Friday, June 22, 2018


மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு?

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான, ஆண்டு கட்டணம் வெளியிடப்பட்டு உள்ளது.



அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரி களில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355 எம்.பி.பி.எஸ்., - 1,095 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., - 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சிலிங்,

ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அரசு மருத்துவக் கல்லுாரி களில் உள்ள, எம்.பி.பி.எஸ்.,படிப்புக்கு, 13 ஆயிரத்து, 600 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 11 ஆயிரத்து, 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ஒரு லட்சம் முதல், நான்கு லட்சம் ரூபாய் வரையும்; பி.டி.எஸ்., சுக்கு,ரூ 2.50 லட்சம் பாயும், ஆண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில்,நிர்வாக ஒதுக்கீட்டு, எம்.பி. .பி.எஸ்., படிப்புக்கு, 3.80 லட்சம் ரூபாயில் இருந்து, 12.50 லட்சம் ரூபாய்; பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆறு லட்சம் ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவகல்லுாரிகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.

முதற்கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' வாயி லாக, நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தன. அதன் முடிவுகள், www.mcc.nic.in என்ற இணைய தளத்தில், இன்று வெளியிடப்படுகின்றன.
நெல்லை--ஜபல்பூர் சிறப்பு ரயில்

Added : ஜூன் 21, 2018 23:09 | 

  மதுரை, நெல்லை--ஜபல்பூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.திருநெல்வேலியில் ஜூலை 7 முதல் செப்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4:00 மணிக்கு புறப்படும் ரயில் (02193) திங்கள்கிழமை காலை 11:15 மணிக்கு ஜபல்பூர் செல்லும். கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுன்டா, குண்டூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், சிர்புர்காநகர், பல்கர்ஷா, சந்திரப்பூர், சேவாகிராம், நாக்பூர், இட்டார்சி, பிபரியா, கடவாரா, நரசிங்பூர் வழியாக செல்லும். இதற்கான முன்பதிவு இன்று (ஜூன் 22) துவங்குகிறது.
ஏழைகளுக்கு கிடைக்கும் உலக தரத்திலான சிகிச்சை டாக்டர்களின் டில்லி 'எய்ம்ஸ்' அனுபவங்கள்

Added : ஜூன் 21, 2018 23:04 | 




  மதுரை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கண் மருத்துவ நிபுணராக தற்போது பணியாற்றும் டாக்டர் சிரீஷ்குமார் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 1990 - 98 வரை கண் சிகிச்சை மருத்துவ நிபுணராக பணிபுரிந்தவர்.அவர் கூறியதாவது:எய்ம்ஸ் என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற மருத்துவ நிறுவனம். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேர்வு செய்யப்படுவது போலவே எய்ம்ஸ் மருத்துவர்களால் மருத்துவ இயக்குனர் தேர்வு செய்யப்படுவார். இப்பதவி ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற மருத்துவ இயக்குனர் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே இருப்பதால், என்னென்ன மருத்துவ வசதிகள் தேவை என்பதை விரல் நுனியில் வைத்திருப்பார். தேவைப்படும் போது உடனே பூர்த்தி செய்யப்பட்டு விடுவதால் மருந்து, மருத்துவ உபகரணம், டாக்டர், செவிலியர் மற்றும் பிற வசதிகள் 100 சதவிகிதம் தடையின்றி நிறைவேற்றப்பட்டிருக்கும்.டில்லி எய்ம்ஸில் பத்தாயிரம் பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். எய்ம்ஸ் வளர்ச்சி மாநில அரசுகளின் மருத்துவமனைகளை விட பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகள் இங்கிருந்தே அதிகளவு வெளியிடப்பட்டு வருகிறது.மருத்துவர் தேர்விலும் அரசியல் குறுக்கீடு இருக்காது. மேன்மையான மருத்துவ நிறுவனமாக எய்ம்ஸ் நிர்வகிக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கண் மருத்துவமனை, இருதய சிகிச்சை மையம், நரம்பியல் சிகிச்சை மையம் தலா ஏழு மாடி கொண்ட தனித்தனி மருத்துவமனைகளாக செயல்படுகின்றன. விபத்து சிகிச்சைக்காக 'டிராமா சென்டர்' துவக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைக்கு வருவோரை ெஹலிகாப்டரில் கொண்டு வருவதற்காக 'மெடிக்கல் ஹெலி பேட்' அமைக்கப்பட்டுள்ளது.மாநில அரசு மருத்துவமனைகளில் காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை 'ஓ.பி.' சீட் வழங்குவர். எய்ம்ஸ் மருத்துவமனையில் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை ஓ.பி., சீட் வழங்கப்படும். முன்பு ஓ.பி., சீட் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டும் பெறப்பட்டது. தற்போது குறைந்த கட்டணம் செலுத்த வேண்டும். சி.டி., ஸ்கேன் கட்டணம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் மட்டுமே. தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும் போது சிகிச்சைக்கான கட்டணம் என்பது 25 சதவிகிதம் தான்.ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் கூடுதல் நோயாளிகள் வந்தால் அனுமதி கிடையாது. எனினும் அவசர சிகிச்சை என்றால் அதற்கான சிகிச்சை உடன் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் எதிரே உள்ள டில்லி அரசு சப்தார்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர், செவிலியர், ஊழியர்களுக்கு இடமாற்றம் கிடையாது. ஓய்வு பெறும் வரை ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதால் தங்களின் மருத்துவ திறன்கள், சேவைகளை மென்மேலும் விரிவுபடுத்த முடியும். மத்திய அரசு கூடுதலாக எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அங்கு தரமான சிகிச்சை அளிக்க ஒரே நேரத்தில் சிறந்த மருத்துவர்கள் கிடைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு கூறினார்

56 துறைகள்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் உமா குமார் கூறியதாவது:டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிநவீன தரத்தில் 56க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இதில் அனைத்திலும் உயர் தர சிகிச்சை அளிக்கப்படும். இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்றுதல் துறை உள்ளிட்ட துறைகள் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்துடன் செயல்படுகின்றன.இதுபோன்ற முழு கட்டமைப்பு மதுரையிலும் உருவாக்கப்படும். அரசியல்வாதிகள் அதிகம் இங்கு வந்து சிகிச்சை பெறுவதால், இது உயர் தர பிரிவினருக்கான மருத்துவமனை என தவறாக நினைக்க வேண்டாம். ஏழை மக்களுக்கும் உலகத் தரத்தில் சிகிச்சை கிடைக்கும் வகையில் துவங்கப்பட்டது தான் எய்ம்ஸ் மருத்துவமனை. மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே வகை தரத்தில் சிகிச்சை கிடைக்கும்.சிகிச்சை பெறுவதை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே பதிவு செய்து, எந்த டாக்டர், எந்த நாள், நேரம் குறித்து முன்கூட்டியே பெற்று, உரிய நேரத்தில் சென்று சிகிச்சை பெறலாம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு எம்.பி., என்ற முறையில் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி நன்கு அறிவேன். டில்லியில் உள்ள மத்திய மருத்துவ துறை அதிகாரிகளின் பல்வேறு ஆலோசனை பெற்று உரிய துறைகளிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்க நடவடிக்கையும் மேற்கொண்டார்.இவ்வாறு கூறினார்.

கட்டமைப்புகள்

பிரமிக்க வைக்கும்தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது: தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய திட்டம் எய்ம்ஸ். இதன் மூலம் ஏழைகளும் உயர் ரக சிகிச்சை பெறலாம். அனைத்து துறைகளும் சர்வதேச தரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் செயல்படும். இதற்காக மத்திய அரசின் தடையில்லா நிதி ஒதுக்கீடும் கிடைக்கும்.பல சிக்கலான, சவாலான நோய்களுக்கும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் வசதி இங்கு கிடைக்கும். எந்த நோயாயினும் ஒரே குடையின் கீழ் சிகிச்சை கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் கூட இந்த வசதி இருக்காது.கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக டில்லி எய்ம்ஸ் சென்றுள்ளேன். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே மெகா கட்டமைப்புகள் உள்ளன. சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப வசதி உள்ளது. ஆபரேஷன் தியேட்டர், லேப் தொழில்நுட்பங்கள், தரமான, நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் இருப்பது குறித்து அசந்து போனேன்.தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு மருத்துவ துறைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆனால் எய்ம்ஸ் என்பது முழு கட்டமைப்பு வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இருக்கும். மருத்துவ மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி மையங்களும் உள்ளன.அனைத்து துறைகளிலும் மாணவர்கள், டாக்டர்களுக்கான ஆராய்ச்சி பிரிவுகளும் இடம் பெற்றுள்ளது. நோயாளி சேர்க்கையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போது 'டிஸ்சார்ஜ் சம்மரி' பெறுவது வரை அனைத்தும் ஆன்லைனிலும் பெறும் வசதி உள்ளது, என்றார்.

'எய்ம்ஸ் ஆப்'

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் டாக்டரை 'கன்சல்ட்' செய்ய 'எய்ம்ஸ்' அலைபேசி ஆப் உதவுகிறது. ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் ஆப்பில் இருந்து டவுண்லோடு செய்து போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். பின், அதில் யூனிக் ஹெல்த் ஐ.டி.,யை பெறுவதற்கான லின்க்கை கிளிக் செய்தால் உங்கள் பிரவுசரில் ors.gov.in என்ற இணையதளம் வரும். அதில் உங்கள் அலைபேசி எண் மற்றும் சுயவிபரங்களை பதிவு செய்து ஐ.டி.,யை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஐ.டி.,யை 'எய்ம்ஸ்' ஆப்பில் பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.அங்கு, புக் ஆன்லைன், கன்சல்ட் ஆன்லைன், லேப் ரிப்போர்ட், ஹெல்த் டிப்ஸ் போன்ற பிரிவுகள் இருக்கும். அதில் தேவையான சேவையை தேர்வு செய்து பயன்பெறலாம். கன்சல்ட் ஆன்லைன் பிரிவில் டாக்டரை சந்திக்கும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடும் வசதியும் உள்ளது. இதே போல் 'எய்ம்ஸ்' இணையதளத்தில் 'டிஜிட்டல் எய்ம்ஸ்' என்ற பிரிவில் 'பேஷன்ட் போர்ட்'டல் லின்க்கை கிளிக் செய்து மேற்கண்ட சேவைகளை பெறலாம்.
தாம்பரம் - கொல்லம் ரயில் வாரம் 3 முறையாக அதிகரிப்பு

Added : ஜூன் 21, 2018 23:05 |

ஸ்ரீவில்லிபுத்துார், வாரமிருமுறை இயக்கப்பட்டுவந்த தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் வாரம் 3 முறையாக மாற்றப்பட்டு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.தாம்பரத்திலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில்(வண்டி எண்-- 06027) தாம்பரத்திலிருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மதுரை அதிகாலை 1:20, விருதுநகர் 2:28, ஸ்ரீவில்லிபுத்துார் 3:12, ராஜபாளையம் 3:28 மணிக்கு வந்து கொல்லத்திற்கு காலை 10:00 மணிக்கு செல்கிறது.மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் (வண்டி எண். 06028) கொல்லத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் 4:24, சிவகாசி 4:42, திருத்தங்கல் 4:48, விருதுநகர் 5:23, மதுரை இரவு 6:35, திண்டுக்கல் 7:48 மணிக்கு வந்து திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. நெல்லைக்கு சிறப்பு ரயில்:சென்னை எழும்பூரில் இருந்து (06001)திருநெல்வேலிஜூலை 6, 13, 27தேதிகளில்இரவு 9:50 மணிக்கு ரயில் புறப்படும்.திருநெல்வேலியில் இருந்து (06002)சென்னை எழும்பூருக்குஜூலை, 8, 22, 29தேதிகளில்மாலை 4:00க்கு புறப்படும்.சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு (06007) ஜூலை, 3, 10, 17, 24, 31 இரவு8:00க்கும், மறு மார்க்கத்தில் (06008)ஜூலை, 4, 11, 18, 25, ஆக., 1தேதிகளில்சென்னை சென்ட்ரலுக்கும் ரயில் புறப்படும்.
மாநில செய்திகள்

கால் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம் தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி





டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 22, 2018, 03:45 AM

சென்னை,

டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது.

டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த கோரியும், முறையற்று செயல்படும் கால்டாக்சி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த கோரியும் உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம், வாழ்வுரிமை ஓட்டுனர் தொழிற்சங்கம், தோழர்கள் கார் ஓட்டுனர் அமைப்பு சாரா தொழிற்சங்கம் இணைந்து நேற்றுவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ‘ஓலா’ தலைமை அலுவலகத்தை கால்டாக்சி டிரைவர்கள் முற்றுகையிட வந்தனர். அவர்களிடம் போலீசார் ‘ ஓலா’ நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

அதன்படி, சென்னை கிண்டியில் போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தமிழ்நாடு கால் டாக்சி ஓட்டுனர், உரிமையாளர்கள் தொழிற்சங்கம்(சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் பூபதி மற்றும் இதர தொழிற்சங்க நிர்வாகிகள் சுடர்வேந்தன், ஜாகீர் உசேன், ராமானுஜம், ராமகிருஷ்ணன், உள்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

‘ஓலா’ நிறுவனத்தின் நல்லுறவு அதிகாரி நிக்தர் உதின், சென்னை அலுவலக மேலாளர் ராம் ஆகியோர் கால் டாக்சி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து மீண்டும் வேலைநிறுத்தம் தொடருவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன் கூறியதாவது:-

டீசல் விலைக்கு ஏற்ப சின்ன மற்றும் பெரிய வண்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.18 ஆக உயர்த்தவும், எஸ்.யு.வி. மாடல் வண்டிகளுக்கு ரூ.22 கட்டணமாக நிர்ணயிக்கவும் கேட்டோம். இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த கட்டணம் தான். ஆனால் நிர்வாகம் எதற்கும் முன்வரவில்லை.

இந்த பிரச்சினையில் ஒரு தீர்வு கிடைக்கும் வரை எங்களுடைய வேலைநிறுத்தம் தொடரும். தமிழகத்தில் 38 ஆயிரம் கால்டாக்சிகள் ஓடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ‘ஓலா’ நிறுவனத்தை முற்றுகையிட சென்ற கால்டாக்சி டிரைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், 100 அடி சாலையை நோக்கி சாலைமறியலில் ஈடுபட சென்றனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற 100-க்குமேற்பட்ட கால்டாக்சி டிரைவர் களை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்ற வடமாநில பெண்



செங்கல்பட்டு ரெயில் நிலைய நடைமேடையில் வடமாநில பெண் ஒருவர் குழந்தை பெற்றார்.

ஜூன் 22, 2018, 03:30 AM

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நமிதா (வயது 30) என்ற கர்ப்பிணி பெண் சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் நமிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதை பார்த்த பயணிகள் சிலர் அருகில் இருந்த துணியை எடுத்து திரைச்சீலை அமைத்துள்ளனர். இதனிடையே நமிதாவிற்கு அழகான பெண் குழந்தை ரெயில்நிலைய நடைமேடையிலேயே பிறந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாயையும், சேயையும் பத்திரமாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாவட்ட செய்திகள்

கேரள பட்டதாரிகளிடம் பல லட்சம் மோசடி டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது




சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த பட்டதாரிகளிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜூன் 22, 2018, 03:10 AM

சென்னை,

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் எமில் (வயது 32), பட்டதாரியான இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ரஞ்சித் (38), நெசப்பாக்கத்தை சேர்ந்த அனூப்நாயர் (28) ஆகியோர் எனக்கு தெரிந்த நண்பர்கள் ஆவார்கள். அவர்களும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான். ரஞ்சித் டிப்ளமோ என்ஜினீயர். அனூப்நாயர் பிளஸ்-2 படித்தவர்.

பல லட்சம் மோசடி

அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர்.

பட்டதாரியான நானும் சிங்கப்பூர் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர் கள் சிங்கப்பூரில் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பட்டதாரிகளிடம் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்த வழக்கில் ரஞ்சித், அனூப்நாயர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

NEWS TODAY 25.07.2026