Thursday, April 4, 2019


சென்னை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்: காவலர் கொடுத்த நூதன தண்டனை, குவியும் பாராட்டு

Published : 02 Apr 2019 17:04 IST

மு.அப்துல் முத்தலீஃப்




காவலர் எபேன், சுத்தம் செய்யும் இளைஞர்கள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு குப்பைக்கூளமாக்கி, அசுத்தம் செய்த அலட்சிய இளைஞர்களை போன் செய்து வரவழைத்த காவலர் அவர்களை திருத்த கொடுத்த நூதன தண்டனையால் பாராட்டு குவிகிறது.

பொதுவாக பொதுஇடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அது குழந்தை வளர்ப்பிலிருந்து கொண்டு வரப்படவேண்டிய ஒன்று. சமூகத்தின்மீதான அக்கறைதான் பொது அக்கறையாக மாறும்.

மத்திய அரசு சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி கொண்டுவந்த ஸ்வச் பாரத் திட்டமே புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் திட்டமாக மாறி அதை அமல்படுத்தும் நிலையில் உள்ளவர்களே கடைபிடிக்காத நிலையில் உள்ளது யதார்த்தம்.

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு மற்றும் அசுத்தம் பராமரிப்பின்மையால் சுற்றுசூழல் பாதிப்பு கண்டு கோபமடைந்த உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்து மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர்கள் ஒரு மாதம் வாக்கிங் போய் கண்காணியுங்கள் என அறிவுறுத்தியது.

சமீப காலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் வாங்கி அதை சாப்பிடாமல் முகத்தில் பூசி வீணடிக்கும் நடைமுறையும் இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வருகிறது. இதேபோன்றதொரு சம்பவம் சில நாட்களுக்குமுன் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்தது.

தனது நண்பர் பிறந்தநாளை கொண்டாட முடிவெடுத்த சில இளைஞர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் அதை கொண்டாடினர். வழக்கம்போல் கேக் ஆர்டர் செய்தனர். பெட்டி பெட்டியாக வந்த கேக்கை எலிய்ட்ஸ் கடற்கரையின் நடைபாதையில் வைத்து கொண்டாடினர்.

ஆட்டம்பாட்டம் முகத்தில் பூசிக்கொள்வது என கொண்டாட்டம் களைக்கட்டியது. பின்னர் அனைவரும் சந்தோஷத்துடன் கலைந்தனர். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற குப்பைகள், கேக் வைக்கும் அட்டைபெட்டிகள் ,கலர் பேப்பர்கள் நடைபாதை எங்கும் சிதறி கிடந்தன. அதை ஓரமாக குப்பைத்தொட்டியில் போடுவது எங்கள் வேலையல்ல என்ற நினைப்பில் இளைஞர்கள் சென்றுவிட்டனர்.

அந்த இடத்துக்கு அருகே சாஸ்த்ரி நகர் போலீஸ் பூத் உள்ளது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் எபென் கிறிஸ்டோபர், அவருக்கு அன்று டூட்டி. அங்கு வந்தவர் பூத் அருகே நடைபாதையில் சிதறிக்கிடந்த குப்பைக் குவியலைப்பார்த்துள்ளார்.

உடனடியாக காவலர் எபென், கேக் விற்பனை செய்த சம்பத்தப்பட்ட பேக்கரிக்கு தொடர்பு கொண்டு யார் கேக் ஆர்டர் செய்தது, அவர்களின் தொடர்பு எண் உள்ளிட விவரங்களை பெற்றுள்ளார். அந்த நபருக்கு போன் செய்து பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வரவைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த இளைஞரிடம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டீர்களா? என விசாரித்தபோது அவர் மறுத்துள்ளார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விடுவார்கள் என பயந்து அவர் மறுத்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அந்த இளைஞருக்கு போட்டு காண்பித்த எபென் இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது இளைஞர் ஒப்புகொண்டு, தனது நண்பரின் பிறந்த நாளுக்காக கேக்குகள் வாங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டோம் என கூறியுள்ளார்.

சரி யார் யாரெல்லாம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்களோ அவர்களை இங்கு அழையுங்கள் என கூறியுள்ளார். அந்த இளைஞரும் அழைக்க அனைவரும் வந்துள்ளனர். போலீஸ் வழக்குப்பதிவு செய்யுமோ என பயந்த அவர்களிடம் காவலர் எபென் கனிவுடன் அவர்கள் செய்த தவறை விளக்கியுள்ளார்.

அனைத்து இளைஞர்களிடமும் துடப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் சுத்தம் செய்தனர்.

சுத்தம் செய்தப்பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து பொது இடங்களையும் நமது சொந்த வீடாக கருதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். இளைஞர்களும் அதை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்து சென்றுள்ளனர்.

பாதுகாப்பு பணிதானே தமக்கு என சென்றுவிடாமல், அதையும் தாண்டி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அந்த காவலரின் செயலை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். ஸ்வச் பாரத் விருதுக்கு தகுதியான காவலர் இவர் என போலீஸார் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024