Thursday, April 4, 2019

தேர்தல் 2019: கலக்கும் காளியம்மாள்

Published : 30 Mar 2019 17:52 IST

ரேணுகா




“உலகத்திலேயே இரண்டாவது சிக்கலான தொழில் செய்யக்கூடிய மீனவர்களைப் பாதுகாக்கச் சட்டம் கிடையாது. ஆனால், இங்கே சிட்டுக்குருவியைச் சுடுங்க, அதைக் கேட்க சட்டம் இருக்கு” என்ற தன்னுடைய உணர்ச்சிகரமான பேச்சால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் ‘நாம் தமிழர் கட்சி’ வேட்பாளரான காளியம்மாள்.

நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பொதுவாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பேசும் கட்சிகள்கூடத் தேர்தல் நேரத்தில் தங்களுடைய வேட்பாளர்களாகப் பெண்களைக் குறைந்த எண்ணிக்கையிலேயே நிறுத்துகின்றன. அதிலும் அவர்கள் திரைத்துறையினராகவோ பலமான அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர்கள் பலர் குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவே உள்ளனர். இவர்கள் மத்தியில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் தன்னுடைய மீனவச் சமுதாயத்துக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது, மீனவர் பிரச்சினையைப் பொதுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர் காளியம்மாள்.

களத்தில் காளியம்மாள்

சீர்காழியிலுள்ள தனியார் கல்லூரியில் காளியம்மாள் பி.காம் படித்துள்ளார். அதன்பிறகு ஐ.எ.ஏஸ் தேர்வுக்குப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதுதான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவர்களை பாதிக்கும் கடலோர ஒழுங்குமுறைச் சட்டம், கடல்வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் எளிதாகப் பயன்படுத்திகொள்ள கொண்டுவரப்படவுள்ள சாகர்மாலா திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்; அதேபோல் கஜா, ஒக்கி புயலின்போது மீனவ கிராமங்களில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து அவர் களப்பணியாற்றியிருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டுவருகிறார் காளியம்மாள். துணிச்சல்மிக்க பேச்சாற்றல் காரணமாக மக்களின் கவனத்தைப் பெற்ற காளியம்மாள் சமீபத்தில்தான் நாம் தமிழர் கட்சியில் சேர்த்துள்ளார். “எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கேட்டே சோர்ந்துபோய்விட்டோம். அதனால்தான் மக்கள் நலத் திட்டங்களை வகுக்கும் இடத்தில் ஒரு குடிமகளாக இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசியலில் நுழைந்தேன்” என்கிறார் அவர்.

முதல்கட்டத்திலேயே நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள். அவருடைய சொந்த ஊர் நாகப் பட்டினமாக இருந்தாலும் வடசென்னை போன்ற தொழிலாளர்கள், மீனவச் சமூக மக்கள் நிறைந்துள்ள பகுதி தனக்குப் புதிதாகத் தெரியவில்லை என்கிறார்.

“தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்னிறுத்தியே என்னுடைய போராட்டங்கள் இருந்துள்ளன. இந்நிலையில் வடசென்னை போன்ற தொகுதியில் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை” என்கிறார்.

தொகுதியில் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை உள்ளது; அடிப்படைத் தேவையான கழிப்பறை போதுமான அளவில் இல்லை; கடலில் தொழிற்சாலைகளின் கழிவு கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் தனது பரப்புரையில் சுட்டிக்காட்டி வருகிறார் காளியம்மாள். காளியம்மாளின் எளிமையான தோற்றமும் திடமான பேச்சும் தொகுதி மக்கள்

மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பரப்புரையின்போது, ‘வீட்டை நிர்வகிக்கத் தெரிந்த பெண்களுக்கு நாட்டை ஆளத் தெரியாதா?’, ‘நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் உரிமைகளைக் கேட்டுபெறுவேன். இல்லையேல் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாடாளுமன்றத்திலேயே போராட்டங்களை மேற்கொள்வேன்’ என்பது போன்ற அவரது பேச்சு மக்களிடம் எளிதாகச் சென்றடைகிறது.

காளியம்மாள் போன்ற எளிய வேட்பாளர்களும் அவரைப் போன்றவர்களின் பிரசாரமும் தேர்தல் நடைமுறைகளில் குறைந்த பட்சமாக சில மாற்றங்களையாவது ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
மனநலமும் டிஜிட்டல் ஊடகமும்

Published : 29 Mar 2019 18:25 IST

பவித்ரா



மனிதனுக்கும் ஊடகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை டிஜிட்டல் ஊடகத் தொழில்நுட்பங்கள் இல்லாமல் செய்துவிட்டன. வீடுகள், அலுவலகங்கள், பயணம் என எல்லாவற்றிலும் கைவிரல்கள் கெஞ்சும் அளவுக்கு நாம் செல்போன்களையும் ஐபேட்களையும் பயன்படுத்தியபடி இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துவரும் மன நலப் பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் ஊடகப் பயன்பாடும் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க உளவியல் கழகம் செய்த ஆய்வில், 1995-க்குப் பிறகு பிறந்த இளைஞர்களிடம் எதிர்மறையான உளவியல் அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளில் தாக்கம் பெற்றபிறகு இந்தப் பிரச்சினைகளின் அழுத்தம் கூடியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

“தற்கொலை எண்ணங்கள், தீவிர மன அழுத்தம், மனத் தொந்தரவுகள், தற்கொலை முயற்சிகள் 2010-க்குப் பின்னர் அதிகமாகியுள்ளன. இந்த எண்ணிக்கை பதின்பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் 2000-ல்

இருந்ததைவிட இன்று அதிகமாகி யுள்ளது” என்கிறார் ஐஜென் புத்தகத்தின் ஆசிரியரும் உளவியல் பேராசிரியருமான ஜீன் ட்வென்ஜ். 30 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த நிலைமைகள் இல்லையென்றும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்வென்ஜ்-ம் அவருடைய குழுவினரும் அமெரிக்காவில் 12 முதல் 17 வயதுவரை உள்ள சிறார்களிடமும் இளைஞர்களிடமும் 18 வயதுக்கு மேலுள்ள 4 லட்சம் இளைஞர்களிடமும் ஆய்வு செய்ததில், சமூகரீதியான உறவு பலமாக உள்ள மூத்தவர்களைவிட வளரிளம் பருவத்திலுள்ளவர்களும், இளம்பிராயத்தினரிடமும் தாக்கம் செலுத்தும் டிஜிட்டல் ஊடகங்கள்தாம், மனரீதியான அழுத்தங்களையும் தற்கொலை எண்ணங்களையும் தூண்டுவதற்குக் காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது.

மரபியல், பொருளாதாரப் பின்னணி ஆகியவைதாம் மன நலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான காரணிகளாக இதுவரை இருந்துவந்தன. நேரடியாகச் சமூகத் தொடர்புகள், உறவுகளை வைத்திருப்பவர்களுக்கும் டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகவே தொடர்புகளைப் பராமரிப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களின் அடிப்படையில் மனநலப் பிரச்சினைகளை அணுக வேண்டும் என்ற புரிதலையும் இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூகரீதியான பதற்றம், சமூகத் தனிமை, தனிமை உணர்வுகள் டிஜிட்டல் ஊடகங்களைப் பாவிப்பவர்களிடையே அதிகம் உள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உறக்கம் குறைகிறது

முந்தைய தலைமுறையினர் உறங்குவதற்குப் போதுமான நேரமிருந்ததாகவும் தற்போதைய தலைமுறையினர் சரியான அளவில் உறங்குவதில்லை என்பதும் இந்த ஆய்வுகள் வழியாகத் தெரியவந்துள்ளது. தூக்கக் குறைபாடும் படபடப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பதையே அவை காட்டுகின்றன.

“வளரிளம் பருவத்தினர் படுக்கையிலேயே செல்போனிலிருந்து வரும் ஒளிக்கு மிக அருகில் நிறைய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அந்த ஒளியே 30 நிமிடங்களுக்குத் தூக்கத்தைத் தள்ளிப்போடும் ஆற்றல் மிக்கது” என்கிறார் உளவியல் மருத்துவர் ஆரோன் ஃபோபியன்.

டிஜிட்டல் ஊடகங்களைத் தவிர்த்து நம் ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. வளரிளம் பருவத்துக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஆலோசனை கூற வேண்டும். நேரடியான சமூகத் தொடர்புகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வீட்டில் சேர்ந்திருக்கும் நேரங்களில் பெரியவர்களும் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பதிலிருந்து இதைத் தொடங்கலாம். செல்போன்கள், ஐபேட்களிலிருந்து குழந்தைகளை விடுவிக்க பெற்றோர்களே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்.

சென்னை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்: காவலர் கொடுத்த நூதன தண்டனை, குவியும் பாராட்டு

Published : 02 Apr 2019 17:04 IST

மு.அப்துல் முத்தலீஃப்




காவலர் எபேன், சுத்தம் செய்யும் இளைஞர்கள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு குப்பைக்கூளமாக்கி, அசுத்தம் செய்த அலட்சிய இளைஞர்களை போன் செய்து வரவழைத்த காவலர் அவர்களை திருத்த கொடுத்த நூதன தண்டனையால் பாராட்டு குவிகிறது.

பொதுவாக பொதுஇடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அது குழந்தை வளர்ப்பிலிருந்து கொண்டு வரப்படவேண்டிய ஒன்று. சமூகத்தின்மீதான அக்கறைதான் பொது அக்கறையாக மாறும்.

மத்திய அரசு சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி கொண்டுவந்த ஸ்வச் பாரத் திட்டமே புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் திட்டமாக மாறி அதை அமல்படுத்தும் நிலையில் உள்ளவர்களே கடைபிடிக்காத நிலையில் உள்ளது யதார்த்தம்.

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு மற்றும் அசுத்தம் பராமரிப்பின்மையால் சுற்றுசூழல் பாதிப்பு கண்டு கோபமடைந்த உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்து மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர்கள் ஒரு மாதம் வாக்கிங் போய் கண்காணியுங்கள் என அறிவுறுத்தியது.

சமீப காலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் வாங்கி அதை சாப்பிடாமல் முகத்தில் பூசி வீணடிக்கும் நடைமுறையும் இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வருகிறது. இதேபோன்றதொரு சம்பவம் சில நாட்களுக்குமுன் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்தது.

தனது நண்பர் பிறந்தநாளை கொண்டாட முடிவெடுத்த சில இளைஞர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் அதை கொண்டாடினர். வழக்கம்போல் கேக் ஆர்டர் செய்தனர். பெட்டி பெட்டியாக வந்த கேக்கை எலிய்ட்ஸ் கடற்கரையின் நடைபாதையில் வைத்து கொண்டாடினர்.

ஆட்டம்பாட்டம் முகத்தில் பூசிக்கொள்வது என கொண்டாட்டம் களைக்கட்டியது. பின்னர் அனைவரும் சந்தோஷத்துடன் கலைந்தனர். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற குப்பைகள், கேக் வைக்கும் அட்டைபெட்டிகள் ,கலர் பேப்பர்கள் நடைபாதை எங்கும் சிதறி கிடந்தன. அதை ஓரமாக குப்பைத்தொட்டியில் போடுவது எங்கள் வேலையல்ல என்ற நினைப்பில் இளைஞர்கள் சென்றுவிட்டனர்.

அந்த இடத்துக்கு அருகே சாஸ்த்ரி நகர் போலீஸ் பூத் உள்ளது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் எபென் கிறிஸ்டோபர், அவருக்கு அன்று டூட்டி. அங்கு வந்தவர் பூத் அருகே நடைபாதையில் சிதறிக்கிடந்த குப்பைக் குவியலைப்பார்த்துள்ளார்.

உடனடியாக காவலர் எபென், கேக் விற்பனை செய்த சம்பத்தப்பட்ட பேக்கரிக்கு தொடர்பு கொண்டு யார் கேக் ஆர்டர் செய்தது, அவர்களின் தொடர்பு எண் உள்ளிட விவரங்களை பெற்றுள்ளார். அந்த நபருக்கு போன் செய்து பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வரவைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த இளைஞரிடம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டீர்களா? என விசாரித்தபோது அவர் மறுத்துள்ளார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விடுவார்கள் என பயந்து அவர் மறுத்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அந்த இளைஞருக்கு போட்டு காண்பித்த எபென் இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது இளைஞர் ஒப்புகொண்டு, தனது நண்பரின் பிறந்த நாளுக்காக கேக்குகள் வாங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டோம் என கூறியுள்ளார்.

சரி யார் யாரெல்லாம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்களோ அவர்களை இங்கு அழையுங்கள் என கூறியுள்ளார். அந்த இளைஞரும் அழைக்க அனைவரும் வந்துள்ளனர். போலீஸ் வழக்குப்பதிவு செய்யுமோ என பயந்த அவர்களிடம் காவலர் எபென் கனிவுடன் அவர்கள் செய்த தவறை விளக்கியுள்ளார்.

அனைத்து இளைஞர்களிடமும் துடப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் சுத்தம் செய்தனர்.

சுத்தம் செய்தப்பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து பொது இடங்களையும் நமது சொந்த வீடாக கருதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். இளைஞர்களும் அதை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்து சென்றுள்ளனர்.

பாதுகாப்பு பணிதானே தமக்கு என சென்றுவிடாமல், அதையும் தாண்டி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அந்த காவலரின் செயலை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். ஸ்வச் பாரத் விருதுக்கு தகுதியான காவலர் இவர் என போலீஸார் பாராட்டி வருகின்றனர்.
மகேந்திரன் எனும் மகத்தான படைப்பாளியும் ரஜினியிஸமும்

Published : 03 Apr 2019 20:01 IST

க.நாகப்பன்சென்னை



சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருப்பவர் மகேந்திரன். சினிமாவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் கூட அந்த இடத்துக்கு வந்த கதையை மாய்ந்து மாய்ந்து சொல்வது வழக்கம். வறுமையின் பின்னணி, பசியின் கொடுமை அல்லது வசதியான வாழ்க்கை, வேலையை விட்டு சினிமாவைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என தான் கடந்து வந்த பாதை குறித்து சிலாகித்துச் சொல்வார்கள். என்னுடைய இந்தப் படம் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்குப் பேசும் படமாக இருக்கும் என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்பவர்களும் அநேகம். ஒரு படத்துக்கே ஓவர் பில்டப் தருகிற வியாபார உலகம் சினிமா. அங்கே தன்னை விற்கத் தெரிந்தவர்களே ஜாம்பவன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால், இயக்குநர் மகேந்திரன் இந்த சினிமாத்தனமான நபர்களுக்கு மத்தியில் ஒரு குறிஞ்சி மலர் என்று சொல்லலாம். ஒரு முறையல்ல... இரு முறை அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் பேரனுபவமும் எளியவன் எனக்குக் கிட்டியது. அந்த அனுபவத்திலும் அவர் அணுகிய விதத்திலும் சொல்ல வேண்டுமென்றால் மகேந்திரன் சார் மென் மனசுக்குச் சொந்தக்காரர். துளியும் மிகைத்தன்மை இல்லாமல் பேசக்கூடிய யதார்த்தத்தின் வார்ப்பு அவர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, 'முள்ளும் மலரும்' திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் படத்தை தமிழ் சினிமா உலகம் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் இயக்குநர் மகேந்திரனை சந்தித்துப் பேசினேன். தமிழ் சினிமாவின் சத்யஜித்ரே மகேந்திரன் என்று சினிமா ஆர்வலர்கள் போற்றுவதை அவரிடத்தில் பெருமையுடன் பகிர்ந்த போது, ''நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. என் நிஜமான வாக்குமூலம்'' என்று சொன்னவர் மகேந்திரன். ஆனால், அவர் தான் தமிழ் சினிமாவில் அழியாத, சாகாவரம் பெற்ற படங்களைக் கொடுத்தார்.

ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனைக் கண்டுகொண்டவர் நீங்கள். 'முள்ளும் மலரும்', 'ஜானி' படங்களின் மூலம் அவருக்கான ராஜபாட்டையை வகுத்துக் கொடுத்தவர். 36 படங்களுக்கு கதை, வசனம் எழுதி 12 படங்கள் இயக்கி தமிழ் சினிமாவை உற்று கவனிக்க வைத்த ஆளுமையான நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குத் திருப்தியில்லையா என்று கேட்டால், கண்களைச் சுருக்கிச் சிரித்தார். அந்த மகேந்திரனை நீங்கள் அருகிருந்து பார்த்திருந்தால் ரஜினியின் மேனரிஸம் எங்கிருந்து எப்படி வந்திருக்கும் என்று உங்களால் உறுதி செய்திருக்க முடியும்.


மகேந்திரன் சினிமாவுக்கு விரும்பி வந்தவர் அல்ல. அது ஒரு விபத்து என்று அவரே சொல்லியிருக்கிறார். அவருக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம்தான் என்றாலும் அவர் பிடிக்காத, கொடுமைக்கார கணவனாக நடந்துகொள்ளவில்லை. சினிமா என்ற காதலிக்கு அவர் பேரன்பையும், கருணையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்தார். அவருக்கும் சினிமாவுக்குமான உறவு எல்லையற்ற மகோன்னத உணர்வுடனே கடைசி வரை இருந்தது. அதனால்தான் 'மோகமுள்' மீண்டும் மலரும் என்று தனக்கே உரிய பாணியில் திரைக்கதையை உருவாக்கினார். சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்து அது கைகூடாமலே போனது காலத்தின் இழப்புதான்.

ரஜினியிஸம்




சிவாஜி ராவ் ஆக இருந்தவரை ரஜினியாக மாற்றியவர் பாலசந்தர்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த ரஜினிக்கு நடை, உடை, பாவனை உள்ளிட்ட உடல்மொழியில், உச்சரிப்பில் தனித்துவம் ஏற்படுத்தி, ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனை அடையாளப்படுத்தியதில் இயக்குநர் மகேந்திரனுக்குப் பெரும் பங்கு உண்டு. ரஜினியின் அந்த அடையாளம் இன்று ரஜினியிஸமாக, சூப்பர் ஸ்டார் பிம்பமாக வளர்ந்துள்ளது.

இதன் பின்னணி என்ன?

ரஜினி நடித்த 'ஆடுபுலி ஆட்டம்' திரைப்படத்துக்கு வசனம் மகேந்திரன். பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ரஜினிக்குள் இருக்கும் சினிமாவின் மீதான கனலை அப்படியே மகேந்திரனிடம் இறக்கினார். அதனால் ஆச்சர்யப்பட்டும் அகமகிழ்ந்தும்போன மகேந்திரன் பின்னாளில் இயக்குநராக அறிமுகமாகும்போது 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிதான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். வில்லன் முத்திரை இருக்கும் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் தயங்கிய போது ரஜினி நாயகன் என்பதற்குச் சம்மதம் என்றால்தான் படத்தை இயக்குவேன் என்று உறுதி காட்டினார்.

இதுகுறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, ''ரஜினி எப்போதுமே என் நண்பர். அவர் சினிமா மீதான அவரின் கனவு பரந்து விரிந்தது. சாண்டில்யனின் ஜலதீபம் சரித்திர நாவலில் வரும் கடல் தளபதி கன்னோஜியைப் பற்றி வாசிக்கும் போது ரஜினி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறேன். அதுபோன்ற படங்களில் ரஜினி நடிக்கும்போது அமிதாப் பச்சனை எளிதில் கிராஸ் செய்வார்'' என்று தன் ஆவலையும், ரஜினி செல்ல வேண்டிய பாதையையும் அழகாக விவரித்தார். இப்போது கூட ரஜினி இதை பரிசோதனையாக முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லைதான்.

உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்

சினிமா யதார்த்தத்தின் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் மகேந்திரன். அதனால் தான் நாயகன், நாயகி என்று இருவரைச் சுற்றி மட்டும் எந்தக் கதையையும் அவர் உருவாக்கவில்லை. 'முள்ளும் மலரும்' படத்தில் சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட எல்லோருமே ஜொலித்தார்கள். 'உதிரிப்பூக்கள்' சாருஹாசன் அதில் ஒற்றைப் பருக்கை. ''இந்த ஊரை விட்டு ஏன்பா போறீங்க'' என்று அஸ்வினி கேட்கும்போது, ''என்னை யாரும் இங்க இருக்கச் சொல்லலையேம்மா'' என்று வருத்த வார்த்தைகளில் கலங்க வைப்பார். உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் படைப்புகளில் மகேந்திரன் தன்னிகரற்று விளங்கினார்.

டூயட்களை வெறுத்தவர்

ஐ லவ் யூ சொல்வதுதான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல் காதலைச் சொல்ல முடியாதா என்று ஒரு மூத்த படைப்பாளியாக விமர்சனம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். அதே சமயத்தில் 'கை கொடுக்கும் கை' படத்தில் தாழம்பூவே டூயட் பாடலை வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இசையை மையப்படுத்திய 'ஜானி' படத்தின் மூலம் மறக்க முடியாத மனதை வருடும் பாடல்களைக் கொடுத்தார். ராஜாவும் இசையில் தனி ராஜாங்கம் நடத்தி இருந்தார். 'உதிரிப்பூக்கள்' படத்தின் அழகிய கண்ணே பாடல் இப்போதுவரை மென்சோகத்தின் உச்சமாக உள்ளது.

பாலு மகேந்திரா- மகேந்திரனின் ஒத்த அலைவரிசை

'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. கன்னடத்தில் 'கோகிலா' படத்தை இயக்கிய பாலு 'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களை இயக்கினார். பாலுவுக்கும் டூயட் பாடல்கள் பிடிக்காது. பொது இடத்தில் காதலிப்பது போன்ற காட்சிகளை வைக்கமாட்டார். 'வீடு' படத்தில் பானுசந்தர் - அர்ச்சனாவுக்கு இடையேயான காட்சிகளில் யதார்த்தக் காதலைப் பதிவு செய்திருப்பார். மான்டேஜ் பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 'அழியாத கோலங்கள்' படத்தில் ஷோபாவின் கதாபாத்திரம் தனித்துவமானது. வகுப்பறைக்குள் புதிதாக வந்த ஷோபா, ''என் பேரு இந்து. உங்க பேரைச் சொல்லுங்கம்மா'' என்று வெட்கமும், தயக்கமும், படபடப்புமாகக் கேட்பார். அந்த சாயலை நீங்கள் 'முள்ளும் மலரும்' வள்ளியிடம் பார்க்கலாம். 'உதிரிப்பூக்கள்' படத்தில் மிகையில்லாத, அசலான குழந்தைத்தன்மையோடு இருக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியும். அதன் நீட்சியாக 'நீங்கள் கேட்டவை' படத்தில் பூர்ணிமாவின் குழந்தைகளைப் பார்க்கலாம். மகேந்திரனின் திரை மொழியும், பாத்திரப் படைப்பும் பாலு மகேந்திராவையும் ஈர்த்திருக்கிறது அதனால் தான் இருவரும் ஒத்த அலைவரிசையில் இயங்கினர் என்பதை மறுக்க முடியாது.

நடிப்பின் மூலம் மறுவருகை

12 படங்களில் தன் தடத்தைப் பதித்த மகேந்திரன் 'காமராஜ்' படத்தில் அவரது தொண்டராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 'நிமிர்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'பேட்ட' ஆகிய படங்களில் நடித்தார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'புகழேந்தி எனும் நான்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். இப்படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.


திடீரென்று ஏன் மகேந்திரன் சார் நடிகர் ஆனார் என்ற கேள்வி 'தெறி' படம் ரிலீஸான போது எழுந்தது. அப்போது இயக்குநரும் நடிகருமான என் நண்பர் ஓர் அழகான பதிலைச் சொன்னார். ''சினிமா என்பது எல்லா கலைகளையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும் விழுங்கக்கூடிய ஆக்டோபஸ். மகத்தான ஆளுமைகளை, மூத்த படைப்பாளிகளை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் மகேந்திரன் சாரின் மறுவருகை நடிப்பால் நிகழ்ந்தது இளம் தலைமுறைக்கான தெரிவிப்புப் படலமாக இருக்கட்டும்'' என்றார். அது 100% ஏற்புடையது.

ஆவணப்படமும் ஆவணக் காப்பகமும்

சினிமாவுக்கென்று ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பாலு மகேந்திரா கடைசி வரை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். . ஆனால், இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரன் சார் நினைவுகூரப்படுவார், அவரது படங்களின் மூலம் மகேந்திரன் சார் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அது மட்டுமே அவருக்கான இறுதி மரியாதையாக இருக்காது. இயக்குநர் மகேந்திரன் குறித்து ஒரு ஆவணப் படத்தை தமிழ் சினிமா முன்னெடுப்பதும், ஆவணக் காப்பகத்தை நிறுவுவதுமே அவர் நமக்கு விட்டு வைத்திருக்கும் கடமைகள். படைப்பாளியை இழந்த நாம் படைப்புகளை இழக்காமல் இருக்க அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசர அவசியம்.

தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in
போலி சான்றிதழ் மூலம் வங்கிப் பணியில் சேர்ந்த விவகாரம்: 400-க்கும் மேற்பட்டவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
By DIN | Published on : 04th April 2019 02:55 AM |




இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 424 பேர் புதன்கிழமை ஆஜராகினர்.

துப்புரவு பணியாளர் மற்றும் தபால் பிரிவு பணியாளர் பணிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த 2015-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் முழுவதும் 900 பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நியமனம் செய்தது. இந்த பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இந்தப் பணிகளில் அதிக கல்வித்தகுதி கொண்ட பலர் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கு, வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், போலியான கல்விச் சான்றிதழை சமர்ப்பித்து பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் என சுமார் 400 பேர் பணியில் சேர்ந்ததும், பணி நியமனத்துக்காக அவர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது. மேலும், பணியில் சேர்ந்த பலரும் உயர்கல்வி முடித்திருப்பது தெரிந்திருந்தும், அவர்கள் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளதாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போலி சான்றிதழ்களை வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, வங்கியின் அப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரேந்திரா, தொழிற்சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய ஆசிரியர்கள், அந்த சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் 446 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணையின் போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஜவாஹர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் எம்.வி.தினகர், 442 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக வங்கியின் முன்னாள் தலைவர் நரேந்திரா உள்ளிட்ட 424 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர், 18 பேர் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை, வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்ததால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

வாட்ஸ்-அப்பில் பயனாளர்களுக்குப் புதிய வசதி!

By DIN | Published on : 04th April 2019 01:04 AM




வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்குப் புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயனாளர் விரும்பினால் மட்டுமே, வாட்ஸ்-அப் குழுவில் அவரை இணைக்க முடியும்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இணையவழி பிரசாரங்கள் பெரும் அளவில் நடந்து வருகின்றன. முக்கியமாக சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ்-அப் சமூக வலைதளத்துக்கான கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, வாட்ஸ்-அப்பின் உரிமையாளரான முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பல நபர்களை ஒரு குழுவில் இணைத்து, அவர்களுடன் உரையாடல் நடத்த வாட்ஸ்-அப் வழிவகை செய்கிறது. தற்போது வரை, அந்தக் குழுவில் யாரை வேண்டுமானாலும், அவரின் அனுமதி இன்றி இணைத்துக்கொள்ள முடியும். ஆனால், தற்போது பயனாளர்களின் தன்மறைப்பு நிலையை அதிகரிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட வாட்ஸ்-அப் குழுவில், தன்னை யார் இணைக்க முடியும் என்பது தொடர்பான தகவல்களைப் பயனாளர் முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பயனாளர் விரும்பினால் மட்டுமே குறிப்பிட்ட குழுவில் இணைய முடியும்.
இந்தப் புதிய வசதி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப் புதிய வசதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இந்த வசதியைப் பெற, வாட்ஸ்-அப்பில் அதற்குரிய மாற்றங்களைப் பயனாளர்கள் செய்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு இன்று நிறைவு

By DIN | Published on : 04th April 2019 02:55 AM |

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (ஏப்.4) நிறைவடைகிறது. கடந்த மூன்று நாள்களில் 877 மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார்அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 

முதல்நாள் கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் 283 பேர், தனியார் கல்லூரிகளில் 7 பேர் என மொத்தம் 290 பேர் மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். இரண்டாம் நாள் கலந்தாய்வில் மொத்தம் 422 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் பெற்றனர்.
மூன்றாம் நாளான புதன்கிழமை 165 இடங்கள் நிரம்பியதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...