Wednesday, June 13, 2018

குமரி திருப்பதி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்

Added : ஜூன் 12, 2018 21:10

நாகர்கோவில்: கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும், திருமலை திருப்பதி கோவில் பணிகளை, தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர் கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவில், 5 ஏக்கர் நிலப்பரப்பில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பதி கோவில் பணிகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணிகளை, தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவில் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, சுப முகூர்த்த தினம் பார்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் செய்யப்படும். அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், பணிகள் துரிதபடுத்தபட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர், ஆந்திர முதல்வர், தமிழக கவர்னர், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திருப்பதி கோவில் மீது பற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இது பொது மக்களுக்கான கோவில்; இதில் எந்த அரசியலும் கிடையாது' என்றனர். கோவில் மூலஸ்தானத்தில் அமைய உள்ள வெங்கடாஜலபதி சுவாமி சிலை, தேர் மற்றும் பிற சுவாமி சிலைகள் தயார் நிலையில் உள்ளது. ஜூன், 13ம் தேதி, திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர்கள் மற்றும் குருக்கள் வருகின்றனர். அவர்களும் திருப்பணிகளை பார்வையிட உள்ளனர்.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 26ல் கவுன்சிலிங் துவக்கம்

Added : ஜூன் 12, 2018 21:17

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களும், காரைக்கால் கிளையில், 50 இடங்கள் என மொத்தம், 200 இடங்களுக்கு, 2018- - 19ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, கடந்த ஜூன் 3ம் தேதி, நாடு முழுவதும், 291 மையங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, கடந்த 8ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசை அடிப்படையில், இடஒதுக்கீடு பிரிவின் தகுதிபட்டியலும் வெளியிடப்பட்டது. வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கலந்தாய்வு: முதல் நாளில் பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத் திறனாளி பிரிவு இட ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ல், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 28ல், புதுச்சேரி பொதுப் பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜிப்மர் மருத்துவக் குழுவினர் மூலம், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் மற்றும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகளின் உடல் தகுதி குறித்து, மருத்துவ ஆய்வு செய்யப்படும். சான்றிதழ்கள் அவசியம்: ஜிப்மர் கல்வி வளாகத்தின் தேர்வுப் பிரிவில், சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் சரிபார்த்தல் நடைபெறும். மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது, தங்களின் அசல் சான்றிதழ் , போனபைட் சான்றிதழ் ( கல்வி நிறுவனத்தின் மூலம் கையொப்பம் இடப்பட்டது), சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, நுழைவுச்சீட்டுடன், அனைத்து அசல் மற்றும் நகல் படிவத்தை எடுத்து வர வேண்டும என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தை தேர்வு செய்த பின், எந்த சூழ்நிலையிலும் வளாகத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வின்போது, ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் மாற்றம் செய்வது அனுமதிக்கப்படாது. ஆதாரமற்ற சான்றிதழை கொண்டுவரும் மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து நிராகரிக்கப்படுவர். கலந்தாய்வு நடந்த அன்று மதியம், மாணவர்கள் தங்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என, ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -
70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி

Added : ஜூன் 12, 2018 20:30



மெஹ்சானா: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ஒரு துறவி, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து வாழும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி, 88. சிவப்பு நிற உடையணியும் இவர், 'மாதாஜி' என, அழைக்கப்படுகிறார்.கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் இவரைப் பார்த்து, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அதிசயிக்கின்றனர். கடந்த, 2010ல், நம் நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து, பிரஹலாத் ஜனியை கண் காணிக்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு தனி அறையில், பிரஹலாத்தை, 15 நாட்கள் தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.இதன்பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால், தான் வணக்கும் கடவுளின் அருளால், தியானத்தின் வாயிலாக, தனக்கு சக்தி கிடைப்பதாக, பிரஹலாத் கூறினர்.பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள், பிரஹலாத்தின் ஆசிரமத்துக்கு வந்து, ஆசி பெற்றுள்ளனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு; திடீர் சலுகை அறிவிப்பு

Added : ஜூன் 12, 2018 23:10

 

லக்னோ : 'ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 'டெபிட்' அட்டை பயன்படுத்துவோரிடம், வங்கி பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது' என, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ரயில்களில் தினமும் முன்பதிவு செய்யப்படும், 10 லட்சம் ரயில் டிக்கெட்டுகளில், ஏழு லட்சம் டிக்கெட்டுகள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர், 'கிரெடிட்' மற்றும் 'டெபிட்' அட்டைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள், பரிவர்த்தனை கட்டணமாக, குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன.

கிெரடிட் அட்டைக்கு, பரிவர்த்தனை கட்டணமாக, 1.8 சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. டெபிட் அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுகிறது. சில வங்கிகள், ஒரு டிக்கெட்டுக்கு, 10 ரூபாய் வசூலிக்கின்றன. சில வங்கிகள், 5,000 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணத்திற்கு, ஐந்து ரூபாயும், அதற்கு மேலான தொகைக்கு, 10 ரூபாயும் வசூலிக்கின்றன.

இது குறித்து, பயணியர் அளித்த புகாரையடுத்து, டெபிட் அட்டை மற்றும் 'இ - வாலட்' என்னும் டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்வோரிடம், பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும், ஐ.ஆர்.சி.டி.சி., கடிதம் அனுப்பியது. இதையடுத்து, டெபிட் அட்டை மற்றும் இ - வாலட் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம், பரிவர்த்தனை கட்டண வசூலிப்பதை, வங்கிகள் நிறுத்தியுள்ளன.
சேலம் மாநகரில் மீண்டும் அதிரடி நடவடிக்கை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு




சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது போலீசார் மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜூன் 13, 2018, 04:46 AM சேலம்,

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சேலம் மாநகரில் ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக இதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாநகரில் நேற்று முதல் மீண்டும் ஹெல்மெட் சோதனை அதிரடியாக தொடங்கியது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

இதேபோல் மாநகரில் பல இடங்களில் போலீசார் சோதனை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாரை கண்டதும் வாகனங்களை திருப்பி வேறு பக்கமாக சென்றதை பார்க்க முடிந்தது. சேலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tuesday, June 12, 2018

தொழில் தொடங்கலாம் வாங்க! - 23: உங்களுடைய தொழிலின் நோக்கம் என்ன?

Published : 18 Jul 2017 10:56 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



ஒவ்வொரு தொழில் முனைவோரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது ஒன்றுதான். தாம் ஏன் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும். தொழிலின் நோக்கம் புரிய வேண்டும். “இதென்ன பிரமாதம், இது தெரியாமலா, நான் இத்தனை நாட்கள் தொழில் செய்கிறேன்?” என்று என்னிடம் கோபிக்க வேண்டாம்!

தரமும் மனநிறைவும்

ஒரு பழைய கதை உண்டு. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் மூவர் ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தனர். கல் உடைக்கும் வேலை கடும் வெயிலில் நடந்துகொண்டிருந்தது. அங்கு வந்த பெரியவர் முதலாவது ஆளிடம் கேட்டார்: “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”


“வயித்துப் பொழப்பு சார். அதான் இந்தக் கல் உடைக்கிற வேலையில இருக்கேன், தினம் இதே வேலைதான்”

இரண்டாவது ஆளிடம் அதே கேள்வியைக் கேட்டாராம். “கோயில் கட்டற வேலை சார். நடைபாதை செய்யக் கல்லைச் செதுக்கிட்டு இருக்கேன்!” என்று பதில் வந்தது.

மூன்றாவது ஆளிடம் அதே கேள்வியைக் கேட்டாராம். “இறைவன் திருப்பணியில் இருக்கிறேன். பக்தர்களின் ஆன்மிகச் சேவைக்கு என்னால் ஆன சிறு பணி இது. நான் செதுக்கும் கல் கோயிலை உருவாக்குவதால் அதைப் பக்தி சிரத்தையுடன் செய்கிறேன்!” என்றாராம்.

ஒரே வேலையைச் செய்யும் மூவர் மூன்று விதக் கற்பிதங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கட்டமைத்த நோக்கம்தான் அவர்கள் வேலையின் தரத்தையும் அவர்களின் மனநிலையையும் உருவாக்குகிறது. இது பணியில் இருப்பவர்களைவிடத் தொழில் செய்பவர்களுக்கு அதிகமாகப் பொருந்தும்.

காணாமல் போவதும் புதுபித்துக்கொள்வதும்

நீங்கள் உங்களுடைய தொழிலின் நோக்கம் என்ன என்பதை அடிக்கடி யோசியுங்கள். அதுதான் உங்கள் இலக்கை நிர்ணயிக்கும். வழிமுறைகளைத் தீர்மானிக்கும். உங்களையும் உங்கள் தொழிலையும் புதிய திசைகளுக்கு இட்டுச் செல்லும்.

சந்தை மாறுதல்களிலும் வீழ்ச்சியடையாமல் புதிய உயரங்களை நோக்கிப் போகும் நிறுவனங்கள் வித்தியாசமாக என்ன செய்கின்றன? முதலாவதாக, தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றன. பிறகுதான் புதிய சிந்தனைகள் எல்லாம்.

புரியவில்லையா? ஓர் உதாரணத்துடன் இதை விளக்குகிறேன்.

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் பழைய தியேட்டர்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போவதைத் தொடர்ந்து கவனிக்கிறோம். ரியல் எஸ்டேட் தாறுமாறாய் ஏறுகிறது ஒருபுறம். இன்னொரு புறம் வீட்டில் சி.டி., ஆன்லைன் என மக்கள் திருட்டுத்தனமாகப் படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தியேட்டர் பராமரிப்பும் கடினமாகிறது. படங்களும் சில்வர் ஜுபிளியெல்லாம் போவதில்லை. இதனால் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும், அடுக்குமாடி குடியிருப்பாகவும் ஆயின தியேட்டர்கள். நான் சிறுவயதில் வசித்த இடத்தின் அருகில் இருந்த பாரகன், சித்ரா, கெயிட்டி, வெலிங்டன், பிளாசா, அலங்கார், இப்போது ‘சாந்தி’வரை அனைத்துத் தியேட்டர்களும் வடிவமாற்றம் பெற்றுவிட்டன. ஆனால், சத்யம் காம்ப்ளக்ஸ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இன்றும் இளைஞர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. அபிராமி காம்ப்ளக்ஸையும் உதாரணமாகக் காட்டலாம்.

என்ன நோக்கம் அது?

“தியேட்டர் டிக்கெட்டைவிட ஆன்லைனுக்கு எக்ஸ்ட்ரா, கார் பார்க்கிங்க் காசு, பாப்கார்ன் விலை, படத்துக்கு முன்னோ பின்னோ அமர்ந்து உண்ண உணவகம், விளையாட்டுக் கூடங்கள், கிரஷ் எனச் சகல வழிகளும் காசு பண்ணினால் வெற்றிகரமாக இயங்க முடியாதா என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு அதிக வசதியும் செல்வாக்கும் இருப்பதாகக்கூட நீங்கள் நிரூபிக்கலாம். ஆனால், எல்லா தியேட்டர்களும் மூடும் நிலையில் இவர்களை நிலைத்திருக்கச் செய்வது எது? அவர்கள் தங்கள் தொழிலின் நோக்கத்தைப் புரிந்துகொண்டதால்தான். என்ன நோக்கம் அது?

தரமான தியேட்டரில் நல்ல படம் காட்டுவதுதான் தங்களுடைய நோக்கம் என மற்றவர்கள் இருந்தார்கள். அதனால் அவர்கள் கவனம் தியேட்டர் பராமரிப்பிலும் நல்ல படத்தை எடுப்பதில் மட்டுமே இருந்தது. ஆனால், இவர்கள் தங்கள் நோக்கத்தைச் சற்று விசாலமாகப் பார்த்தார்கள்: படம் பார்ப்பவர்களை போஷிப்பது என்பதுதான் அது. அப்படி என்றால் படம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. கழிவிடங்களின் சுத்தம், வாகன நிறுத்தம், பணியாளர்களின் இதமான வாடிக்கையாளர் சேவை, பார்வையாளர்களின் இதர தேவைகளைப் பூர்த்திசெய்வது எனப் புதிய திசைகளில் சிந்தித்தார்கள். ஒரு பொழுதுபோக்குப் பூங்கா போலத் தங்களைக் கற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். படம் பார்க்க மட்டும் மக்கள் கிளம்பி வர மாட்டார்கள். ஒரு மாலை நேரத்தைக் குடும்பத்துடன் கழிக்க வந்தால் அதற்கு எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பல கேளிக்கைகளில் படம் பார்த்தலும் ஒன்று. இதைச் செய்தவர்கள் புதிய உயரத்தைத் தொட்டார்கள்.

புதிய காரணம் கண்டுபிடியுங்கள்!

சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு புதிய படம் பார்க்க ஒரு பழைய காம்ப்ளெக்ஸுக்குப் போயிருந்தேன். சற்று முன்னதாகச் சென்றதால் வெளியே வரிசையில் நிற்க வைத்தார்கள். குச்சி வைத்த காவல்காரர் உள்ளே சீட்டு கிழித்து அனுப்பினார். முப்பது வருடத்துக்கு முன்பு இது சகஜம். இன்னமும் அதே மனோபாவத்துடன் இருந்தால்? சுற்றிப் பார்த்தேன். குடும்பங்கள் அதிகமாக இல்லை. நல்ல படம். நியாயமான கட்டணம்தான். ஆனால், இடைவேளையில் நம்பி ஒன்றை வாங்கிச் சாப்பிட முடியவில்லை. கழிவறையின் துர்நாற்றத்தில் மயக்கமே வந்தது.

உங்கள் தொழிலின் நோக்கத்தைத் தொடர்ந்து ஆராயுங்கள். உங்கள் வாடிக்கையாளரைத் தக்கவைக்க, உங்களிடம் மட்டுமே அவர்கள் வருவதற்கான புதிய காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

இந்தப் படம் எங்கு ஓடுகிறது என்று பார்த்து அந்த தியேட்டரை நோக்கி ஓடியது அந்தக் காலம். அந்த மாலில் அல்லது காம்ப்ளக்ஸில் எந்தப் படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் உள்ளது என்று பார்த்துப் போவது இந்தக் காலம். உங்கள் தொழிலின் நோக்கம் உங்கள் இளைய வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவதாக இருக்கட்டும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தொழில் தொடங்கலாம் வாங்க! - 20: சிறிய தொழிலைப் பெரிதாக்க முடியுமா?

Published : 20 Jun 2017 10:54 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





தொழிலை வளர்க்கும் சூத்திரம் என்ன? யாருடைய தயவில்லாமல் பல இடங்களில் பணம் பண்ண வேண்டும். அதற்குத் தோதான பிஸினஸ் மாடல் வேண்டும். தொழிலை ஒரு இடத்தில், ஒரு காலகட்டத்தில் கட்டிப்போடும் விஷயம் எதுவாக இருந்தாலும், அதை விலக்க வேண்டும்.

சில்லறை வியாபாரத்தில் ஒரு ஆள் பல ஊர்களில் முதல் போட்டுக் கிளை பரப்ப முடியாது என்னும் பட்சத்தில் முகமை (ஃப்ரான்சைஸ்) முறையைக் கையாளலாம். ஏனென்றால், ரிலையன்ஸ் ஜியோ கடை பரப்புவது போலத் தன் காசிலேயே நாடு முழுவதும் விஸ்வரூப வளர்ச்சி எடுக்கக்கூடிய நிறுவனங்கள் மிக மிக சொற்பம். அதனால் உங்கள் பிராண்டையும் பொருளை அல்லது சேவையையும் ஒரு குறிப்பிட்ட லாபப் பங்கீட்டு முறையில் இன்னொரு நபர் அல்லது நிறுவனத்துக்கு அளித்தல்தான் ஃப்ரான்சைஸ் முறை. இன்று முடி திருத்தும் நிறுவனம் முதல் சூப்பர் மார்க்கெட்வரை பல இந்த முறையில் இயங்கிவருகின்றன.

பெயரை வைத்து பணம் பண்ண முடியாது

இதை நீங்கள் செய்வதற்கு முன் சில கேள்விகள் கேட்க வேண்டும். நம்முடைய தொழில் லாபமாக இயங்குகிறதா? நம்முடைய பிராண்ட் / பெயர் ஊர் அறிந்ததா? பல கிளைகளில் பரவும் அளவுக்கு இந்தத் தொழிலுக்குச் சந்தையில் இடம் உள்ளதா? தனி ஆளின் தனித்திறமையை மட்டும் நம்பாமல் எங்கு வேண்டுமானாலும், யார் செய்தாலும் பணம் சம்பாதிக்கும் பிஸினஸ் மாடல் உள்ளதா? முகமை வளர்க்கும் நேரமும் திறமையும் மனப்பக்குவமும் நம்மிடம் உள்ளதா? பெயரை மட்டும் தாரை வார்த்துவிட்டுப் பணம் பண்ணும் வழி அல்ல இது.

நம் முகமைக்காரர்களின் வெற்றி, நம் வெற்றி என்று நினைத்து உழைக்க வேண்டும். எங்கே சென்றாலும் ஒரே தரம் என்று வாடிக்கையாளர்கள் நம்பத்தகுந்த வகையில் நிலையான பொருள் தரம் அல்லது சேவைத் தரம் வேண்டும். அதற்கு நிர்வாகக் கட்டுப்பாடுகளும் பயிற்சியும் மிக அவசியம். வளர்ந்துவரும் காலங்களில் எல்லாக் கிளைகளையும் நிர்வாகம் செய்வதும் பெரும் பணி. அதனால் இதையெல்லாம் முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

பெருக்கும் வழி

தொழிலைப் பன்மடங்காகப் பெருக்க இன்னொரு வழி தொழில்நுட்பம். கல்லூரி வளாகத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம்தான் ஃபேஸ்புக். இன்று அது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆனால், முதலாளி ஊர் ஊராகச் சென்று கிளை பரப்பவில்லை. உலகெங்கும் கொண்டு சென்றது தொழில்நுட்பம். கடந்த பத்தாண்டுகளில் நம்ப முடியாத விஸ்வரூப வளர்ச்சி கண்டவை அனைத்தும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களே.

எல்லாத் தொழில்களிலும் ஏதோ ஒரு வகையில் தொழில்நுட்பத்தைப் பிடித்துக் கொண்டு வளர முடியும் என்று திடமாக நம்புகிறேன். பிஸினஸ் மாடல் தொழிலுக்குத் தொழில் மாறுபடலாம். ஆனால் அடி நாதமாய் உள்ள விஷயம் தொழில்நுட்பத்தின் உதவி. இன்று பிரபலமாக உள்ள எல்லா ‘ஆப்’களையும் பாருங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.

ஒரு கார்கூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி, வாடகைக்கு கார் அனுப்பிப் பன்னாட்டு நிறுவனமாக வளர்கிறது. ஒரு ஓட்டல்கூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி, உங்களுக்கு வீடு தேடி வந்து உணவளிக்கிறது. ஒரு கடைகூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி நீங்கள் கேட்கிற எல்லாப் பொருட்களையும் கொண்டுவந்து உங்களிடம் கொட்டுகிறது.

“என் தொழில் ஐ.டி. சார்ந்தது அல்ல. நான் எப்படித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது?” என்று குழம்ப வேண்டாம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கு ஏற்ற மாதிரித் தொழில்நுட்பத்தைக் கையாளலாம். ஒரு பொருளைத் தயாரிக்கவோ விற்கவோ இன்று ஏதோ ஒரு வகையில் நீங்கள் கட்டாயம் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள். உதாரணத்துக்குப் பல சிறிய ஓட்டல்களிலேயே சாப்பிட ஆர்டர் எடுக்க, உள்ளே ஆர்டரைச் செலுத்த, பணம் பெற, பில் கொடுக்க என அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டார்கள். இது தினசரி நிர்வாக முறைக்கு மட்டும் பயன்படுத்தும் வழிமுறை.

நிபுணத்துவத்தோடு நுட்பமும் வேண்டும்

ஒரு புடவைக் கடை, புதிதாகப் புடவைகள் வருகையில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறது. இவர்கள் விற்பனைக்கு மட்டும் ஒரு சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இன்று இயந்திரங்களின் துணைகொண்டுதான் இயங்குகின்றன. கைகளின் பங்கைவிட இயந்திரங்களின் பங்கு பெருகிவருகிறது. ஆனால், பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியைத் தவிர மற்ற தேவைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை.

நான் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. உங்கள் தொழிலின் வழிமுறையையே மாற்றி, சிறிய அளவில் செய்துவரும் உங்கள் தொழிலை மிகப் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியுமா? முடியும் என்றால் அதுதான் நான் சொல்லும் தொழில்நுட்பப் பயன்பாடு.

“அப்படி என்றால் எங்கள் கம்பெனியே ஐ.டி. கம்பெனி போல மாற வேண்டுமே?” என்று பதற வேண்டாம். பயணச்சீட்டு, பயணச்சேவை செய்துவந்த டிராவல் நிறுவனங்கள் இன்று அழிந்துவருவது ஏன்? பயணச்சீட்டுப் பதிவை ஆன்லைனில் செய்ய முடியும் என்றபோதே அவர்கள் யோசிக்கவில்லை. தொழில்நுட்பத்தைக் கொண்டு பிற சேவைகளைத் தர முடியும் என நினைக்கவில்லை. இன்று பயணச்சீட்டு, ஓட்டல் புக்கிங் எனச் சகலத்தையும் ஆன்லைனில் செய்யும் ஐ.டி. நிறுவனங்கள் பல, டிராவல் கம்பெனிகளை மூடவைத்துவிட்டது. தொழில் நிபுணத்துவம் மட்டும் போதாது. தொழில்நுட்பம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் நம்மை அறியாமல் ஒரு சுனாமி வந்து நம்மைத் தூக்கிச் செல்லும்.

ஏதோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம் நம் தொழில் வாய்ப்பைக் களவாடுவதற்கு முன் நீங்களே ஏன் உங்கள் தொழிலைச் சமீபத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றக் கூடாது? யோசியுங்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

NEWS TODAY 23.07.2026