Saturday, June 23, 2018

கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலைசெய்து நாடகம்; டைரியால் சிக்கிய இந்திய ஜோடிக்கு 20 ஆண்டுகள் சிறை

Published : 22 Jun 2018 20:54 IST

பிடிஐ மெல்போர்ன்,

 


ஆபிரஹாம், அவரின் மனைவி சோபியா குழந்தை - படம் உதவி: ட்விட்டர்

தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு சயனைடு கலந்த ஜூஸ் கொடுத்து தற்கொலை என்று நாடகமாடிய இந்தியப் பெண்ணுக்கும், முன்னாள் காதலருக்கும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறை தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்தியப் பெண் தனது காதலருக்கு எழுதிய டைரிதான் இருவரும் சிக்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால், இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், காதலனுக்கு 27 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோபியா ஷாம் (வயது34). இவரின் முன்னாள் காதலர் அருண் கமலாசன் (வயது36) ஆகிய இருவருக்கும்தான் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தவிவரம் வருமாறு:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சோபியா ஷாம், ஜான் ஆபிரஹாம் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இவர்கள் இருவரும் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மெல்போர்னில் உள்ள தனது வீட்டில் ஆபிரஹாம் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் ஆபிரஹாம் சட்டையில் சயனைடு குப்பி இருந்ததால், சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிட்டனர். ஆனால், வெளியில் வழக்கை முடித்துவிட்டதாக போலீஸார் கூறினாலும், அவர்களுக்கு ஆபிரஹாம் இறந்ததில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.

இதில் ஆபிரஹாமின் மனைவி சோபியா, அடிக்கடி ஒரு இளைஞருடன் வெளியே ஹோட்டலில் சந்திப்பதை போலீஸார் நோட்டமிட்டனர். இருவரின் பழக்கமும், பழகும் விதமும் நெருக்கமாக இருந்ததால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. ஒரு நாள் சோபியா தனது கைப்பட எழுதிய டைரியை அந்த இளைஞருக்குக் கொடுக்கும் போது, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இருவரிடம் நடத்திய விசாரணையிலும், அந்த டைரியில் எழுதப்பட்டு இருந்த பல்வேறு தகவல்களாலும் இருவரும் போலீஸிடம் சிக்கினார்கள். அந்த டைரியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சோபியாவின் முன்னாள் காதலர் அருண் கமலாசன். இவரைத் தான் சோபியா அடிக்கடி வெளியே சென்று சந்தித்துள்ளார். இருவரும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை. அருண் கமலாசன் புகழ்பெற்ற கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆபிரஹாமைத் திருமணம் செய்துகொண்ட சோபியா கடந்த 2012-ம் ஆண்டு தனது 6 வயது மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு கணவருடன் குடியேறிவிட்டார். இதை அறிந்த அருண் கமலாசனும், கேரளாவில் தனது மனைவி, குழந்தைகளைத் தவிக்கவிட்டு, கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவில் சோபியாவும், அருணும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.

இவர்களின் தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால், சோபியா, தனது கணவருக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்தார். இருவரும் இதை விசாரணையில் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சோபியாவையும், அருணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக மெல்போர்ன் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பால்கோக்லன் தீர்ப்பை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சோபியாவும், அவருடைய காதலர் அருண் கமலாசன் ஆகிய இருவரும்சேர்ந்து சதி செய்து ஆபிரஹாமுக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. கொலையில் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இருவரும் சயனைடை கொலை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், புலனாய்வு அதிகாரிகள் நீண்ட விசாரணைக்கு பின், டைரியின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தொடர்பின் அடிப்படையில் இந்தக் கொலையை இருவரும் செய்துள்ளனர்.

இந்த கொலையைச் செய்த அருண் கமலாசனுக்கு 27ஆண்டுகள் சிறையும், சோபியா ஷாமுக்கு 22 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன். இதில் கமலாசனுக்கு 23 ஆண்டுகளுக்கும், சோபியாவுக்கு 18 ஆண்டுகள் வரையிலும் பரோல் வழங்கக்கூடாது.

இவ்வாரு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

நீலகிரி, ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறை திட்டம்


Added : ஜூன் 22, 2018 23:17

கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரிகளை அமைக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 23 அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு மருத்துவக் கல்லுாரியை ஏற்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், சென்னையில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இவ்விரு மாவட்டங்களின் மக்கள் தொகை, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இ - சேவை மையம் இன்று இயங்காது

Added : ஜூன் 22, 2018 22:52

சென்னை, 'அரசு, இ - சேவை மையங்கள், இன்று மாலை, 3:00 மணி முதல் இயங்காது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ், தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்து, 423 அரசு இ - சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், இன்று மதியம் 3:00 மணி முதல் மையங்கள் இயங்காது. 25ம் தேதி முதல் வழக்கம் போல இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிள்ளையார்பட்டியை மையமாக்கும் பசுமை நான்கு வழிச் சாலை

Added : ஜூன் 22, 2018 22:42

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை மையப்படுத்தும் வகையில் பசுமை வழிச்சாலை உட்பட 3 நான்கு வழிச் சாலைகள் அமைகின்றன.மேலுார்- திருப்புத்துார் சாலை (35 கி.மீ.,), கொட்டாம்பட்டி-காரைக்குடி சாலை (52 கி.மீ.,) ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகள், திருப்புத்துார்-தஞ்சாவூர் (என்.எச்.,226) தேசிய நெடுஞ்சாலையை (102 கி.மீ.,) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்குவழிச் சாலையாக மாற்றுகிறது. மேலுார்-திருப்புத்துார் சாலை என்.எச்., 338, கொட்டாம்பட்டி- காரைக்குடி சாலை என்.எச்.,383 என புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் மேலுாரில் இருந்து புதுக்கோட்டை வரை பசுமை நான்குவழிச் சாலையாக மாறுகிறது. மற்றவை நான்குவழிச் சாலைகளாகின்றன. இதற்காக 60 மீ., அகலத்தில் இடம் கையகப்படுத்தப்படும். மேலுாரில் இருந்து திருப்புத்துார், பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடி வரை பழைய சாலை 10.25 கி.மீ., க்கு விரிவுபடுத்தப்படும்; 35.60 கி.மீ.,க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். அதேபோல் கொட்டாம்பட்டி-காரைக்குடி சாலை பிள்ளையார்பட்டி வரை மேம்படுத்தப்படுகிறது. இதில் பழைய சாலை 10 கி.மீ., க்கு விரிவுபடுத்தப்படும்; 33 கி.மீ., க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.திருப்புத்துார்-தஞ்சாவூர் சாலையும் பிள்ளையார்பட்டி வழியே செல்லும். இதில் 30 கி.மீ., க்கு பழைய சாலை விரிவுபடுத்தப்படும்; 55 கி.மீ., க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். மூன்று சாலைகளும் பிள்ளையார்பட்டியில் சந்திக்கும். திருப்புத்துார், சிங்கம்புணரி, காரைக்குடி தாலுகாக்களில் 58 வருவாய் கிராமங்களில் இடம் கையகப்படுத்தப்படும். இதற்காக 2 அலகுகள் ஏற்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. ஒவ்வொரு அலகிற்கும் தாசில்தார் தலைமையில் 13 பேர் கொண்ட பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து

Updated : ஜூன் 23, 2018 00:05 | Added : ஜூன் 22, 2018 20:54 | 


புதுடில்லி, :திரிபுராவில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றிய தந்தை - மகளுக்கு, அம்மாநில அமைச்சர், தன் வீட்டில் விருந்தளித்து, நன்றி தெரிவித்தார்.திரிபுராவில், முதல்வர், பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர், ஸ்வபன் தேவ் வர்மா, 45. இவர், தன் வீட்டு அருகே உள்ள ரயில் பாதை வழியே, தன் மகள் சோமதிஉடன் நடந்து சென்றார். அப்போது, பலத்த மழை பெய்தது.

தப்பினர்

இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் ரயில் வந்தது. இதைப் பார்த்த ஸ்வபன் தேவ் வர்மாவும், அவரது மகளும், உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி, ரயிலை நிறுத்தும்படி, தண்டவாளத்தில் நின்று, சைகை செய்தனர்.இதைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த, 2,000 பயணியர் உயிர் தப்பினர்.இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர், திரிபுரா சட்டசபைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டசபையில், அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பரிந்துரை

தந்தை - மகள் இருவரது தீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு சன்மானம் வழங்கும்படி, முதல்வர் பிப்லப் குமார் தேவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உதவியும், சன்மானமும் வழங்கும்படி, ரயில்வே அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், திரிபுராவின் சுகாதாரத்துறை அமைச்சர், சுதீப் ராய் வர்மன், தந்தை - மகளின் வீரத்தை பாராட்டி, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, காலை சிற்றுண்டி அளித்து, நன்றி தெரிவித்தார்.
விதிமீறல் கட்டட உரிமையாளர்களுக்கு 'ஜாக்பாட்' வரன்முறைக்கான அவகாசம் நீட்டிப்பு; கட்டணமும் குறைப்பு

Added : ஜூன் 22, 2018 23:26

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை, தமிழக அரசு, ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. வரன்முறைக்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த, நகர், ஊரமைப்பு சட்டத்தில், '113 - சி' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை, 2017 ஜூன், 22ல் பிறப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டது. பின், மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

 இதன்படி, வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 19ல் முடிந்தது.வரன்முறைக்கான கட்டணம் கூடுதலாக இருந்ததால், குறைவான விண்ணப்பங்களே வந்தன. அதனால், வரன்முறை கட்டணத்தை குறைப்பதோடு, கால அவகாசம், மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், 'தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட, விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்தும் திட்டம், மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டட உரிமையாளர்கள், டிச., 20 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்கட்டணம் குறைப்புகட்டட வரன்முறைக்கான கட்டணமும், வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, வழிகாட்டு மதிப்பு அடிப்படையில், விதிகளை மீறி கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்களின் பரப்பளவில், சாதாரண கட்டடங்களுக்கு, 0.01 சதவீதம்; சிறப்பு கட்டடங்களுக்கு, 0.10 சதவீதம்; அடுக்குமாடி கட்டடங்களுக்கு, 0.25 சதவீதம், கட்டணம் செலுத்தினால் போதும் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.வரவேற்புஇதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க, தென்னக மைய துணை தலைவர், ராம்பிரபு கூறியதாவது: கட்டட வரன்முறைக்கு, பல்வேறு வகையில் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், மிக அதிகமாக இருந்ததால், மக்கள் விண்ணப்பிக்க தயங்கினர். தற்போது, ஒரே கட்டணமாக, குறைந்த கட்டணத்தை அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். சாதாரண குடியிருப்புகளில், விதிமீறல் குறைவான கட்டடங்களுக்கு, இந்த சலுகை பேருதவியாக இருக்கும். கட்டட வரன்முறைக்கு, அதிகம் பேர் விண்ணப்பிக்க முன்வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நெல்லை--சென்னை சுவிதா ரயில்

Added : ஜூன் 22, 2018 23:06

மதுரை, திருநெல்வேலி--சென்னை எழும்பூர் இடையே சுவிதா ரயில் (82606) இயக்கப்பட உள்ளது.திருநெல்வேலியில் ஜூலை 15, ஆக., 26, செப்., 16 மாலை 4:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:15க்கு சென்னை எழும்பூர் செல்லும். கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கற்பட்டு, தாம்பரம், மாம்பலத்தில் இந்த ரயில் நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று (ஜூன் 23) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

NEWS TODAY 25.07.2026