந்த ரிக் வேத பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி..1685-ல் மேத்தாவின் மூதாதையர் குஜராத்தில் இருந்து தமிழகம் வந்தனர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜாவின் ஆலோசனைப்படி அப்போது கும்பகோணத்தில் இருந்த காஞ்சி மடத்துக்குச் சென்று அப்போதைய பீடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியாரை தரிசித்தனர். அப்போதில் இருந்து மேத்தாவின் குடும்பத்தினருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது.

சந்திரசேகர மேத்தாவின் பாட்டனார்கள் ‘டி.பி. மேத்தா அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். பெரும் செல்வந்தர்களாக விளங்கினர். சந்திரசேகர மேத்தாவின் தாத்தா ரங்கநாத் மேத்தா. ஆங்கிலேயர் ஆட்சியில் 1937 முதல் 47-ம் ஆண்டுவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கவுரவ நீதிபதியாக இருந்தவர். 1947 முதல் 52-ம் ஆண்டுவரை இந்தியன் வங்கியின் இயக்குநராக இருந்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தவர்.

ரங்கநாத் மேத்தாவின் மூத்த சகோதரர் ராமநாத் மேத்தா. அவரது மகன் நீலகண்ட மேத்தா. ‘‘இப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெரு இவரது பெயரில் அமைந்ததுதான். நீலகண்ட மேத்தாவின் சகோதரர் சிவசங்கர மேத்தா 1963-64-ல் சென்னை மாநகர மேயராக இருந்தவர். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் உள்ள ‘மேத்தா நகர்’ எனது பாட்டனார் பெயரில் அமைந்ததுதான்’’ என்று பூரிப்போடு சொல்கிறார் சந்திரசேகர மேத்தா.

இவருடைய தாத்தா ரங்கநாத் மேத்தா, காஞ்சி மகா பெரியவருடன் கூடவே இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்தவர். 1923-ம் ஆண்டு மகா பெரியவர் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்தார். ரத்னங்கள் பதிக்கப்பட்ட அந்த தாடங்கங்களை மகா பெரியவர் உத்தரவுப்படி ரங்கநாத் மேத்தாவும் அவரது சகோதரர்களும் கைங்கர்யமாக செய்து கொடுத்துள்ளனர். ‘‘என் தாயின் வயிற்றில் நான் இருந்தபோதே எனக்கு பெயர் வைத்தவர் மகா பெரியவர்’’ என்று கூறி ஆச்சரியப்படுத்தினார் சந்திரசேகர மேத்தா. எப்படி.. என்று மனதில் தோன்றியபோதே அவரே விளக்கினார்.

பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் வாகனத்தில் செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மகா பெரியவர் கூறியிருக்கிறார். 1958-ல் காஞ்சி மடத்துக்கு கார் வாங்கப்பட்டது. சந்திரசேகர மேத்தா தனது சொந்தக் காரை ஓட்டியபடி வருவதை பல முறை பார்த்த பெரியவர் அவரையே மடத்தின் காரை ஓட்டுமாறு பணித்தார். ‘‘1998-ம் ஆண்டு வரை ஜெயேந்திரர் செல்லும் காரை நான் ஓட்டினேன். பிறகு, எனக்கு வயதாகிவிட்டதால் எனது மகன் ரமேஷ் மேத்தா அந்தப் பணியைச் செய்தார்.

இப்போதும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ரமேஷ் மேத்தாதான் கார் ஓட்டுகிறார். இது எங்கள் பரம்பரைக்கு கிடைத்த பேறு’’ என்கிறார் மேத்தா பெருமிதத்துடன்.

மகா பெரியவர் பற்றிய மேத்தாவின் நினைவுகளை கேட்டோம். சில விநாடிகள் நெற்றி சுருக்கி சிந்தனையில் மூழ்கியவர் பிரகாசமான முகத்துடன் சொன்னார்.. ‘‘ஒருமுறை சந்திரமவுலீஸ்வரர் பூஜை முடிந்து மகா பெரியவர் எல்லாருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். பிரசாதம் பெற்றுக் கொள்ள வரிசையில் ஒருவராக வந்து கொண்டிருந்தார் ‘கல்கி’ சதாசிவம். அவர் பெரியவர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பெரியவருக்கும் சதாசிவம் மீது அலாதி அன்பு. சதாசிவம் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். கடல் கடந்து சென்று வந்தவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுவது இல்லை. இது தெரியாமல் சதாசிவம் வரிசையில் வந்து கொண்டிருந்தார். மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு சதாசிவம் வெளிநாடு சென்று வந்தவர் என்று தெரியும். இருந்தாலும் அவரிடம் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்துடன் தவித்துக் கொண்டிருந்தனர். பெரியவரை நெருங்கிய சதாசிவம் தீர்த்த பிரசாதம் பெற பவ்யமாக கை நீட்டினார். எல்லாருக்கும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு.. பெரியவர் சிரித்தபடி தன் முன் இருந்த தேங்காயை எடுத்து பக்குவமாக உடைத்து அதன் இளநீரை சதாசிவத்தின் கைகளில் பிரசாதமாக ஊற்றினார். மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற சதாசிவம், ‘எனக்கு ஸ்பெஷல் பிரசாதம்’ என்று பூரித்தார். கடல் கடந்து சென்றவருக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கக் கூடாது என்ற சம்பிரதாயத்தையும் பெரியவர் மீறவில்லை. தன் பக்தரையும் ஏமாற்றவில்லை. தர்மத்தின் அவதாரம் மகா பெரியவர்’’.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கார் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.. ‘‘ஜெயேந்திரருக்கு ஏழைகள், என்றால் மிகவும் பரிவு. எப்போதும் காரில் புடவை, வேட்டி, போர்வை, ஜமுக்காளம் ஆகியவை நிறைய இருக்கும். சாலையோரம் உள்ள சாதாரண மக்களைக் கண்டால் அவற்றை எடுத்துக் கொடுப்பார். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, 5 லாரி நிறைய அரிசி, ஸ்டவ், மண்ணெண்ணை மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஜெயேந்திரருடன் குஜராத் சென்றது மறக்க முடியாத அனுபவம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஜெயேந்திரரே வழங்கினார். முக்தியடைவதற்கு முதல் நாள் காலை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தலை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியவில்லை’ என்று தெரிவித்தார். நான் பதறிப் போனேன்.. மறுநாள்...’’ என்று வார்த்தையை முடிக்க முடியாமல் கலங்கிய மேத்தாவை உற்சாகப்படுத்தும் வகையில், ‘‘ஜெயேந்திரருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாமே?’’ என்று கேட்டோம். மீண்டும் உற்சாகமாக பேசினார் மேத்தா..

‘‘ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் கொடைக்கானல் சென்றிருந்தோம். ஆர்.ஆர்.ராஜூ என்பவரும் பெரியவரின் பக்தர்தான். அவர் கோல்ஃப் விளையாட்டைப் பற்றி ஜெயேந்திரரிடம் சொன்னார். கையில் பிடித்திருக்கும் ‘ஸ்டிக்’கால் சிறிய பந்தை அடித்து குழிக்குள் விழவைக்க வேண்டும் என்று விளக்கினார். இதை கவனித்த ஜெயேந்திரர் கோல்ஃப் விளையாடுவதற்கான சிறிய பந்தை எடுத்து குழிக்குள் போட்டுவிட்டு நிதானமாக.., ‘இதற்கு போய் இவ்வளவு கஷ்டப்படுவானேன்?’ என்று கேட்டு கலகலவென சிரித்தார்’’ என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்கினார் சந்திரசேகர மேத்தா!
தூக்க மாத்திரை கேட்டு இளைஞர்கள் தொல்லை: இரவு நேரங்களில் மருந்து கடைகளில் அட்டூழியம்

2018-05-19@ 15:10:57
செங்கல்பட்டு: போதைக்காக மருந்துக்கடைகளில் தூக்கமாத்திரை கேட்டு அலையும் இளைஞர்கள், ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அன்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. செங்கல்பட்டை அடுத்த சிங்கெருமாள் கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மருந்து கடை ஒன்றில் 2 இளைஞர்கள் தூக்க மாத்திரை தரும்படி கேட்டிருக்கின்றனர். மருந்து சீட்டு இல்லாமல் தர முடியாது என ஊழியர்கள் கூறியதால் கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஊழியர் மாரிமுத்துவின் கையில் குத்தியதுடன், அங்கிருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து தலையில் சரமாரியாக கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாது கடையில் இருந்த 33 ஆயிரம் பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மூப்பனார் பாலம் அருகேயுள்ள மருந்து கடையிலும் போதை ஆசாமிகள் தூக்க மாத்திரை கேட்டதுடன் பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இத்திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

    2018-05-19@ 00:43:48 புதுடெல்லி: பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி. பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும். எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும்.

இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் 25 நொடிகள் முன்னதாக கிளம்பிய ரயில்: மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்!

2018-05-18@ 17:40:26

கோக்கியோ: ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்கூட்டியே ரயில் கிளம்பி சென்றதால் பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் புறப்பட வேண்டிய ரயில் 25 நொடிகள் முன்னதாக கிளம்பி சென்றது. அந்த ரயிலில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு கோபமடைந்துள்ளனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பயணிகள் ரயிலை தவறவிட்டதை அறிந்த ரயில்வே நிர்வாகம் தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியுள்ளது. ரயில் நடத்துனர் நேரத்தை தவறாக புரிந்துகொண்டிருப்பதாக ஜப்பான் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் ஜப்பானில் வாடிக்கையாளர்களால் நிறுவனத்தின் தரத்தை குறைக்க காரணமாக அமையும். ரயில் ஒன்று கடந்த நவம்பரிலும் 20 வினாடிகள் மூன்கூட்டியே புறப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
சி.ஏ., படித்தால் வேலை நிச்சயம் : கலந்தாய்வு நிகழ்ச்சியில் விளக்கம்

Added : மே 20, 2018 00:40

தாம்பரம்: 'அர்ப்பணிப்புடன் படித்தால், எளிதாக சி.ஏ., ஆகலாம்' என, மாணவர்களுக்கான இலவச கலந்தாய்வு நிகழ்ச்சியில், அறிவுரை வழங்கப்பட்டது. 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' படிப்பான, சி.ஏ., குறித்த, இலவச கலந்தாய்வு நிகழ்ச்சி, கிழக்கு தாம்பரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பட்டயக் கணக்காளர் கிளை அலுவலகத்தில் நடந்த, இந்த கலந்தாய்வில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடந்த கலந்தாய்வில், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்றனர்.சி.ஏ., என்றால் என்ன; இந்த படிப்பில் எப்படி சேர்வது; படிப்பின் முக்கியத்துவம்; பயன்கள்; தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து, மாணவர்கள் கேட்டறிந்தனர்.சி.ஏ., படித்தால், என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து, மாணவர்கள் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டனர்.கிளை அலுவலக தலைவர் சுந்தரராஜன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சிவகுருநாதன் ஆகியோர், சி.ஏ., படிப்பு குறித்து விளக்கியதோடு, மாணவ - மாணவியரின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.பயனுள்ள இந்த கலந்தாய்வு நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் இன்று நடக்கிறது. கிளை தலைவர் சுந்தரராஜன் பேசியதாவது:மாணவர்கள், அவரவர் திறமையால் தான், படிக்க வேண்டும். அதற்கு, இது ஒரு வழிகாட்டி நிகழ்ச்சி மட்டுமே. இங்கு, சி.ஏ., படிப்பு குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படும்.உந்துதல், அர்ப்பணிப்புடன் படித்தால், எளிதாக, சி.ஏ., முடிக்கலாம். சி.ஏ., படிப்பு கஷ்டமானது இல்லை. நான்கு வருடம் படித்தாலே போதும், எளிதாக, தேர்ச்சி பெறலாம். சி.ஏ., படித்தால், நிச்சயம் வேலை வாய்ப்பு உண்டு.இவ்வாறு அவர்

பேசினார்.
சீரடிக்கு தனி சிறப்பு ரயில்

Added : மே 19, 2018 21:57

கோவை:சீரடிக்கு தனி சிறப்பு ரயில் ஜூன் 3ம் தேதி மதுைரயிலிருந்து புறப்படுகிறது; ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., தெற்கு உதவி பொது மேலாளர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை, 300க்கும் அதிகமான சுற்றுலாத் தலங்களுக்கு, லட்சக்கணக்கானோர் இதன்கீழ் பயணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, சீரடியில் அமைந்துள்ள சிறப்புமிக்க சாயிபாபா வழிபாட்டுத்தலத்திற்கு தனி ரயில் தமிழகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக சீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் வரை செல்கிறது. ஏழு நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு 6 ஆயிரத்து 615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணத்தில் ஸ்லீப்பர் வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். தவிர, ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், கிளீனிர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு வசதி உண்டு. விரும்புவோர் முன்பதிவுக்கு, 90031 40655 எண்ணிலோ, www.irctctourism.com யுனும் இணைய முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் வழித்தட எண் மாற்றம்

Added : மே 19, 2018 20:03

சென்னை:சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவேற்காடுக்கு, 27சி வழித்தட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்தின் வழித்தட எண்ணை, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை முதல், அதே வழித்தடத்தில், 27சி என்ற வழித்தட எண்ணுக்கு பதிலாக, 72சி என, எண் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது.ஏற்கனவே, இயக்கப்பட்டு வந்த, சாதாரண பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், வழக்கம்போல், புதிய வழித்தட எண்ணில் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 25.07.2026